Latest News

October 17, 2013

சாமியார் கனவுகண்ட 10 லட்சம் கிலோ தங்கத்தை தேடும் பணியில் அரசு!
by admin - 0

மத்தியபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இருக்கும் சங்க்ராம்பூர் என்கிற ஊரில் உள்ள சாமியாரான ஷோபன் சர்க்காரின் கனவில தங்கப்புதையல் வந்தது. அதுவும் சாதாரண தங்கப்புதையல் அல்ல. பத்து லட்சம் கிலோ தங்கப்புதையல். இந்த தங்கப்புதையல் மட்டும் உண்மையானால் ஏறக்குறைய இந்தியா அடுத்த 12 ஆண்டுகளுக்கு தங்கமே இறக்குமதி செய்யவேண்டிய தேவையிருக்காது. அவ்வளவு தங்கம் அங்கே புதையுண்டு இருப்பதாக கூறுகிறார் ஷோபன் சர்க்கார். அந்த ஊரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா ராம்பக்ஷ் சிங் என்கிற மன்னரின் பாழடைந்த அரண்மனை இடிபாடுகள் இருக்கின்றன. அந்த இடிபாடுகளுக்கு அடியில் தான் இந்த தங்கம் புதையுண்டு இருப்பதாக கூறுகிறார் ஷோபன் சர்க்கார். வடநாட்டு வீரப்பாண்டிய கட்டபொம்மன்? இந்த ராஜா ராம்பக்ஷ் சிங் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டின் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் கதையை ஒத்து இருக்கிறது. வீரப்பாண்டிய கட்டபொம்முவைப் போல ராஜாராம்பக்ஷ் சிங்கும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்திருக்கிறார். இவரது படைகளுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையிலான மோதலின் இறுதியில் ராஜாவின் படைகள் தோற்று, பிரிட்டிஷ் படைகள் வென்றதாகவும், சிறைபிடிக்கப்பட்ட ராஜா தூக்கிலிடப்பட்டதோடு, அவரது அரண்மனை பீரங்கியால் வெடிவைத்து தகர்க்கப்பட்டதாகவும், பதிவுகள் இருக்கின்றன. இது நடந்தது 1857 ஆம் ஆண்டு. அப்படி பிரிட்டிஷாரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ராஜா ராம்பக்ஷ் சிங்கின் பாழடைந்த அரண்மனையின் இடிபாடுகளுக்கு அடியில்தான் பத்துலட்சம் கிலோ தங்கம் புதையுண்டு இருப்பதாகக் கூறுகிறார் சாது ஷோபன் சர்க்கார். இந்த தங்கத்திற்கு காவலாக ராஜா ராம்பக்ஷ் சிங்கின் ஆவி அங்கே உலவுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்த தங்கத்தை உடனடியாக அரசாங்கம் தோண்டி எடுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் அங்கே அலையும் மன்னர் ராஜா ராம்பக்ஷ்சிங்கின் ஆவிக்கு விடுதலையளிக்கவேண்டும் என்றும் ஷோபன் சர்க்கார் மத்தியப் பிரதேச அரசுக்கும் இந்திய நடுவணரசுக்கும் கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்தார். மத்தியப்பிரதேச அரசின் மவுனமும் மத்திய அமைச்சரின் நடவடிக்கையும் மத்தியப் பிரதேச அரசு இதை பெரிதுபடுத்தவில்லை என்றாலும், மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் சரண்தாஸ் மஹந்த், இந்த சாதுவின் கடிதத்தை மதித்து, மத்திய தொல்பொருள் துறைக்கும், இந்திய அரசின் நிலவியல் ஆய்வுக்கழகத்திற்கும் இந்த குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனைகள் செய்யும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இந்திய அரசின் நிலவியல் ஆய்வுக்கழக அதிகாரிகள் இந்த ஊருக்கு வந்து, பாழடைந்த அரண்மனை இடிபாடுகளை ஒட்டி நிலத்திற்கு அடியில் தங்கம்,
வெள்ளி போன்ற எளிதில் வெப்பத்தை கடத்தும் உலோகங்கள் இருக்கிறதா என்பதை கண்டறியும் நுண் உணர் கருவிகளைக் கொண்டு ஆரம்பகட்ட பரிசோதனைகளை நடத்தி, தமது கண்டுபிடிப்புக்களை மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து பிபிசியிடம் பேசிய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகளுக்கான இயக்குநர் சையத் ஜமால், அங்கே நிலத்துக்கு அடியில் உலோகம் இருப்பதை நிலவியல் ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார். தங்கம் வெள்ளி போன்ற உலோகம் இருப்பது உறுதி இந்திய நிலவியல் ஆய்வுத் துறையின் அறிக்கையை மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் தான் பார்த்ததாக தெரிவித்த சையத் ஜமால், அந்த இடத்தில் அகழ்வு செய்தால் அங்கே தங்கம், வெள்ளி மற்றும் அதுபோன்ற எளிதில் வெப்பத்தை கடத்தும் உலோகங்கள் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். "ஆனால் இந்த உலோகங்களின் அளவு எவ்வளவு என்பது குறித்து அவர்கள் ஒன்றும் கூறவில்லை. தொல்லியல் துறையைப் பொறுத்தவரை நாங்கள் அகழ்வில் கிடைக்கும் ஒரு பொருளின் கால அளவு என்ன என்பதை மட்டுமே அறுதியிட்டு கூற முடியும். மற்றவிவகாரங்கள் குறித்து எங்களால் ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது”,என்றார் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகளுக்கான இயக்குநர் சையத் ஜமால். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை வெள்ளிக்கிழமை இந்த இடத்தில் தொல்லியல் துறை தனது அகழ்வுப்பணிகளை துவங்க இருக்கிறது. அதன் முடிவில் அரண்மனை இடிபாடுகளுக்கு அடியில் இருப்பது, தங்கமா, வெள்ளியா அல்லது வேறு உலோகமா என்பது தெரிந்துவிடும். அங்கே மட்டும் தங்கப்புதையல் கிடைத்தால், ஏற்கெனவே தனக்கு அமானுஷ்யமான சக்திகள் இருப்பதாக கூறிவரும் அந்த ஊர் சாமியார் ஷோபன் சர்க்கார், ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிடுவார். மாறாக, அங்கே தங்கம் கிடைக்காவிட்டால், சாமியார் ஷோபன் சர்க்கார் தனது ஆசிரமத்தை வேறு ஊருக்கு மாற்றவேண்டிய சூழல் எழலாம். அவரோடுகூட அரண்மனை இடிபாடுகளில் உலவுவதாக அவர் கூறும் மன்னரின் ஆவியும் அவருடன் சேர்ந்து செல்ல நேரலாம்.
« PREV
NEXT »

No comments