கிளிநொச்சி கண்ணகைபுரத்தில் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் உழவு இயந்திரம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1ம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இல. 91, கண்ணகைபுரம், அக்கராயன்குளம் என்ற முகவரியில் வசிக்கும் கந்தையா கேதீஸ்வரன் என்பவரது உழவு இயந்திரமே தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலின் முன்பும் பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 26ம் திகதி அரச தரப்பு ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின் தம்மை இராணுவத்தினர் கைது செய்ய முற்பட்டதாகவும், பயத்தின் காரணமாக தலைமறைவாகிப் பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதாகவும் உண்மை நிலைப்பாட்டில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 1ம் திகதி அன்று தமது வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் இரவு வேளையில் தூக்கத்தில் இருந்தபோது பெரிய வெடிப்புச் சம்பவம் கேட்டதாகவும் எழுந்து பார்த்தபோது உழவு இயந்திரம் தீப்பற்றி எரிந்ததாகவும், அருகில் நின்ற சிலர் சத்தம் போட்டால் குத்திவிடுவோம் என்று மிரட்டியதாகவும் தீ பெரிதாக மூண்ட பொழுது அவ்விடத்தை விட்டு விலகி ஓடிவிட்டனர் எனவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் அயலவர்களுக்கு ஓடிச் சென்று விடயத்தினைக் கூறியதுடன் அவசர பொலிஸ் சேவைக்குத் தொடர்பு கொண்டபொழுது தொடர்பினைப் பெற முடியாது போயுள்ளது.
பின்னர் அயலவரின் துணை கொண்டு தீயினை அணைத்ததாகவும் மறு நாள் காலை அக்கராயன் பணிப்பின் பேரில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின் கண்ணகைபுரத்தில் கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் மேலும் விரிவடைந்து செல்வதையே மேற்குறித்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது என அப்பகுதி மக்கள் விசனமடைந்துள்ளனர்.
No comments
Post a Comment