Latest News

October 14, 2013

முள்ளியவாய்க்காலில் சிவாஜிலிங்கம் சத்தியபிரமாணம்!
by admin - 0

வடமாகாணசபை தேர்தலில் ரெலோ சார்பில் போட்டியிட்டு யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற ரெலோவின் அரசியல் பிரிவுத் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று காலை 10.30 மணிக்கு முள்ளியவாய்க்கால் சேதமடைந்த பொது நோக்கு மண்டபத்திற்கு முன்னால் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தனது கட்சி ஆதரவாளர்களுடன் இன்று காலை முல்லைத்தீவுக்குச் சென்ற சிவாஜிலிங்கம் வைத்திய கலாநிதி கே.மயிலேறும் பெருமாள் முன்னிலையில் வடமாகாணசபை பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டார். இது தொடர்பில் சிவாஜிலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, வடமாகாணசபையை நான் எதிர்க்கவில்லை. வடமாகாணசபையில் அமைச்சு நியமனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த தன்னிச்சையான தீர்மானங்களை எதிர்த்தே முதலமைச்சர் முன்னிலையில் இடம்பெற்ற பதவிப்பிரமாணத்தை புறக்கணித்தேன். இன்று மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை மதித்து முள்ளியவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துள்ளேன். எமது மக்களின் விடிவுக்காக போராடிய 50,000 மாவீரர்களினதும் யுத்தத்தின் போது இறந்த மக்களினதும் அர்பணிப்புக்களினாலும் தியாகங்களினாலுமே நாம் இன்று இந்த வெற்றியைப் பெற்றோம். சர்வதேசம் இன்று எம் மீது கவனம் செலுத்துவதற்கும் இதுவே காரணம். எனவே மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை பயன்படுத்தி சிறிலங்கா அரசுக்கு எமது பிரச்சனையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுப்பேன். மாறாக சிறிலங்கா அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தாத பட்சத்தில் சர்வதேசத்திடம் முறையிட்டு ஜக்கியநாடுகள் ஸ்தாபனம் ஊடாக தீர்வைப் பெற முயற்சிப்பேன் எனவும் முள்ளியவாய்கால் மண்ணில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, வடமாகாணசபை அமைச்சு நியமனம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் 9 உறுப்பினர்கள் பதவிப்பிரமாணத்தை புறக்கணித்து இருந்ததுடன் அவர்கள் இன்று முள்ளியவாய்காலில் பதவிப்பிரமாணம்ட செய்வதாக இருந்த நிலையில் மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கு இணங்க அதனை கைவிடுவதாக நேற்றைய தினம் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த நிலையிலேயே இன்று சிவாஜி பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
« PREV
NEXT »

No comments