கனடா உறங்கா விழிகள் அமைப்பின் அனுசரணையுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புலமைப் பரிசில் பரிசளிப்பு நிகழ்வுகனடா உறங்கா விழிகள் அமைப்பின் நிதி உதவியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால் கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (2013.10.13) கலை 10.30 மணியளவில் இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு த.தே.ம.மு வின் கல்விமேம்பாட்டுப் பிரிவுப் பொறுப்பாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு.செல்வராசா இரவீந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் திரு.மரியாம்பிள்ளை இக்னேசியஸ் அவர்களும், ஓய்வுபெற்ற ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான திரு.சி.அ.யோதிலிங்கம், கிளநொச்சி மாகா வித்தியலய அதிபர் திரு பங்கயற்செல்வன் அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளும், வடமாகாணத்தில் முன்னிலை பெற்ற இரண்டு முஸ்லீம் மாணவ, மாணவிகளும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் நினைவு விருது இவ்விழாவின் சிறப்பு அம்சமாக அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலப் பரீட்சையில் 1ம் இடம் பெற்ற மாணவனான யாழ் ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாசாலையத்தைச் சேர்ந்த செல்வன் பரமநாதன் தனுராஜ் அவர்கள் மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ஞாபகார்த்த நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருதினை ஆண்டு தோறும் தமிழ்த் தேசத்தில் தமிழ் மொழி மூலம் இப் பரீட்சையில் தோற்றி அகில இலங்கை ரீதியில் முதல் நிலை பெறும் மாணவருக்கு வழங்குவதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்திருக்கின்றது. இவ்விழாவில் பேராசிரியர் க.கந்தசாமி, அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் திரு. மரியாம்பிள்ளை இக்னேசியஸ். கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி.சிவகரன் காஞ்சனா , கிளிநொச்சி மகா வித்தியாலையத்தின் அதிபர் திரு.அரசரத்தினம் பங்கயற்செல்வன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் பிரிவுத் தலைவியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி.பத்மினி சிதம்பரநாதன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் திரு.சிவபாதம் கஜேந்திரகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நன்றியுரையினை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. செ.கஜேந்திரன் நிகழ்த்தினார். இவ் விழாவிற்கு கனடாவில் இயங்கும் 'உறங்காவிழிகள்' என்னும் தொன்டு அமைப்பு நிதி உதவியினை அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அடுத்து வரும் வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவும் இத்துடன் இணைக்கப்படுகின்றது.
நன்றி
விஸ்வலிங்கம் மணிவண்ணன்
ஊடகப்பேச்சாளர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
No comments
Post a Comment