புதுடெல்லி: வருகிற 2016 ஆம் ஆண்டு தனக்கு 70 வயதாகும்போது அரசியலிலிருந்து ஓய்வு பெற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்ததாகவும், இதனைத்
தொடர்ந்தே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளுருமான ரஷீத் கித்வாய், ' 24 அக்பர்
சாலை' என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்திலேயே இத்தகவல்
இடம்பெற்றுள்ளது. அரசியலிலிருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை தாம் கடைசியாக
கொண்டாடிய தனது பிறந்த நாளன்று, அதாவது கடந்த 2012 ஆம்
ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதியன்று, கட்சியின் மூத்த தலைவர்களிடம்
சோனியா தெரிவித்தார். அவரது இந்த முடிவை கேட்ட கட்சியின் மூத்த
தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர், அதனைத் தொடர்ந்து அவர்கள்,
"அப்படியானால் ராகுல் காந்தியை தலைவராக்குங்கள்!" எனக் கேட்டுக்கொண்டனர். அதுமட்டுமல்லாது பிரதமர் மன்மோகன் சிங்கும், கட்சியின் பொதுச் செயலாளரான ராகுல் காந்தியிடம் மத்திய அமைச்சரவையில் சேருமாறு வலியுறுத்தி உள்ளார். ஆனால்
அதனை ஏற்க ராகுல் மறுக்கவே, "ஒன்று கட்சியில் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்...அல்லது அமைச்சரவையிலாவது சேருங்கள்.
கட்சியிலோ அல்லது அமைச்சரவையிலோ பொறுப்பேற்காமல் சரியான அதிகார மையமாக நீங்கள் இல்லாமல்
இருப்பது கட்சியையும், அரசையும் பாதிக்கும்" என்று கூறியுள்ளார். அதன்பின்னரே இந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கட்சியின்
'சிந்தன் சிவிர்' மாநாட்டில் காங்கிரஸ் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்" என்று அந்த புத்தகத்தில் மேலும்
கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment