Latest News

October 02, 2013

முகமூடி கிழிந்த மகிந்தாவும், முகத்தில் குத்திய தமிழர்களும்
by admin - 0

 நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்ற அமோக வெற்றியானதை சாதாரணமாக யாரும் கருத முடியாது! தமிழர்கள் மட்டுமல்ல சர்வதேசமும் ஆர்ச்சரியப்படுகின்ற எதிர்பார்க்காத மிகப்பெரிய வெற்றிதான். இங்கு எதிர்பார்க்காத வெற்றி என்பது, இனவாத இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் ஒடுக்கப்பட்டு நீதி மறுக்கப்பட்டு சுதந்திரமாக செயற்பட முடியாத தமிழர்கள்…
இலங்கை அரசிற்கு எதிராக செயற்பட மாட்டார்கள் என நம்பி இருந்த அனைவரின் எண்ணப்பாடுகளையும் பொய்யாக்கிது என்பதுதான் எதிர்பார்க்காத வெற்றியாகும்..! இந்தளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கும் என்பதை யாருமே கணிப்பிடவும் இல்லை! கணிப்பிட முடியாத அளவிற்கு இலங்கை அரசாங்கமானது தேர்தல் நெருங்க நெருங்க தினமும் வெவ்வேறு வடிவங்களில் பதற்றமான சூழ்நிலைகளையும், பரபரப்பான செய்திகளையும் வஞ்சகம் இல்லாமல் உருவாக்கி விதைத்து வைத்திருந்தது.
யாருடைய உயிரும் பறிக்கப்படலாம, யாரும் தாக்கப்படலாம், போட்டியாளர்கள் யாரும் கொல்லப்படலாம் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்று பதற்றத்துடன் தாயகப் பகுதியில் இருந்த தமிழர்கள் ஒரு பக்கமும்… புலத்தில் வாழும் தமிழர்களோ தேர்தல் நடந்து முடியும் வரை தாயகத்தில் வாழும் தம் உறவுகளுக்கு எந்தவிதமான விபரீதங்களும் நடந்து விடக்கூடாதென அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டி மன்றாடியபடி இன்னொரு பக்கமும் இருந்ததனாலும், கடந்த காலங்களின் தேர்தல் வெற்றிகள் தந்த படிப்பினைகளாலும் இந்தத் தேர்தல் வெற்றிகள் எவ்வாறு இருக்கும் என யாரும் கணிக்கவும் இல்லை, சிந்திக்கவும் இல்லை!
இப்படி ஒரு இறுக்கமான, பதற்றமான சூழ்நிலையில் பல அடிபட்ட வலிகளோடு கலக்கத்துடனும், துன்பத்துடனும், சுகமாய் பிரசவித்த குழந்தையாகத்தான் இந்தத் தேர்தல் வெற்றியை யாரும் கருதமுடியும்! தமிழர்களின் துணிச்சலுக்குப் பிறந்த இந்த வெற்றிக் குழந்தையை கூட்டமைப்பினர் வளர்க்கும் விதத்தில்தான் தமிழர்களின் ஒட்டு மொத்த எதிர்காலமும் இருக்கிறது!!!
இந்த மாகாணசபைத் தேர்தலின் வெற்றியில்தான் இலங்கை அரசும், சர்வதேசமும் தமிழர்களின் மனநிலையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தமிழர்களின் நியாயமான போராட்டம ் மீதும், இனவாத இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சி மீதும் சர்வதேச சமூகத்தின் தெளிவற்ற பார்வைதான் முள்ளிவாய்க்காலின் இறுதி வரை வந்து ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களின் உயிர்களை பலி வாங்கியது! இந்தத் தேர்தல் வெற்றியையும் கடந்த கால சம்பவங்களோடும், சூழ்நிலைகளோடும் ஒப்பிட்டு இலங்கை அரசும், சர்வதேசமும் நோக்குமானால்… இலங்கையிலும், தமிழர்கள் வாழும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழர்களால் பாரிய பின் விளைவுகளை இலங்கை அரசும், சர்வதேசமும் சந்திக்க நேரிடும்!
விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு சென்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள், வன்னியில் விடுதலைப் புலிகள் பெரும் பலத்துடன் இருந்த போதும் தாங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற வரை அங்குள்ள இராணுவத்தினருக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் பயந்து… சில காலங்களில் யாழ்ப்பணத்தை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அது வரையும் சிலர் தேர்தலில் வாக்களித்தும், சிலர் வாக்களிக்காமல் தவிர்த்தும் வந்தார்கள்.
தம்முடைய பாதுகாவலராகவும், ஏக பிரதிநிதிகளாகவும் விடுதலைப் புலிகள் அருகில் இருந்த போது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு யாழ்ப்பணத்தில் இராணுவத்தின் பிடிக்குள் இருந்து கொண்டு சுதந்திரமாக அந்த மக்களால் கடந்த காலங்களில் வாக்களிக்க முடியவில்லை. அன்றைய காலங்கள் அவ்வாறானதொரு பாதுகாப்பற்ற, பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கியிருந்தது.
2009 ஆம் ஆண்டுக்குப் பின் தம் பாதுகாவலரான விடுதலைப் புலிகள் இல்லாத போது… தங்களுக்கான ஒரு பாதுகாப்பான உயரிய தலமை இல்லாமல் தமிழ் மக்கள் தனித்து விடப்பட்டார்கள். சர்வதேசமும் எதையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! தன்னைக் கேட்பார் யாரும் இல்லையென இனவாத இலங்கை அரசாங்கமும், அதன் முதுகெலும்பில்லாத இராணுவமும் தாம் நினைத்த கொடூரங்களையெல்லாம் அப்பாவி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள். இனி யாருமே எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற திமிரும், வீரமிக்க விடுதலைப் போராட்டத்தை அழித்ததாக நினைத்து…
தமிழர்கள் எதுவும் செய்யத் துணியமாட்டார்கள் என்றும், அளவுக்கு அதிகமான கற்பனைகளால் மிதந்து தன் நிலைகளை மறந்து “பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிய” கதையாக இனவாத இலங்கை அரசும், முதுகெலும்பில்லாத இராணுவமும் முருங்கை மரம் ஏறியது! ஒவ்வொரு தசாப்த காலங்கள் மாறும் போதும் மக்களின் வாழ்வியல் முறைகளும் மாறும் என்பதை இலங்கை அரசு மறந்து விட்டது போல… எதற்காக தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதைக் கூட இப்போதுள்ள இலங்கை அரசு அதீத மிதப்புத் தனத்தில் மறந்து விட்டது! தமிழர்கள் எல்லாம் அடிமைகள் என நினைத்து அவர்களின் வாழ்வியல் சுதந்திர உரிமைகளை திரும்பவும் நசுக்க முனைகிறது!
அந்த தமிழ் மக்களில் இருந்துதான் விடுதலைப் புலிகள் உருவாகினார்கள் என்பதையும், புலிகளின் போராட்ட நெறிமுறைகளுக்குள் வாழ்வியலைப் பழகி போராடி வீரத்தோடு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தன்மானத் தமிழர்கள்தான் இவர்கள் என்பதையும் மறந்து விட்டுத்தான், மறுபடியும் யுத்தத்தின் பின் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தல் வரையும் இனவாத இலங்கை அரசும், முதுகெலும்பில்லாத இராணுவமும், நக்கிப்பிழைக்கும் ஒட்டுக்குழுக்களும் தமிழர்களை திரும்பவும் கொடுமைப்படுத்திக் கொண்டு வந்தது. சர்வதேசத்திடம் கையேந்தியும், சர்வதேசமும் கண்டு கொள்ளவில்லை!
யுத்தம் முடிவுற்ற பின்னர் தமிழர்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும் என்று சர்வதேசத்திடம் பல ஒப்பந்தங்களைப் போட்டு, திட்டங்களையும் அமைத்து, பல அமைப்புக்களை உருவாக்கி… எல்லா உதவிகளையும் பெற்றுக் கொண்டு தனது சிங்கள மக்களுக்கும், தன் குடும்பத்தினருக்குமே பங்கு போட்டுக் கொண்டது மகிந்தா அரசு!
சர்வதேச நாடுகளும ் தமிழர்களைப் பார்க்கும் போது மட்டும் பார்வை இழந்து, செவிடாகி, ஊமையாகி விடுகிறது! இலங்கையில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை மாதக்கணக்கில் பல வகையான எரிகுண்டுகள், நச்சுக்குண்டுகள், இரசாயணக்குண்டுகள் வீசி துடிக்கத் துடிக்க எரித்தும், துளைத்தும், சிதைத்தும், உருக்கியும் கொன்றழித்த போது, மானங்கெட்ட வல்லரசுகள் இந்தியாவின் உதவியுடன் இலங்கையோடு விபச்சாரம் செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால், ஒரு வேடிக்கை என்னவென்றால்… சிரியாவில் சுமார் ஆயிரத்து ஐநூறு பொதுமக்கள் கொல்லப்பட்டதை மட்டும் வைத்துக் கொண்டு சிரியா மீது போர் தொடுக்க போகிறார்களாம் சர்வதேச விபச்சார நாடுகள்..!!
(என்னடா உலகம் இது?)
இது ஒரு புறம் இருக்க…
இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்கின்ற ஓரே நாடு என்றால், ஏன் அந்த இராணுவத்தில் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை, இலங்கை காவல்துறையிலும் தமிழர்கள் இல்லை… தனி ஆட்சி மொழி, தனிச் சிங்களச்சட்டம் மற்றும் அரசு, அரசியல், மருத்துவம், கல்வி, வேலை போன்ற பல முக்கியமான துறைகளில் சிங்களவர்களுக்குத்தான் முதல் நிலை. இவ்வாறு பல அதிகாரங்கள் சிங்களவர்களின் கையில் இருந்தது, இந்த அதிகாரங்களால் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கப்பட்ட போதுதான், தமிழர்கள் தமது உரிமைகளுக்காக சுதந்திர விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
இரத்தம் சிந்தி, பல உயிர்களை இழந்து தமக்கான ஒரு சுதந்திர தேசத்தையே உருவாக்கி ஐக்கிய நாடுகள் சபை அங்கிகரிக்காத ஒரு குறையுடன் மற்ற எல்லாத்துறைகளையும் கட்டியமைத்து சர்வதேச உதவிகளின்றி தனி அரசையே நடத்தி வந்தார்கள்.தமிழர்களின் போராட்ட வடிவங்களையும், வளர்ச்சியையும் சகித்துக் கொள்ள முடியாத சர்வதேசமும், இந்தியாவும் இலங்கையுடன் சேர்ந்து தமிழர்களின் நீதியான விடுதலைப் போராட்டத்தை திவீரவாதப் போராட்டமாகச் சித்தரித்து ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை கொன்றழித்து இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட விதவைகளை உருவாக்கி, முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட அனாதைக் குழந்தைகளை உருவாக்கி, இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்களை இழந்த அங்கவினர்களை உருவாக்கி, என்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து இறந்தவர்களைத் விட மொத்தத்தில் மூன்று இலட்சத்திற்கு மேலான தமிழ் மக்களை யுத்தத்தில் நேரிடையாக பாதிப்படையச் செய்து விட்டு…
2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சமாதான காலத்திலும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும்,மீள்வாழ்விற்காகவும் சர்வதேசத்தின் உதவிகளை சர்வதேச நாடுகளின் முன்னிலையில் உருவாக்கப்பட்ட பல ஆரோக்கியமான ஒப்பந்தங்கள் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் இழுத்தடிப்புச் செய்து ஏமாற்றி கோர யுத்தத்தினை தமிழ்மக்கள் மீது திணித்து கோரத்தாண்டவம் ஆடிய பின்னும் கடந்த நான்கு வருடங்களாக அந்த அப்பாவி மக்களுக்கு மீள்வாழ்வு அளிக்காமல் வாக்குறுதிகளை காற்றினில் பறக்க விட்டு பழையபடி ஆரம்பித்திற்கே போக எத்தனித்துக் கொண்டிருந்த போதுதான் தமிழர்கள் பொறுமையிழந்து விழிப்படைந்தார்கள்!
விடுதலைப் புலிகள் இல்லையென்றாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்று நினைத்துத்தான், போரின் பின் இலங்கை அரசாங்கத்தின் மாறாத போக்குளை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலும்தான் வேறு வழியே இல்லாமல் துணிச்சலாக மகிந்த அரசிற்கு எதிராக வாக்களித்தார்கள்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மூன்று இலட்சம் தமிழ்மக்களை காப்பாற்றியதாக சர்வதேசத்தை நம்ப வைத்து கதாநாயகனாக நாடகமாடிய மகிந்தாவின் முகமூடியைக் கிழித்து அவருக்கு எதிராக தமிழர்கள் வாக்களித்து “எப்போதுமே எம் பாதுகாவலர்கள் விடுதலைப் புலிகள்தான்” என்பதை மீண்டும் ஒருமுறை இனவாத இலங்கை அரசிற்கும், கருணையற்ற சர்வதேசத்திற்கும் தமிழர்கள் உறைக்க உணர்த்தியுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள், செயல்முறைகளில் கவரப்பட்டு யாரும் ஓட்டுப் போடவில்லை. (கடந்த காலங்களில் கூட்டமைப்பினரை மக்களுக்காக எதுவும் செய்ய அரசு நிதிவளங்கள் கொடுத்து உதவவில்லை, ஆனால், இம்முறை அப்படியில்லை ஒட்டுமொத்த தமிழர்களின் துணிச்சல் மிக்க வாக்குகள் இருக்கிறது. அமைதியாக இருந்து விட முடியாது) ஆனால், இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஒருவரை யாரும் எளிதில மறந்து விட முடியாது, அவர்தான் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் திரு.எழிலன் அவர்களின் மனைவி ஆனந்தி! ஆனந்தியின் துணிச்சல் மிக்க பேச்சுக்களும் போரின் பின் பாதிக்கப்பட்டு ஏமாந்து போன மக்களுக்கு ஒரு துணிவைக் கொடுத்தது.
தமிழ் மக்கள் கடமைக்கு ஓட்டுப்போடவில்லை தங்களின் உரிமைகள் விடுதலை பெற வேண்டும் என்றும், தொடர்ந்து வரும் அடிமை வாழ்வு உடைத்தெறியப்பட வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காகத்தான் திரண்டு வந்து வாக்களித்தனர். கூட்டமைப்பினரும் கடந்த காலங்கள் போல் இம்முறை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு சர்வதேசத்தின் துணை கொண்டு இலங்கை அரசை பணிய வைத்து தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.
 வல்வை அகலினியன் 
« PREV
NEXT »

No comments