வன்னி இறுதி யுத்தத்தினில் மட்டும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளதாக சர்வதேச தரப்புக்கள் அறிவித்துள்ளன.இலங்கை அரசின் இவ்வினப்படுகொலை தொடர்பினில் சர்வதேச விசாரணைகளை தமிழர்களாகிய நாம் கோரி வருகின்றோம்.இந்நிலையினில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினில் விடுதலைப்புலிகளது போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தேவையென வலியுறுத்தப்படுவது தமிழ் மக்களது இலங்கை அரசின் இனப்படுகொலைக்கெதிரான விசாரணை கோருவதை மலினப்படுத்திவிடுவதாகவுள்ளதாக அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையினில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினில் இவ்விவகாரம் தொடர்பினில் தான் சம்மதித்திருக்கவில்லையென தெரிவித்ததுடன் இது தொடர்பினில் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.1990 இனில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக இப்போதைய இனப்படுகொலையுடன் ஒப்பிடுவது எவ்விதம் பொருந்துமென கேள்வி எழுப்பிய அவர் சர்வதேச விசாரணை தொடர்பாகவும் வலியுறுத்தினார்.
இலங்கை அரசு அமைத்திருக்கும் விசாரணை குழு வெறும் கண்துடைப்பேயென தெரிவித்த அவர் ஏற்கனவே இவ்வாறு அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கள் என்ன செய்தனவென கேள்வி எழுப்பினார். நவிப்பிள்ளையுடனான சந்திப்பின் போது சர்வதேச விசாரணையாளர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர் அதுவே தற்போதைய தேவையெனவும் தெரிவித்தார்.
No comments
Post a Comment