Latest News

October 14, 2013

தீர்வு கிடைத்திருந்தால் கூட்டமைப்பின் தேவை இருந்திருக்காது: கஜேந்திரகுமார்
by admin - 0

'யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல் தீர்வு கிடைத்திருந்தால் தமிழ் தேசிய
கூட்டமைப்பு அரசியல் செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காது' என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (14) நண்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில், 'தமிழ் தேசிய மக்கள் முன்னணி வடமாகாண
சபை தேர்தலை புறக்கணித்துடன் வடமாகாண சபை தேர்தலை மக்களின் மனச்சாட்சிக்கு விட்டிருந்தது. வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மிகப்பெரிய அளவில் பங்குபற்றி தெளிவான ஒரு செய்தியை வெளிக்காட்ட முயற்சி எடுத்துள்ளார்கள். போர் முடிவுற்று நான்கு வருடங்களில் பல நெருக்கடிகளில் இருந்த போதிலும்
தமது நிலைப்பாட்டினை ஆதரித்து அரசியல் அபிலாஷைகளில் ஒரு அங்குலம் கூட விலகாமல் உறுதியாக இருந்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் கொடுத்த ஆணையை நிறைவேற்றவும், தமிழ் மக்களினை அரசியலில்
நேரடியாக பங்களிப்பு செய்யவும் இடமளிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13ஆவது சீர்திருத்தத்தினை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாக
ஏற்றுக்கொண்டு ஒற்றை ஆட்சி முறையையும் அங்கீகரித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒற்றை ஆட்சி, அதிகாரப் பகிர்வு, சுயநிர்ணயம் ஆகிய
மூன்று முரண்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், மக்கள்
எதிர்பார்த்து வாக்களித்ததை விட தற்போது நடப்பது வேறாகவே இருக்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தினை பகிரங்கப்படுத்திய சம்பவங்களாக 1972ஆம் ஆண்டு இரண்டாவது அரசியல்
சாசனம், தந்தை செல்வநாயகம் காங்கேசன்துறை தொகுதியை இராஜினாமா செய்தமை, 1976ஆம்
ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் போன்ற விடயங்கள் காணப்பட்டன. இவையே தமிழீழம் என்ற விடயத்தினை உருவாக்கியது. போர்க்குற்றங்களை இரண்டு தரப்புக்களும் புரிந்துள்ளபடியால், இரண்டு தரப்புக்களிடமும் நியாயமான
விசாரணை மேற்கொள்ள வேண்டும். இங்கு இரண்டு தரப்பினர்களுடைய நியாயத்தினை பார்க்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. ஒரு இனத்தின் சுய பாதுகாப்பு அரசியலாக மாறுகின்றது. தமிழ் தேசத்தினை இல்லாது ஒழிக்க பிரித்தானியா முயற்சிகளை மேற்கொண்ட போது தமிழ் தேசத்தின் அங்கீகாரம் மட்டும் தான் மிஞ்சியது. போர் நடைபெறும் காலங்களில் எந்த நீதியும், நியாயமும் கிடைக்கப் போவதில்லை. மக்கள் தங்களது உண்மையான நிலைப்பாட்டினை அணிதிரண்டு வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிடின் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் நின்று பிடிக்கலாமா என்று யோசிக்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் நேரடியாக அரசியலுக்கு வரும் சூழலை உருவாகி மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல்
எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு புலம்பெயர் தமிழர்களும், தமிழகத்தில் இருக்கும் தமிழர்களின்
செயற்பாடுகளும் மிகவும் முக்கியமானவை' என அவர் மேலும் கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments