Latest News

October 01, 2013

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்
by admin - 0

நடிப்பு: ஆர்யா, நயன்தாரா, ஜெய், சந்தானம், நஸ்ரியா
இசை: ஜிவி பிரகாஷ்குமார் : ஏஆர் முருகதாஸ் 
இயக்கம்: அட்லீ 


ஒவ்வொரு ஜோடியின் காதலுக்கும் அவர்களின் பிரிதலுக்கும் காரணம் என்று தேடினால் சில பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம். அது ஒரு காதல் தோல்விக்குப் பின் வரும் அழுத்தமான காதல்தான் இந்த ராஜா ராணியின் கதை.

ஆர்யாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள், பெற்றோர் விருப்பத்தின்படி. ஆனால் இருவருக்கும் ஏற்கெனவே வெவ்வேறு காதல் பின்னணி இருக்கிறது. அந்தக் காதல்களிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிப்பவர்கள், வேறு வழியின்றி நிரந்தரமாகப் பிரிய முடிவெடுக்கிறார்கள். பிரிந்தார்களா.. என்பது, கொஞ்சம் இழுவையான க்ளைமாக்ஸ் (அரை மணி நேரம் பாஸ்!). மவுன ராகத்தின் சாயல், குறிப்பாக ஜெய்யின் பாத்திரப் படைப்பு, இருந்தாலும், திரைக்கதையை ஜோடித்த விதத்தில் மனதில் இடம்பிடிக்கிறது ராஜா ராணி. குறிப்பாக சந்தானம் படத்தின் ப்ளஸ்களில் முக்கியமானவர்! படத்தில் இரு காதல் ஜோடிகள். ஆர்யா - நஸ்ரியா, ஜெய் - நயன்தாரா. இரு ஜோடிகளுமே காதல் காட்சிகளில் மகா இயல்பாய், அனுபவித்து நடித்திருக்கிறார்கள்.

ஜெய்யின் பாத்திரம் எப்படிப்பார்த்தாலும் மவுன ராகம் கார்த்திக்கை நினைவுபடுத்துவதை மறுப்பதற்கில்லை. இத்தனைக்கும் இரு பாத்திரங்களின் அடிப்படைத் தன்மையிலும் வேற்றுமைகள் இருக்கவே செய்கின்றன. வயது முப்பதைத் தாண்டினாலும், நயன்தாராவை ஏன் இன்னும் இளம் நடிகர்கள் துரத்துகிறார்கள் என்பதற்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது (ஆனாலும் அநியாயத்துக்கு ஓவர் மேக்கப்!) நஸ்ரியாவின் இளமையிலும் அழகிலும் சலனப்படாத இளைஞர்கள் யாரும் இருக்க முடியாது. அதனாலேயே அவர் நடிப்பில் கோட்டை விட்டாலும் 'கண்டுக்காதபா... கண்ணுக்குக் குளிர்ச்சியா பாத்துட்டு வா' என்கிறது ரசிக மனசு! சத்யராஜுக்கு இன்னொரு ஜென்டில்மேன் அப்பா வேடம். நிறைவாகச் செய்திருக்கிறார்.

சத்யன் கிச்சு கிச்சு மூட்ட முயன்று தோற்றாலும், சந்தானம் அவருக்கும் சேர்த்து சிரிக்க வைத்துவிடுகிறார். குறிப்பாக இயல்பாய் வந்து விழும் அந்த காமெடி பஞ்ச்கள்! க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க அந்த முடிவு என்ன என்பது நமக்கே தெரிந்து போகிறது. தமிழ் சினிமாவில் கசந்த மனங்கள் மீண்டும் சேருமிடம் ஒன்று ரயில் நிலையம் அல்லது விமான நிலையம்! தொழில்நுட்ப ரீதியாக படம் முதல் தரம். ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்தை ஜொலிக்க வைக்கிறது. ரொமான்ஸுக்கு புது நிறம் தந்திருக்கிறார். ஜிவி பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையில் நிறைய பழைய படங்களின் சாயல்.

பழக்கப்பட்ட சென்டிமென்ட் பாதையில் முதலில் பாதுகாப்பாக பயணிப்போம் என்று இந்தக் கதையை தேர்ந்தெடுத்திருப்பார் போலிருக்கிறது அட்லீ. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீளும் படத்தின் காட்சிகளை இன்னும் கூடக் குறைத்திருந்தால் படத்தின் மைனஸ்கள் தெரிந்திருக்காது. ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில், பார்வையாளர்களை அலுப்பின்றி வைத்திருக்கும் வித்தை முதல் படத்திலேயே கைவந்திருக்கிறது அட்லிக்கு. ரசிக்கத்தக்க ராஜா ராணிதான்!
« PREV
NEXT »

No comments