Latest News

September 27, 2013

இலங்கைக்கு காலக்கெடு விதிக்க நவிபிள்ளைக்கு அதிகாரமில்லை'
by admin - 0

இலங்கை குறித்து சர்வதேச சமூகங்களின்
கவலைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை 2014 மார்ச் மாதத்திற்குள் எடுக்காவிட்டால்,
அவை குறித்து விசாரிக்க,
ஒரு விசாரணை பொறிமுறையை உருவாக்க வேண்டிய கடப்பாடு சர்வதேச
சமூகத்துக்கு இருக்கிறது என்ற ஐநா மனித
உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அவர்களின்
கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில்
நவிபிள்ளை அவர்களின்
உரைக்கு பதிலளித்து உரையாற்றிய
ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான ரவிநாத் ஆரியசிங்க
அவர்கள், இது குறித்த இலங்கை அரசாங்கத்தின்
கருத்தை அங்கு பிரதிபலித்தார். பொதுமக்களின் வாழ்க்கையில் சுமூக நிலையைக்
கொண்டுவருவதற்கான தனது முயற்சிகளின்
ஒரு பகுதியாக இலங்கை அரசாங்கம், பொறுப்புக்
கூறல் விடயத்திலும் சாதகமான
நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் ரவிநாத்
அங்கு குறிப்பிட்டார். இலங்கையில் நடந்ததாக கூறப்படும் பாரிய மனித
உரிமைகள் குறித்த கரிசனைகள் இலங்கை அரசால் குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாகக் கையாளப்படாவிட்டால், அதற்கான விசாரணைப்
பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய
கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது என்ற ஐந மனித
உரிமைகள் ஆணையர்
கருதுவதை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது என்றும் அவர்
கூறினார். அப்படியான ஒரு கருத்தைக் கூற ஆணையருக்கு அதிகாரம்
கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். பொறுப்புக்கூறலுக்கான பலதரப்பட்ட பொறிமுறை என்பது நல்லிணக்க
ஆணைக்குழுவின் மூலமாக ஏற்கனவே இலங்கையில் அமலில் உள்ளதாக
தெரிவித்த அவர், அதில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும்
கூறினார். ஏசிஎஃப் விவகாரம், திருகோணமலை மாணவர் கொலை விவகாரம், சானல் 4
இன் குற்றச்சாட்டுக்குகள் குறித்த இராணுவ நீதிமன்ற விசாரணை உட்பட
மனித உரிமை மீறல் புகார்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள்
அங்கு முன்னேற்றகரமாக நடந்துவருவதாகவும் ரவிநாத் ஆரியசிங்க
தெரிவித்தார். வடக்கில் பெண்களும் சிறுமிகளும் துன்புறுத்தல்களுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதற்கான பலவீனமான நிலைமை இருப்பதாக நவி பிள்ளை அவர்கள் கூறியது குறித்து பேசிய ரவிநாத் ஆரியசிங்க அவர்கள், முறைப்பாடு கிடைத்த சம்பவங்கள் குறித்து கடுமையானநடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அங்கிருக்கும் இராணுவ
பிரசன்னமும் இதற்கு ஒரு காரணம் என்று நவிபிள்ளை கூறியதையும் அவர் மறுத்தார்.
« PREV
NEXT »

No comments