Latest News

September 12, 2013

காணாமல் போன கணவரது வருகை பசில் ராஜபக்ச கூறுவது போல எனக்கு சுயநலம் தான்- அனந்தி சசிதரன்
by Unknown - 0

நாங்கள் எவருமே காணாமல் போனவர்களிற்காக தேர்தல் காலத்தினில் மட்டும் குரல் எழுப்பவில்லை. அரசின் முக்கிய அமைச்சரான பஸில் ராஜபக்ஸவோ காணாமல் போனோர் பற்றி கதைக்கவேண்டாமென்கிறார். எமக்கான நீதி கிடைக்கும் வரை இந்தக் குரல்கள் ஓயப்போவதில்லை. இவ்வாறு அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
இலங்கை அரசு ஒரு புறம் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் பற்றி கதைக்கின்றது.
அரசின் முக்கிய அமைச்சரான பஸில் ராஜபக்ஸவோ காணாமல் போனோர் பற்றி கதைக்க வேண்டாமென்கிறார். 
எங்கள் குடும்பத் தலைவர்களை எங்கள் குடும்ப உறவுகளை பற்றி கதைப்பது சுயநல அரசியல் நோக்கமென்கிறார்.
இவ்வாறெல்லாம் ஞானோபதேசம் செய்துவிட்டு இரவு ஆட்களை விட்டுத் தாக்குகிறார்கள். இதுவோ அவர்களது ஜனநாயக அரசியல் என கேட்க விரும்புகின்றேன்.
நாங்கள் எவருமே காணாமல் போனவர்களிற்காக தேர்தல் காலத்தினில் மட்டும் குரல் எழுப்பவில்லை.
யாழ்.குடாநாடு படையினரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி தொடக்கமாயினும் சரி அதே போன்று வன்னி படையினரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட 2009 மே 19 இன் பின்னரும் சரி ஆயிரமாயிரம் தமிழ் குடும்பங்கள் காணாமல் போன உறவுகளிற்காக இந்நிமிடம் வரை குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
எமக்கான நீதி கிடைக்கும் வரை இந்தக் குரல்கள் ஓயப் போவதுமில்லை.
அனந்தி சசிதரனாகிய நான் பல தடைவைகளாக எனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளேன்.
அரசியலுக்கு அப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் உறவுகளிற்காக எவருமே குரல் தர முன்வராத நிலையினில் பாதிக்கப்பட்டவள் என்ற அடிப்படையினில்; ஏனையவர்களையும் இணைத்துக் கொண்டு குரல் எழுப்ப நான் முன்வந்திருந்தேன்.
இத்தேர்தலில் வெற்றி தோல்வி என்பதற்கப்பால் காணாமல் போனோருக்காக குரல் எழுப்புவதென்பது எனது வரலாற்றுக் கடமையாகும்.
எமது குரலிற்கான ஓர் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவே இத்தேர்தல் களத்தினில் குதிக்க நான் முடிவு செய்திருந்தேன்.
அமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறுவது போல காணாமல் போனோர் பற்றி கதைப்பது சுயநலமென்ற கருத்தினில் எனக்கு அதில் ஒருபகுதி உடன்பாடுண்டு.
ஏனெனில் நாள்தோறும் காணாமல் போயுள்ள தமது தந்தையை தேடி அழுது கொண்டிருக்கும் மூன்று பெண் குழந்தைகளினது தாய் என்ற வகையினில் எனது கணவரது வருகை எனக்கு சுயநலமிக்கதொன்றே.
என்னைப் போன்றே ஏனைய பெண்களும் தங்களது குழந்தைகளிற்காக காத்திருப்பர்.
தாக்குதல்களை நடத்துவதாலோ மிரட்டல்களை விடுப்பதாலோ என்றுமே எனது குரல்களை ஒடுக்கிவிட முடியாது.எமது உறவுகளது வருகைக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்.
அச்சமூட்டல்களும் தாக்குதல்களும் உணர்வுகளை முடக்கிவிட முடியாதென்பதை மீண்டுமொருமுறை இப்போதும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எம்மீது யாழ்.நகரின் ஐந்து சந்தியினில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பினில் கூட்டமைப்பின் தலைமைக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் புகார் செய்துள்ளேன்.
அப்பட்டமாக பின் தொடர்ந்து வந்து அத்தகைய தாக்குதல்களை நடத்துபவர்கள் யாரென்பது தொடர்பினில் எவருக்கும் சொல்லி தரவேண்டியதில்லை.
நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடக்கப் போவதில்லையென்பதை மீண்டுமொரு முறை இத்தாக்குதல் அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றதென்பதை சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன்.
« PREV
NEXT »

No comments