Latest News

October 05, 2013

என் பிணத்தின் மீது மன்மோகன் பறந்து போகட்டும் - தியாகு ஆவேசம்!
by Unknown - 0

மன்மோகன் அரசு, இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும். இவ்வாறு வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு  பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ள, தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆவேசமாக தெரிவித்தார்.

வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு, கொமன்ெவெல்த் மாநாட்டுக்கு எதிராக பட்டினிப் போராட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி இருக்கிறார் தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு.


மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே பட்டினிப் போராட்டம் நடத்துவதாகத்தான் திட்டம். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறை வழக்கம் போல் அனுமதிக்க மறுத்துவிட்டது.
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, நிபந்தனைகளுடன் வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கிடைத்தது.
அங்கும் பதாகைகளை வைக்க விடாமல், ஒலிபெருக்கி, விளக்குகளைப் பொருத்த விடாமல் ஏகப்பட்ட கிடுக்கிப்பிடிகள். போராட்ட இடத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் உளவு அதிகாரிகள் கண்காணித்தனர்.
போராட்டக் களத்தில் இருந்த தியாகு உணர்ச்சி பொங்க நம்மிடம் பேசினார்.
என்னுடைய போராட்டம் பற்றிய முதல் செய்தி 'தேதி குறித்து விட்டார் தியாகு’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில்தான் வெளிவந்தது.
செப்டம்பர் 26-ம் தேதி திலீபன் நினைவுநாளில் இந்தப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், காவல்துறை இடமளிக்க அனுமதி மறுத்ததாலும், போராட்டக் களத்துக்கு ஏற்றவாறு எங்களைத் தயார்படுத்திக் கொள்ள போதிய அவகாசம் தேவைப்பட்டதாலும், போராட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்குவோம் என்று தீர்மானித்தோம். அதுபோலவே, நான் விரும்பிய திருவள்ளுவர் சிலை அருகில் இந்தப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.
வெற்றி அல்லது வீரச்சாவு என்பது வெற்று முழக்கம் அல்ல. இது உறுதிப்பாட்டின் அடையாளம். இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இருக்கின்றனர். அந்த உறுதிப்பாட்டைத்தான் முழக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.
ஒன்று, உண்ணாவிரதம் இருந்து போராடி இந்தக் கோரிக்கையை அடைவோம். அல்லது, உயிரைக் கொடுத்தேனும் இந்தக் கோரிக்கையில் வெற்றி பெறுவோம் என்று தெளிவாகவும் உறுதியாகவும் களம் இறங்கி இருக்கிறேன்.
நான் போராடுவது மட்டும் போராட்டம் அல்ல, இதை மையப் புள்ளியாகக் கொண்டு தமிழக மாணவர்கள், அரசு இயக்கங்கள், பொதுமக்களும் போராடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மாணவர்கள், பெப்ரவரியில் போராடியது போல மீண்டும் அக்டோபரில் போராடத் தொடங்குவார்கள். முன்பைக் காட்டிலும் கூடுதல் தெளிவோடு, கூடுதலான உறுதிப்பாட்டோடு, அறவழியிலும் அமைதியான முறையிலும் போராட்டம் நடைபெறுவதற்கு என்னுடைய பட்டினிப் போராட்டம் ஓர் உந்துதலாக அமையும்.
தமிழ் மக்கள், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுப்பக்கூடிய ஒன்பது கோரிக்கைகளை நான் முன்வைத்து இருக்கிறேன்.
கொமன்வெல்த் அமைப்பு நாடுகளில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். கொழும்பில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. மீறி நடத்துமானால், இந்தியத் தலைமை அமைச்சரோ, உலகின் கொமன்வெல்த் அமைப்பின் அரசுத் தலைவர்களோ அந்த மாநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
கனடா நாட்டின் பிரதமர் அந்த நாட்டில் வாழக்கூடிய ஐந்து லட்சம் தமிழர்களுக்கு மதிப்புக் கொடுத்து, அவர்களது உணர்வுகளை ஏற்று இந்த மாநாட்டுக்குச் செல்வதில்லை என்று தீர்மானித்து இருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசின் அயலுறவுத் துறை நாடாளுமன்றக் குழுமம், பிரதமர் டேவிட் கமரூன் இந்த மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இத்தாலி நாடாளுமன்ற விவாதத்திலும் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு சனல் 4 வெளியிட்டிருக்கும் ஆவணப் படங்களே சான்றாக உள்ளன.
டப்ளிங் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நமக்கு முன்னால் இருக்கிறது.
ஐ.நா.பொதுச் செயலாளர்கள் அமைத்த குழு 1,000 பக்கங்களில் குற்றச்சாட்டுகளைக் கொடுத்து இருக்கிறது.
நோர்வேயின் அறிக்கை இருக்கிறது.
அமெரிக்க அயலுறவுத் துறையின் அறிக்கை இருக்கிறது.
ஐ.நா. மனிதஉரிமை மன்றத்தின் ஆணையர் நவநீதம்பிள்ளை, 'இந்த அரசு மனித உரிமைகளை மதிக்கவில்லை’ என்று சிங்களத் தலைநகரில் உட்கார்ந்தே சொல்லியிருக்கிறார்.
இதை எல்லாம் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லையா? மதிப்பதில்லையா?
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிப்பதாக இருந்தால், இந்திய அரசு இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று முன்மொழிய வேண்டும். இதற்கான முழு முயற்சியையும் எடுக்க வேண்டும்.
பன்னாட்டு நீதிமன்றக் கூண்டில் ராஜபக்ச ஏற்றப்பட்டு ஒரு கையில் விலங்கு மாட்டப்பட்டால், மறுகையில் மன்மோகனுக்கும் மாட்டப்படும். இது, மன்மோகன் சிங்குக்கும் தெரியும்.
எனவே, அவர்கள் தங்களுடைய குற்றங்களை மறைக்க, சிங்கள அரசின் குற்றத்துக்குத் துணை போகிறார்கள்.
நெருப்பைப் பொட்டலம் கட்டி வைக்க முடியாது. உண்மை நெருப்பைப் போன்றது. பொய்யை எரித்துப் பொசுக்கி விடும். இதற்கு மேலும் மன்மோகன் அரசு, இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும் என்றார் ஆவேசமாக.
« PREV
NEXT »

No comments