Latest News

September 10, 2013

அனைத்துலகரீதியிலான தமிழ்மொழி புலமைப்பரிசில் தேர்வு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
by Unknown - 0

புலம்பெயர் வாழ் தமிழ்ச்சிறார்களின் தமிழ் கற்கும் விருப்பினை ஊக்குவிக்கும் வகையில் உலகளாவியரீதியில் தமிழ் மொழி புலமைப் பரிசில் தேர்வுகள்  ஆண்டுதோறும் நடாத்தப்படவிருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 28-09-2013 சனிக்கிழமை அன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி புலமைப் பரிசில் 2012-2013 ற்கான பரீட்சை நடாத்தப்படவிருக்கின்றது.

1, 3, 5, 7, 9 ஆகிய வகுப்பு நிலைகளுக்கு இடம்பெறவுள்ள இத்தேர்வில் கடந்த ஆண்டு, 2012-2013 இல் மேற்குறித்த வகுப்புக்களில் கற்ற மாணவர்கள் இத்தேர்வில் பங்கு பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இத் தேர்வில் 1ம், 3ம், 5ம் வகுப்புக்களில் ஒவ்வொரு நாடுகளிலும் முதல் மூன்று தரங்களைப் பெறும் மாணவர்களுக்கு தமிழ்மொழியைக் கற்பதற்கான ஒரு  வருட சந்தாவை தமிழ் மொழி புலமைப் பரிசிலாக வழங்குவதில் நாடு கடந்த தமிழீழ அரசு மகிழ்ச்சி அடைகின்றது. 7ம், 9ம் வகுப்புக்களில் முதல் இரண்டு தரங்களைப் பெறும் மாணவர்களுக்கு இப் புலமைப்பரிசில் (ஒரு வருட சந்தா) வழங்கப்படும்.

மேலும் இத் தேர்வில் ஒவ்வொரு பாடசாலையிலும்,ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணமும்,சான்றிதழும் எமது அமைச்சினால் வழங்கப்படும்.

இத் தேர்வுக்குரிய கட்டணம் ஒவ்வொரு மாணவருக்கும் £5 பவுண்கள் மட்டுமே. பரீட்சை வினாத்தாள்கள் எமது அமைச்சினால் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு தமிழ்ப் பாடசாலைகளுக்கும் உரிய காலத்தில் அனுப்பிவைக்கப்படும்.
இத்தேர்வு ஒவ்வொரு பாடசாலைகளிலும் நடாத்தப்படும். இத்தேர்வினை நடாத்தி தரும்படி அந்தப் பாடசாலை நிர்வாகிகள்,தலைமை ஆசிரியர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். இப் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு ரீதியாக 15-09-2013 ற்கு முன்னர் எமக்கு அறியத்தரவும். இப் புலமைப்பரிசில் பரிசளிப்புவிழா ஐப்பசி மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும். இது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

2014ம் ஆண்டு வைகாசி மாத இறுதியில் 2013-2014 ம் ஆண்டுக்கான தமிழ்மொழி புலமைப் பரிசில் தேர்வு நடாத்தப்படும் என்பதனையும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இத் தேர்வு வைகாசி மாத இறுதியில் நடாத்தப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம். எனவே தாங்கள் அனைவரும் இத் தேர்வினை ஒவ்வொரு வருடமும் நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பினை எமக்கு வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments