Latest News

October 17, 2013

முடிவுக்கு வந்த முடக்கம்: அமெரிக்க செனட் தீர்மானம் வெற்றி, கையெழுத்திட்டார் ஒபாமா!
by admin - 0


வாஷிங்டன்(யு.எஸ்) பதினாறு நாட்களாக அமெரிக்க அரசை நிலை குலைய வைத்த முடக்கம் முடிவுக்கு வந்தது. அரசு செலவினங்களுக்கான ஒப்புதல் மசோதா இரு சபையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 15ம் தேதி வரைக்கான அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடன் உச்ச வரம்பும் பிப்ரவரி 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



செனட் சபையில் தீர்மானம் 



ஜனநாயகக் கட்சி மெஜாரிட்டியாக உள்ள செனட் சபையில் ஆளுங்கட்சி தலைவர் ஹாரி ரீட், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கனலுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரச முறையில் தீர்மானம் இயற்றினார். செனட் சபையில் 81 :18 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்பட்டது. முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய ஜனநாயகக் கட்சி செனட்டர் சக் சூமர், எதிர்க் கட்சியினர் மீது , குறிப்பாக டீ பார்ட்டி குழுவினர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தேச நலனுக்கு ஊறுவிளைக்கும் சக்திகள் என எச்சரித்தார். அமெரிக்காவுக்கு இது உகந்த நேரம் அல்ல என வருத்தம் தெரிவித்தார்


காங்கிரஸ் சபை ஒப்புதல்




 செனட் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சற்று நேரத்தில் காங்கிரஸ் சபை அதனை வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொண்டது. டீ பார்ட்டி ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்த போதிலும், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மிதவாத குடியரசுக் கட்சியினர் ஆதரவில் தீர்மானம் வெற்றி பெற்றது. முன்னதாக குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், அவைத் தலைவர் ஜான் பேனர் இந்த தீர்மானத்தை வெற்றி பெற வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். கட்சியினர் மத்தியில் பின்னர் பேசும் போது, நாம் கடுமையான போட்டியை கொடுத்தோம், ஆனால் இந்த தடவை வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து ஒபாமாகேர் உள்ளிட்ட அரசின் கொள்கைகளை எதிர்த்து போராடுவோம் என்று கூறினார்.

பின் வாங்கிய டெட் க்ரூஸ்


சொந்த ஊரில் எதிர்ப்பு அரசு முடக்கத்துடன், கடன் உச்ச வரம்பு சிக்கலையும் சேர்த்து, பெரும் நெருக்கடிக்கு காரணமான, டீ பார்ட்டி குழுவினரின் பேராதரவு பெற்று முக்கிய தலைவராக உருவெடுத்துள்ள டெட் க்ரூஸ் இன்று அடக்கி வாசித்தார். இன்றைய சூழலில் தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுத்தால், அமெரிக்க மக்களின் ஒட்டு மொத்த கோபத்திற்கும் ஆளாகிவிடுவோம் என்று உணர்ந்த க்ரூஸ், தீர்மானத்தை, தான் தடுக்கப் போவதில்லை என்று முன்னெச்சரிக்கையாக அறிக்கை விடுத்தார். ஆனாலும் தனது கட்சி செனட்டர்கள் அமெரிக்க மக்களை ஏமாற்றி விட்டனர் என்றும் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து ஒபாமா கேர் திட்டத்திற்கு எதிராக போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது சொந்த ஊரான ஹூஸ்டனில், டெட் க்ருஸுக்கு எதிரான நிலை எழுந்துள்ளது. செனட் தேர்தலில் ஆதரவு அளித்த ஹூஸ்டன் க்ரானிக்கல் பத்திரிக்கை, டெட் க்ரூஸ் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளார் என்று வர்ணித்துள்ளது. டெட் க்ரூஸுக்கு முன்பு அங்கு செனட்டராக இருந்த ஹட்சிட்சஸ்ன்ஸ், தான் தொடர்ந்து செனட்டராக இருந்திருந்தால், வேறு விதமாக அணுகியிருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் பல குடியரசுக்க் கட்சி தலைவர்களும் டெட் க்ரூஸுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். கட்சிக்குள் டீ பார்ட்டியினரின் ஆதிக்கமும், பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ஒபாமா கையெழுத்து 

இரு சபையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதிபர் ஒபாமாவின் ஒப்புதலுக்கு அனுப்பட்டது. மின்னல் வேகத்தில் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து ஒபாமா கையெழுத்திட்டவுடன், அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது. கடன் நெருக்கடிக்கும் பிப்ரவரி 7 வரை அவகாசம் கிட்டியது. இரு கட்சியினரும் தொடர்ந்து பட்ஜெட் மற்றும் நீண்டகால கடன் உச்ச வரம்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்த முடிவுசெய்துள்ளனர். இரு கட்சியினருக்கும் பாராட்டுகளை தெரிவித்த அதிபர் ஒபாமா, அடுத்தடுத்த பிரச்சனையான பட்ஜெட், குடியுரிமை சட்டம் உள்ளிட்டவைகளை இணைந்து செயல்பட்டு விரைவில் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்காலிகம்தான்... 


ஒரு வழியாக , பதினாறு நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அமெரிக்க அரசு பெரும் நெருக்கடியிலிருந்து தப்பி உள்ளது. ஆனால் இது தற்காலிகம்தான். ஜனவரி 15ம் தேதி மற்றும் பிப்ரவரி 7ம் தேதிக்குள் பட்ஜெட் மற்றும் கடன் உச்ச வரம்புக்கான இறுதித் தீர்மானம் நிறைவேறாவிட்டால், மீண்டும் ஒரு சிக்கல் காத்திருக்கிறது.






« PREV
NEXT »

No comments