தமிழ் பேசும் அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனின் கருத்து சரியானதே என்று மக்கள் உணருகின்ற அளவுக்குப் போரின் பின்னரான அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன'' என்று தெரிவித்துள்ளது ஜே.பி.வி. வடக்கு மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்குப் பதிலாக அரசு அநுராத புரம் மற்றும் அம்பாந்தோட்டை பகுதி மக்களை அங்கு குடியேற்றி பிரச்சினைகளைத் தீவிரப் படுத்துகின்றது என்கிறது அந்தக் கட்சி. ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற் றது. கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அங்கு தெரிவித்ததாவது: கொழும்பில் தனிச் சிங்கள ஆட்சியே நிலவுகின்றது. இதனால், இதற்கு நிகரான தமிழர் ஆட்சியும் இருக்க வேண்டும் என்ற பிரதான கொள்கையுடன்தான் பிரபாகரன் போராட்டங்கள், தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பரப்புரைகளை மேற்கொண்டார். பிரபாகரன் சரி
அந்த நேரத்தில் இச்செயற்பாட்டை எந்தளவிற்கு தமிழர்கள் ஆதரித்தார்களோ, அதே அளவிற்கு தமிழர்களிடமிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனால், இன்று போர் முடிவடைந்து 4 வருடங்களுக்கு மேலாகியும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாமையினால், "பிரபாகரன் அன்று செய்தமையே சரி' என அனைத்துத் தமிழர்களும் தற்போது உணர்ந்து கொண்டார்கள். சர்வதேசம், இந்தியா மற்றும் ஐ.நா. போன்றவற்றில் முறையிட்டால்தான் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழர்கள் உணர்ந்து விட்டார்கள். இதற்கெல்லாம் மூல காரணம் இந்த அரசின் செயற்பாடுகள்தான் என்றார் அவர். போர் முடிவடைந்த பின்னர் நாட்டில் சீரான சூழ்நிலை காணப்பட்டது. ஆனால், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. போரால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை இல்லை. அத்துடன், காணாமல்போனோர் குறித்தும் அது அசமந்தப்போக்கிலேயே செயற்படுகின்றது.காணாமற்போனோருக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா என்று அறிந்துகொள்வதற்கு அவர்களது உறவினர்களுக்கு உரிமை இருகின்றது.
ஆனால், இந்த அரசு, இவர்களுக்கான தீர்வையோ அல்லது இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவையோ இன்னும் வழங்கமால் இருக்கின்றது. வடக்கு மக்களின் காணிப் பிரச்சினைக்கும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. பதிலாக அந்தக் காணிகளில் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியேற்றி பிரச்சினைகளை அரசு மேலும் தீவிரமாக்குகின்றது. வடக்கில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்குவதற்குப் பதிலாக அரசு தொடர்ந்தும் இராணுவ ஆட்சியையே நடத்தி வருகின்றது. அதுமட்டுமல்லாது, வடக்கை மையமாகக் கொண்ட ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தொடர்ந்தும் தாக்கப்பட்டு வருகிறார்கள். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி அரசுக்குப் பல அழுத்தங்கள் பல இடங்களிலிருந்து விடுக்கப்பட்டன. ஆனால், அப்போதெல்லாம் இவற்றை துளியளவும் கருத்தில் கொள்ளாத அரசு நவிப்பிள்ளை வந்தவுடன் அங்குள்ள சில இராணுவ முகாம்களை அகற்றினார்கள். தற்போது நடைபெறவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலையும் இந்தியாவின் அழுத்தத்தினால்தான் அரசு நடத்துகிறது என தமிழர்கள் ஊகிக்கக்கூடும். தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதிக்குமளவுக்கு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐனநாயக சூது உடன் நிறுத்தப்பட வேண்டும். சிங்கள மாகாணங்கள் அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் வடக்கும், கிழக்கும் தமிழர்களுக்கே உரித்தானது என கூறப்பட்டுள்ளது. அப்படியானால், மீதமுள்ள 7 மாகாணங்களும் சிங்களவர்களுக்கு உரித்தானவை அல்லவா? இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன பதிலைக் கூறுப்போகிறது? இதுபோன்ற கருத்துகள் ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. இவர்கள் பேசுவது தமிழ்த் துவேசம். ஒரு காலத்தில் சிங்கள மொழியை ஒழுங்காக உச்சரிக்காத, சுத்த சிங்கள வசனங்களை படிக்கத் தெரியாத, அப்படிப் படித்தாலும் அர்த்தம் புரியாத அரசியல்வாதிகளும் வீட்டில் முழுமையாக ஆங்கிலம் பேசும் அரசியல்வாதிகளும்தான் தனிச் சிங்களத்தை தேசிய மொழியாகப் பிரகடனப்படுத்தினார்கள். இவர்கள் போன்றவர்களால்தான் நாட்டில் துவேசம் துளிர்விட்டது. தற்போதுகூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ஸ, தொண்டமான் மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றோர் வேறுவேறு மத, மொழியாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமையாகவே உள்ளனர். அப்படியிருக்கையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் எனக் கூறி நாம் மட்டும் ஏன் சண்டையிட்டு வன்முறைகளில் ஈடுபட வேண்டும்? இது அனைவருக்கும் உரித்தான நாடு. இது போன்ற பிரிவினைவாத செயல்களுக்கு யாரும் ஒருபோதும் ஒத்துழைக்கக் கூடாது என்றார்.
No comments
Post a Comment