Latest News

September 23, 2013

தேசத்தின் விடுதலையை மக்கள் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: தமிழத் தேசியக்கூட்டமைப்பு நேசிக்குமா?
by admin - 0

வட மாகாணசபைக்கான தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். தேர்தலில் தமிழர்கள் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தேர்தல நடத்தியது என்பது அரசுக்கும் வெற்றிதான். பலர் துருவித்துருவி அரசைக் கேட்டகேள்வி ஒன்று இனி இல்லாமல் போகின்றது. இதனை தன் ஜனநாயக நல்லாட்சிக்கான சாதனையாக வெற்றி மமதையில் உலாவரும் அரசு தம்பட்டமடிக்கப் போகின்றது.அதனை சாதனையின் பெறுமதியை உருப்பெருக்கிக் காட்ட மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக தடைசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. தென்னிலங்கையின் எதிர்ப்புகளின் மத்தியிலும் இதை செய்கின்றோம் என்பதைக் காட்ட பெருமளவில் இது உதவியிருக்கிறது. ஆக தேர்தலில் அரசு தோற்றிருந்தாலும் தேர்தலை நடத்தியதில் அது வெற்றிபெற்றுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களதும் ஆயுதக் குழுக்களினதும் உச்சக்கட்ட அச்சுறுத்தலுக்கு மத்தியில் இத்தேர்தலில் மக்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். தமிழத் தேசியக்
கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது அரசுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஆனால் வெற்றியின் தன்மையை வலுவிழக்கச் செய்வதற்காக அரசு பல்வேறு வழிகளில் தேர்தல் முறைகேடுகளைச்
செய்திருந்தது. வெற்றியின் தன்மை என்று இங்கு சொல்லப்படுவது சாதாரண வெற்றி அல்லது அமோக
வெற்றி. அமோக வெற்றியை தடுக்கவே அரசு முற்பட்டிருந்தது. மக்களை வாக்களிப்பில் பங்குகொள்வதைத் தடுத்து குறைப்பதனூடாக அதனை நிறைவேற்றலாம் என அரசுநினைத்தது. அதற்காக பல
வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது. வாக்குச்சாவடிச் சூழலில் இராணுவத்தினரையும் இராணுவபுலனாய்வாளர்களையும் நிலைநிறுத்தி மக்கள்
மத்தியில் அச்ச சூழலை ஏற்படுத்தி வாக்களிப்பிலிருந்து மக்களை உளவியல் ரீதியாக பின்வாங்கச் செய்கின்ற
உத்தியை மேற்கொண்டிருந்நதோடு ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர்கள் பிரச்சாரத்தில ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது. சிவிலுடையில் இருந்த இராணுவப் புலனாய்வாளர்
ஒருவரை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிடித்துகாவல்துறையிடம்
ஒப்படைத்திருந்தமை தொடர்பான காட்சி அனேக ஊடகங்களில் வெளிவந்திருந்தது. வன்முறையை வாக்குச் சாவடி சூழலில் மேற்கொள்வதூடாக வாக்காளர்கள் வரவை குறைக்கும் முயற்சியில்
அரசு ஈடுபட்டிருந்தது. வவுனியா சின்னடம்பன்பாரதி மகாவித்தியாலய வாக்குச் சாவடியில் தவறுதல் என்ற
அடிப்படையில் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றது. இதேபோன்று வரணியிலும் சூட்டுச்சம்பவம் இடம்
பெற்றது. பனம்கண்டி, யாழ்ப்பாணம் திருநெல்வேலிபோன்ற இடங்களில் வாக்குச் சாவடிகளில் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவேளாங்குளத்தில் இரண்டு வீடுகள் எரிக்கப்பட்டிருக்கிறது. மன்னாரில் கிறிஸ்தவ மதகுருவும் ஆசிரியரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்களுக்கு மட்டுமல்ல
கபே கண்காணிப்பாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. கபே தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்கின்றது. சுரேஸ் பிரேமச்சந்திரன் இராணுவ சர்வாதிகாரத்துடனான தேர்தல்
என்றுகூறுகிறார். இப்படியான இறுக்கமான, நெருக்கடியான, அச்சுறுத்தல்மிகுந்த ஒரு சூழலில் மக்கள் அடிகளையும், உதைகளையும், சூட்டுக்காயங்களையும் வாங்கியபடி வாக்களித்து தமித்த்தேசியம்பேசியவர்களை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள்தம் தேசத்தின் விடுதலையை எந்தளவிற்கு நேசித்துக் கொண்டிருக்கிறார்கள்என்பது புலனாகின்றது. அரசு அபிவிருத்தியினூடான நல்லிணக்கம் என்ற போர்வையில் வடக்குக்கு புள்ளட் ரயிலைத் தான் அனுப்பினாலும் மக்கள் அபிவிருத்தி சலுகை என்பது என்ன? எமது மரபுவழி உரிமை, தேசியம், எமக்கான தீர்வுத் திட்டம் என்பது என்ன? என்பது தொடர்பாக மிகத் தெளிவான நிலையிலேயே இருந்து வருகிறார்கள். தமிழ் தேச விடுதலைக்கான போராட்டத்தில் ஆயுதம், அரசியல் என்ற இருதுருவங்களை ஒரு புள்ளியில் கொண்டு வந்து உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் தமிழத் தேசியக் கூட்டமைப்பு. விடுதலைப் புலிகளின்
மௌனிப்புக்குப் பின் தமிழ் மக்களுக்கான தலமையினை முழுமையாக ஏற்கவேண்டிய பொறுப்பு தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஏற்பட்டது. தமிழத் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு பின்புலமாக இருந்த பலர் சுட்டுக் கொள்ளப்பட்டுவிட்டனர்.  அது உருவாகி அடுத்து வந்த தேர்தலில் அதன் வெற்றிக்காக உழைத்த பலர் அரசிடம் சரணடைந்து எங்கென்று தெரியாத நிலையிலுள்ளனர். இவாவாறான ஒரு சூழலில் கடந்த நான்கு வருட காலத்தில் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் அது மக்களைத் திருப்திப்படுத்தாத அல்லது திருப்திப்படக் கூடிய எந்த முன்னேற்ற நகர்வுகளையும் எடுக்காத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் திருப்தி என்று இக்கட்டுரை கருதுவது அவர்கள் இறுதித்
தீர்வையே. இறுதித் தீர்வென்பது மரபுவழித் தாயகம், தேசியம், சுயநிர்ணய உர்மையை உள்ளடக்கியதாக அமைகிறது. ஒரு நண்பர் பேசும் போது சொன்னார் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வெல்ல வேண்டும் என்றதுக்கு அப்பால் சிங்களவர் கையில் ஆட்சி போய்விடக்கூடாது என்பதற்காகவே வாக்களிக்கப் போகிறேன் என்றார். தமிழத்
தேசியக் கூட்டமைப்பு அண்மைக்காலச் செயற்பாடுகள் தேசிய விடுதலை எனும் ஒரு உயர்ந்த இலட்சியத்துக்காகப் போராடும் ஒரு சமூகத்திற்கு தலமை தாங்கும் அல்லது அதன் எண்ணங்களை பிரதிபலிக்கும் அமைப்பு என்னும் அடிப்படையில் அமைந்ததாகத் தெரியவில்லை.
அல்லது அதனை நிருபிக்கத் தவறி இருக்கிறது. மக்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்பை நம்பி வாக்களித்துள்ளார்கள் என்பதிலும் பார்க்க அதன் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்த விடுதலைப்
புலிகளையும் மண்ணுக்காய் மாண்டவர்களையும் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற உயர்ந்த
கொள்கைக்காகவும் நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதைக்காட்டவுமே வீட்டுக்குப் புள்ளடி போட்டிருக்கிறார்கள். சிறிலங்கா அரசும், சர்வதேசமும் இதனை மீளப் புரிந்து கொள்ள வைப்பதோடு தழிழ்த் தேசியக் கூட்டமைப்பு  நினைவுபடுத்தியுமிருக்கிறது. சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் அண்மையில் தமிழகம் தொடர்பாகக் கூறிய கருத்துக்களும் அதனைத்
தொடர்ந்து அக்கருத்துத் தொடர்பான சடையல்களும் பொதுநலவாய அமைப்பில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோலும் முதிர்ந்த அரசியல் ஞானத்தின் வெளிப்பாடாகதெளிவான வரலாற்றுப் பார்வை கொண்ட சிந்தனையினுடைய கருத்தாக உரிமைக்காகப் போராடுகின்ற
ஒட்டுமொத்த சமுகத்தின் பிரதிபலிப்பாக அமையவில்லை. கொலைக்களத்தில் நடக்கும் மாநாட்டில் கனடா தானாக வரமாட்டேன் எனச் சொல்லியுள்ள நிலையில் இந்தியாவை விருந்தோம்பி அழைப்பதில் என்ன இராஜதந்திரக் கதை சொல்லப் பொகிறார்கள் என்பதுதெரியவில்லை. எது எப்படியாயினும் தமிழ் மக்கள்
தேசத்தின் விடுதலையையே இந்த மேய்ப்பனிடமும் எதிர்பாக்கிறார்கள். காரணங்களுக்கும் விவாதங்களுக்கும் தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டு இன்று வடக்கில் தமிழர்கள் ஆட்சி அமைக்க போகிறார்கள், தமிழருக்கான தீர்வு என்னும் அடிப்படையில்  மாகாணசபை உண்மையில்
தொடக்கமும்  அல்ல முடிவும் அல்ல தீர்வு என்னும் தூர நோக்கு அடிப்படையில் அதனை வலு மிக்கதான தொடக்க புள்ளியாக கையாண்டால் அது சாமர்த்தியம் இல்லையேல் அதுவே சாபக்கேடாக அமைந்துவிடும். வடக்கில் ஒரு சிவில் வெளிதிறக்கத்தான் போகிறது , அதில் உச்ச கட்ட ஜனநாயக பண்புமிக்கதும்,புத்தி ஜீவித்தனம் கொண்டதுமான தேசியம் கட்டியெலுப்பப்பட வேண்டும். ஈழம் - புலம்பெயர் தேசம் - தமிழகம் ஒரு கோட்டில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், நமக்கென்று  உண்மையான
நட்பு சக்தியை ஏற்படுத்திகொள்ள வேண்டும் . அதனூடாக இலட்சியத்தை அடைய முற்படவேண்டும். தமிழ் மக்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்கள், வாழ்க்கைக்காக கொள்கையை விற்காமல்
வலி வரினும்  கொள்கைக்காக வாழ்பவர்கள். இதனை பல தேர்தல்களில் நிறுபித்திருக்கிறார்கள் கொள்கை தவறுபவர்களுக்கு பாடமும் புகட்டியும் இருக்கிறார்கள். இம்முறையும் நாம் எம் தேசத்தின் விடுதலையைதான் நேசித்துக் கொண்டிருக்கிரொம் என்பதை திடகாத்திரமாக சொல்லி இருக்கிறார்கள்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை நேசிக்குமா? - பதிவு இணையத்திற்காக யாழிலிருந்து இளையவன்னியன் -
« PREV
NEXT »

No comments