Latest News

October 25, 2013

தேச விடுதலைக்கா​க போராடிய மாவீரர்களை எம்மிடமிரு​ந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது: வடமாகாண உறுப்பினர் ரவிகரன்
by admin - 0

யாழ். கைதடியில்
இன்று நடைபெற்ற வடமாகாண
சபையின் முதல் அமர்வில்
அனைத்து உறுப்பினர்களும்
தமது முதல் உரையினை ஆற்றினர். வடக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் சார்பில்
முல்லைத்தீவு மாவட்டத்தில்
போட்டியிட்டு வெற்றியீட்டிய
துரைராசா ரவிகரன் தனது கன்னி உரையில், எம்
தேச விடுதலைக்காக போராடிய மாவீரர்களை எம்மிடமிருந்து எந்த சக்தியாலும்
பிரித்து விட முடியாது என்று அழுத்தமாக
தெரிவித்தார். அவரது உரையின் முழு வடிவம் பின்வருமாறு, இப்பூமிப்பந்திலே தனித்துவமான இன
அடையாளங்களுடனும், மிக நெடிய
வரலாறு கொண்ட மொழி வளம் மற்றும்
கலாசாரக் கட்டமைப்புடனும் வாழுகின்ற
தமிழ்த் தேசிய இனத்தின்
ஆட்சி அரங்கேறுகின்ற இம் மாகாணசபையிலே, உயிர்த்தியாகம் செய்த உறவுகளை வணங்கி,
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எம் மக்களின்
ஆணைக்கிணங்க, அவர்களின் குரலாக
எனது கருத்துக்களை இங்கே பதிவு செய்கின்றே இந்த நாள் தமிழினத்தின் வரலாற்றில் மிகவும்
முக்கிய நாள். இவ்வுலகு எக்காலத்திலும்
கண்டிராத மாபெரும் அழிவைச் சந்தித்த
தமிழினம், தன்
கண்ணீர்த்துளிகளை வாக்குகளாக மாற்றிப்
பெற்றுக்கொடுத்த வெற்றியின் குரல்கள் ஒன்றாகப் பதிவு செய்யப்படுகின்ற முதல் நாள்.
அழிக்கப்பட்ட எமதருமை உறவுகள், தாம்
புதைக்கப்படவில்லை,
அன்று விதைக்கப்பட்டோம்,
இன்று விருட்சமாகிறோம்
என்று இயற்கைக்கு அறிவித்த தீர்ப்பை உலகின் முன் பதிவு செய்கிற முதல் நாள். எம் தாயகத்தில் எஞ்சி இருக்கிற எம் மக்கள், எம்
இனத்தின்
தனித்தேசியத்தை உலகிற்கு மீண்டும்
ஒருமுறை பறைசாற்றிய நிகழ்வை,
பதிவாக்குகிற முதல் நாள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளிலே, இத்தமிழ் அவையிலே எங்களின்
உணர்வுகளை வலியுடன் பதிவு செய்கிறேன். நாம் தமிழ்த் தேசிய இனத்தின் பிள்ளைகள்.
ஒருங்கிணைந்த
வடகிழக்கே எமது தாயகமாகும்.இத்தாயகத்தில்
முழுமையான சுதந்திரத்துடன் வாழ
வேண்டுமென்கின்ற தமது ஆழமான
அபிலாசையையே மக்கள் தமது வாக்குகள் மூலம்
மீண்டுமொரு முறை உணர்த்தியிருக்கின்றனர்..
ஆனால், இன்று வடகிழக்கு இரு வேறாக
பிரிக்கப்பட்டு தனித்தனித் தேர்தல்கள்
நடைபெறுகின்றன. அது மட்டுமின்றி எம் தாயக பிரதேசத்தில்
காலத்திற்கு காலம் திட்டமிட்ட வகையில்
வேற்றினக் குடியேற்றங்கள்
மேற்கொள்ளப்படுகின்றன. எம் நில
அபகரிப்பும், வள அபகரிப்பும் என்றுமில்லாத
வகையில் மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அதிகம்
இலக்கு வைக்கபடுவது வடக்கை கிழக்குடன்
இணைக்கிற முல்லைத்தீவு மாவட்டமே. சுனாமியாலும், யுத்தத்தாலும் பேரழிவைச்
சந்தித்த நாம் இப்போது நில
ஆக்கிரமிப்பாலும் வளங்கள் பறிப்பாலும் கடும்
சவாலை எதிர்கொண்டுள்ளோம்.
மீளக்குடியேறச் சென்ற கொக்கிளாய்,
கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மக்கள், தமது 2568 ஏக்கர்
இற்கும் மேற்பட்ட விளைநிலங்கள்
அபகரிக்கப்பட்டிருப்பதால், தமது வாழ்வாதாரம்
இழந்ததை அழுகுரலோடு என்னிடம்
கூறுகிறார்கள். இந்நிலங்களையும் வவுனியாவில்
அபகரிக்கப்பட்ட நிலங்களையும்
இணைத்து வெலி ஓயா என்று புதிய
உத்தியோகபூர்வமற்ற பிரதேச செயலாளர்
பிரிவு உருவாக்கப்பட்டு சகல வசதிகளுடன்
நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, இயற்கைத் தாய் எமக்களித்த
கொடைகளான நாயாறு மற்றும் கொக்கிளாய்
ஆறுகளில்
என்றுமில்லாதவாறு தென்னிலங்கை மீனவர்களின்
தடை செய்யப்பட்ட தொழில்களின் ஆதிக்கம்,
அதிகாரங்களின் ஆசீர்வாதத்தோடு அதிகரித்துள்ளது. இதனால்
அவற்றில் கடல் வளம் மிக மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளது. ஏனைய
சிறுகடல்களுக்கும் இவை மிக விரைவில்
தொடரும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 18.10.2013 அன்று கொக்கிளாய்
கடனீரேரியில் தடை செய்யப்பட்ட
தொழில்களைச் செய்த
மீனவர்களுக்கு நடுக்கடலில் வைத்து நேரில்
அறிவுறுத்தி எச்சரித்திருந்தேன்
என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு காலத்தில் மிகப்பெரும் கடல் வள
வங்கியாகத் திகழ்ந்த முல்லைக்கடலும்
சிறு கடல்களும் இன்று தமிழ் மீனவர்களின்
சோகமாக மாறி வருவதன் இரகசியமும்
இதுவே. முல்லை மட்டுமல்ல, வடக்கு மட்டுமல்ல
தமிழர் தாயகப் பிரதேசமெங்கும்
மேற்கொள்ளப்படுகின்ற நில, வள
அபகரிப்பைத் தடுத்து நிறுத்தி, எம் தாயகப்
பரப்பை பேணுவதற்கு நாம் அனைவரும்
ஒருமித்த குரலில் போராட வேண்டும். மேலும, எங்கள் மண்ணிலே போரின் காயங்கள்
இன்னும் ஆறவில்லை. சுனாமியின் ஈரம்
இன்னும் காயவில்லை. அடங்காமையின்
குறியீடாக 71வீத வாக்குப்பதிவை தந்த
முல்லை மக்கள், இன்னும் ஆற்றாமையில்
அழுது கொண்டே இருக்கிறார்கள். முன்னாள் போராளிகள், விதவைப் பெண்கள்,
ஊனமுற்றோர், தாய், தந்தை இழந்தோர்,
ஆதரவற்றோர் என்று எம்மக்களின்
சோகங்களின் அடையாளங்கள் ஏராளம். எம்
மக்களில் பலர் இன்னமும் உடலினுள்
குண்டுகளின் சிதறல்களுடன் தான் நடமாடுகின்றனர். எங்கள் பெண்கள் படும் துன்பங்கள் ஏராளம்.
கணவனை இழந்த பெண்களின் குடும்ப
நிலையோ மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அடுத்த வேளை உணவிற்காக அழுகின்ற
குடும்பங்கள் எண்ணிலடங்கா. இனத்தின்
எதிர்கால இருப்பிற்காக தேசியத்தைப் பலப்படுத்த முன்வந்தவர்கள்,
இன்று தமது வாழ்வியல்
இருப்பை கேள்விக்குறியுடன் முன்
நகர்த்துகிற நிலையில் உள்ளனர். எங்கள் இளைஞர்கள், யுவதிகளின்
விளையாட்டுத் திறமைகள் வெளியே தெரியாமல்
போகின்றன. எங்கள் மாணவர்களின்
கல்வி நிலை மிக மோசமாகவுள்ளது.
இவ்வாறான நிலையில்,
முல்லைக்கல்வி வலயத்துடன் இரு சிங்களப்படசாலைகள் இணைக்கப்பட்டு,
தொழில்நுட்பப்பிரிவு ஆரம்பிப்பதற்கான
அனுமதியும் வலயக்கல்விப் பணிப்பாளரால்
வழங்கப்பட்டிருக்கின்றது. குடியேற்றப்பட்ட 460 சம்பத்நுவர
மாணவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம்,
எம் மண்ணின் மைந்தர்களான தமிழ் மாணவர்கள்
17739 பேருக்கு என் வழங்கப்படவில்லை?
காணாமல் போனோர் பற்றிய பிரச்சினை எம்
மண்ணின் இன்னோர் சோகமாகும். உறவுகளைத் தொலைத்தவர்கள், கதறிய
குரல்கள் இன்னமும் என் காதில்
கேட்டுக்கொண்டிருக்கின்றது. ஏராளமான மக்கள் இன்னும் தம் சொந்த
நிலங்களுக்கு மீளத் திரும்ப இயலாத
நிலை அங்கே நிலவுகின்றது.
கேப்பாப்பிலவு உள்ளிட்ட பல பிரதேச மக்கள்
இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
இவர்களின் சோகத்தைத் துடைப்பது எப்போது? இவர்களின்
ஆணைக்கிணங்க, இவர்களின் குரலாக
இங்கு கூறுகின்றேன் . "எங்களின்
வலிகளை ஆற்ற, எங்களின் தேசிய இன
விடுதலையை வென்றெடுக்க எம்மிடமுள்ள
வேற்றுமைகளைக் களைந்து நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கவேண்டும்." எம் மண்ணின் தேசிய அடையாளங்கள்
என்றுமில்லாத வகையில்
அழிக்கப்பட்டு வருகின்றன. இம்மண்ணில்
பிறந்த பிள்ளைகள், இம்மண்ணிற்காக உயர்நீத்த
பிள்ளைகள், எம் தேசிய இனத்தின்
விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த எங்கள் பிள்ளைகளான மாவீரர்களின் நினைவிடங்கள்
அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எதற்காக
அழிக்கப்படுகின்றன? எம்மிடமிருந்தும் எம்
நினைவுகளில் இருந்தும் அவர்களைப்
பிரிப்பதற்கா? அது ஒரு போதும்
நடைபெறாது. அவர்களின் மூச்சுக்காற்று இன்னமும் எம்முடன்
கலந்தே இருக்கின்றது. அக்காற்றைத் தான் எம்
மக்கள் சுவாசிக்கிறார்கள். மறவர்கள் சிந்திய
இரத்தம் எங்கள் கடல்
நீரிலே கலந்தே இருக்கின்றது. அந்த
நீரைப்பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம்
மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன.
அங்கே முழைக்கும் தாவரங்களைத்தான் நாம்
உட்கொள்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம்
பிரபஞ்சத்தில் நிறைந்தே இருக்கின்றன.
அவற்றைத்தான் எம் மக்களின் எண்ண அலைகள்
ஈர்க்கின்றன. இப்படி காற்றிலும் கடலிலும்
விண்ணிலும் நிறைந்துஇ உணவிலும் இ
நீரிலும் இ எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும்
இரண்டறக்கலந்தவர்களை எம்மிடமிருந்து எப்படி
முடியும்.? எம் நினைவுகளில் நீங்காத காவிய நாயகர்கள்
உறங்குவதற்கு துயிலும் இல்லங்களை மீள
அமைப்பது எப்போது? சத்திய வேள்வியில்
தம்மை அர்ப்பணித்து சரித்திரமாகிவிட்ட
மறவர்களைப் பூசிப்பது எப்போது?
அவர்களுக்கான கோயில்களை மீள எழுப்புகிற பணியை எங்கிருந்து ஆரம்பிக்கப்போகிறோம்? இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அடிப்
நாகரீகம். இந்த
நாகரீகத்தை நிலை நிறுத்தக்கூட உலகம்
முன்வராதா என்ன ? உலகின்
மனச்சாட்சியை தட்டி எழுப்பி கேள்வி கேட்பது உங்கள் முன்
ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.
இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால்
மண்ணை சிந்தித்துப்பாருங்கள்.
பல்லாயிரக்கணக்கான போராளிகள்,
பொது மக்கள் உயிர்த்தியாகம் செய்த அம்மண்ணின் இறுதி நாட்களைச் சற்றுத்
திரும்பிப் பாருங்கள். இன்று தமிழினத்தின்
தேசிய அடையாளமாக இருக்கின்ற அம்மண்ணில்
ஒரு நினைவுச் சின்னத்தை நாம்
அமைக்கவேண்டாமா? குறைந்த பட்சம், அந்தக் கண்ணீரால் கிடைத்த
வெற்றியின் சின்னங்களான நாம் அனைவரும்
ஒன்றாக சேர்ந்து ஒரு நிமிட
அகவணக்கத்தை அம்மண்ணில் நின்று ஆற்றிட
வேண்டாமா? உடனடியாக அதைச் செய்வோமே.
தமிழ்த் தேசிய இனத்தின் வலியின் அடையாளமான முள்ளிவாய்க்காலில் நாம்
அனைவரும் எங்கள் உறவுகளுக்காக
ஒரு நிமிடம் மௌனமாக வணக்கம்
செலுத்துவது, நாம் அனைவரும் ஒற்றுமையில்,
சரியான திசையில் செல்கிறோம் என்பதை அந்த
ஆத்மாக்களுக்கும் எம் மக்களுக்கும் எடுத்தியம்பும் அல்லவா? இம் மாமன்றத்திலே இன்னோர்
வேண்டுகோளையும் விடுக்கின்றேன். எம்
மக்களின் விடிவிற்காக குரல் கொடுத்த,
போராடச் சென்ற அனைவரும் எமக்குள் இருந்த
வேறுபாடுகளைக் களைந்து இன்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பாக ஓரணியில் நின்று குரல் கொடுக்கிறோம். ஆனால்
இன்றைய நாளில் எமது இனப்
பிரச்சினையானது என்றுமில்லாத வகையில்
சர்வதேச மயப்பட்டிருக்கின்றது. எமக்காக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழக
மக்கள் கொடுக்கிற குரல் மிகவும் வலுவாக
ஒலிப்பது பெரும் ஆறுதலாக உள்ளது.
இந்நிலையில், எம் மக்களின் நல்வாழ்விற்காக
குரல் கொடுக்கின்ற தமிழக மக்கள்
பிரதிநிதிகள், புலம்பெயர் மக்கள் பிரதிநிதிகள்
ஆகியோரை ஒன்றிணைத்து வலுவான உலக
சக்தியாக எம்முடைய
பிரச்சினை பற்றி விவாதிக்கலாமே? எம்
மக்களின் தேவை பற்றிப் பேசலாமே.. இது எம்
தீர்வை விரைவு படுத்துமல்லவா? இலங்கைத் தீவின் நீண்ட கால சமாதானத்தையும்
இது உறுதிப்படுத்துமல்லவா? கம்பளத் தெருக்கள் வேண்டும் என்று உரையாற்ற
நான் இங்கே வரவில்லை.
செல்வதற்கு வாகனமும் சாரதியும் தாருங்கள்
என்று கேட்கவும் வரவில்லை.
குளிரூட்டப்பட்ட அறைகளைக் கோரியும்
வரவில்லை. வெளிநாடுகள் சுற்றிப்பார்க்க வாய்ப்புக்களைத் தாருங்கள் என்று கேட்கவும்
வரவில்லை. எம் மக்களின் நோக்கமும் அதுவல்ல. எம்
மறவர்களின் வேட்கையும் அதுவல்ல. எம்மக்கள்
அதற்காக வாக்குகளை அளிக்கவில்லை. நான்
இங்கே கோரி நிற்பது எமது இனத்தின்
விடுதலை ஒன்றே. களம், புலம், தமிழகமென நாம் அனைவரும்
ஒற்றுமையுடன் சேர்ந்து எம்
உரிமையை வென்றெடுப்போம்
என்று கேட்டு நிற்கிறேன் என்றார்.
« PREV
NEXT »

No comments