Latest News

October 19, 2013

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு தண்ணீர் சிக்கலில்
by admin - 0

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக்
குடிநீர் வழங்கும் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கள்
குறித்து கவனம் செலுத்தப்படாவிட்டால், யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்
வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உடன்பாடு இல்லாத காரணத்தினால் இந்தக் குடிநீர் வழங்கும்
திட்டத்திற்கான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகின்ற நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் ஊர்
முக்கியஸ்தர்களும் இரணைமடுக்குளத்தின் கிளிநொச்சி – யாழ்ப்பாணம்
குடிநீர் விநியோகத் திட்டத்தில் தமக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கள் மற்றும்
சந்தேகங்கள் குறித்து வட மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்,
முக்கியஸ்தர்களிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். இந்தக் குடிநீர்த்திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை அதிகாரி எஸ்.எம்.குரூஸ் மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ் இரணைமடுக்குளத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான
பொறியியலாளர் பாலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். விவசாய அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தத் திட்டத்தினால்
ஏற்படப்போகின்ற விவசாயச் செய்கைக்கான பாதிப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர்த்தேவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும், இந்தக்குடிநீர்த் திட்டம் தொடர்பிலான
ஒப்பந்தத்தில் விவசாயிகளைப் பாதிக்கத்தக்க வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக
அவர்கள் கருதும் விடயங்களையும் சுட்டிக்காட்டி, இந்த சிக்கல்களுக்கு வடமாகாண சபை நல்லதொரு தீர்வைக்காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். குடிநீர்த்திட்டம் தொடர்பான விபரங்கள்,
இதுவரையில் நடைபெற்றுள்ள வேலைகளின் நிலைமைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதனையடுத்து, இந்த விடயம் குறித்து வடமாகாண சபை செயற்படத் தொடங்கியதும் உடனடியாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்
என்று வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments