உலகத்திலுள்ள சகல ஊடகவியலாளர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தமது கடமையை செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். இதற்கு இலங்கையும் விதிவிலக்கானதல்ல என பிரபல எழுத்தாளரும் வைத்தியக் கலாநிதியுமான இராஜதர்மராஜா தெரிவித்தார்.
நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பெளர்ணமி தின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் எஸ்.ஆர். தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் பேனா உலகமும் ஆதிக்க உலகமும் என்னும் பொருளில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எவர் ஒருவர் தனது பேனாவை பயன்படுத்துகிறாரோ அவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டே கடமையை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் சஷ்மிகா பனர்ஜி என்ற இந்திய நாவலாசிரியரும் பெண்ணியல் வாதியுமான ஒருவர் ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். தலிபான்களின் அட்டூழியங்களை நாவலாக எழுதியமைக்காக இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலை இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ஊடகவியலாளர் சிவராம், வீரகேசரி மட்டக்களப்பு ஊடகவியலாளர் நடேசன் இதேபோன்று யாழ்ப்பாணத்தில் திருகோணமலையில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
இவை போன்ற ஏராளமான சம்பவங்கள் உலகில் நடந்து கொண்டேயிருக்கின்றன. பேனா விற்பன்னர்கள் கொல்லப்படுகிறார்கள். சிறை வைக்கப்படுகின்றார்கள். எந்த எழுத்தாளன் ஒருவன் ஆதிக்க சக்திகளை எப்போது விமர்சிக்க வெளிக்கிடுகிறானோ அவனுடைய முடிவு சோக முடிவாகவே காணப்படுகிறது. இவை இன்று நேற்று அல்ல உலகம் தோன்றிய காலத்திலிருந்து நடைபெற்று வரும் சம்பவங்களாகும். இந்த அநியாயத்துக்கு காரணமென்ன? இது ஒரு ஒவ்வாமை நோய். ஆதிக்க சக்திகள் தம்மை மேலாக கருதுகிறார்கள், உலகத்தின் பாதுகாவலர் தாமே என உரிமை கோருகின்றார்கள். தம் மீது கேள்வி கேட்க முடியாது என்று கருதுகிறார்கள். இந்த நிலையில் எழுதுகோல் விற்பன்னர்கள் எதிர்ப்பு நிலை இவ்வாறு ஆக்கப்படுகிறது என்றார்.
No comments
Post a Comment