Latest News

September 22, 2013

கனடாவிலும் இங்கிலாந்திலும் மாநாடு- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
by Unknown - 0

முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் அக-புறச் சூழலில் இலங்கைக்தீவுக்கு வெளியேயான ஈழத் தமிழர் அரசியலின் ஒர் அங்கமாக கனடாவிலும் இங்கிலாந்திலும் இரண்டு மாநாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைகொண்டு நடைபெறுகின்றதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் செப்டெம்பர் 28-29 நாட்களில் இடம்பெறுகின்ற இவ்விரு மாநாட்டிலும் துறைசார் வளஅறிஞர்கள் பலரும் பங்கெடுக்கவுள்னர்.

கனடாவில் ‘நாடு கடந்த அரசியல் தத்துவ அடிப்படைகளும் அதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கும்’ எனும் கருப்பொருளிலும் இங்கிலாந்தில் ‘முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது  ஓர் இனப்படுகொலையே என்றும் அதற்குப் பரிகாரமான முறையில் தமிழரின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தும் வழிமுறைகள் என்ன?’ என்ற கருப்பொருளிலும் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோவில் ஒருநாள் கருத்தரங்கமாக நடக்கவிருக்கும் நிகழ்வில் ‘தமிழரின் நாடு கடந்த  அரசியலின்  பலவேறு நுணுக்கமான பார்வைகள்’ என்பதே கருப்பொருளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு வளஅறிஞர்களின்  கருத்துரைகளை அடுத்து  சபையினரும் பங்குபற்றும் விவாத உiயாடல் அரங்காவும் அரங்கு விரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு மாநாடுகள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கனடா மாநாடு :

1.தமிழரின் நாடுகடந்த அரசியலும் எமது சமகால நிகழ்ச்சி நிரலும்
2.நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் சவால்கள் எதிர்காலம்
3.நாடுகடந்த அரசியலும் தமிழரின் ஒருங்கிணைவும்

ஆகிய விடயங்களில் அறிஞர்களின் கருத்துரைகள் இங்கே வழங்கப்படவுள்ளன. நூ.தமிழீழ அரசாங்கத்தின்  மதியுரைக்குழு  உறுப்பினர் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி  நிகழ்வை  நெறிப்படுத்துவார். பல அறிஞர்களின் பங்கேற்போடு  டெல்லி   ஜவகர்லால் நேரு  பல்கலைக்கழக  பேராசிரியர் கலாநிதி கலையரசனும்  காணொளி வாயிலாகப் பங்குபற்றுவார்.

புலம்பெயர் தமிழரின் நாளாந்த வாழ்வின் நாடுகடந்த தன்மை பற்றிய புதுமையான எண்ணக் கருத்துகள் ஏற்கெனவே கவனிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. ஆனால் கடந்த தசாப்தங்களில் தமது  போராட்டங்கள் எதிர்ப்புகள் மூலம் ஈழத்தமிழர் நாடுகடந்த அரசியலை தம் சுதந்திரத்திற்காக பயன்படுத்திய தன்மை என்பது நாம் தீவிரமாகக் கற்று கருத்துருவாக்கம் செய்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

நாடுகடந்த  மற்றும் சர்வதேச வீச்சில் உருவான வௌ;வேறு சமகாலத் தமிழ் அரசியல் உருவாக்கங்களோடு தமிழரின் நாடுகடந்த அரசியலின் வடிவிலும் தன்மையிலும் முள்ளி வாய்க்காலுக்குப் பின்னரான காலப் பகுதியானது ஒரு திருப்பத்தைக் குறிக்கிறது.

காணுகின்ற இந்த அரசியல்  உருவாக்கங்களில்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  கருத்தாழத்திலும் அதன் சனநாயக அரசியற் செயற்பாட்டிலும் தனித்துவமாய் உள்ளது.

தமிழரின் நாடுகடந்த அரசியல் மற்றும் அதன் நடைமுறை பற்றிய வெளி  முழுவதினதும் கோட்பாட்டுத் தெளிவுகளையும் கற்ற பாடங்களையும் அதன் கருத்தாளம் நடைமுறை பெறுமதிகளையும் ஆழமாக ஆராயவேண்டிய காலம் கனிந்துள்ளது.

தாயகத்திலும் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் தமிழரிடையேயும் ஏற்பட்டுள்ள சமகால நிலைமைகளின் அடிப்படையில் அறிஞர்கள் சமர்ப்பிக்கும் வேறுபட்ட கருத்துரைகளாலும் தொடரும் அவையினர்  கருத்தாடலாலும் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ள கருத்தரங்கம் அதற்கான ஒரு செயல்முறை  வடிவமாக  அமையும் என்பதை நிரூபிக்கும்.

இங்கிலாந்து மாநாடு :

‘இலங்கையில் தமிழினப் படுகொலையும் பொறுப்புக் கூறலும் ;அத்தோடு உலகிற்கு அதன் குறிப்பான  முக்கியத்துவமும்’  என்பது பற்றிய  லண்டன் கருத்தரங்கம் செப்ரெம்பர் 28-29 சனி ஞாயிறு இருநாட்களும் நடைபெறும். அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  மதியுரைக் குழு  உறுப்பினர் பேராசிரியர்  சொர்ணராஜா செயற்படுவார்.

இனப்படுகொலையில் ஈடுபடும் சிறிலங்காவிற்கு மட்டுமல்லாது ஏனைய நாடுகளுக்கும் ஒரு தைரியத்தை ஏற்படுத்துகின்ற  ஈழத் தமிழரின் இனப்படுகொலைக்குப் பொறுப்பானவர்களை  அதற்குப் பொறுப்புக்   கூற  வைப்பதை உறுதிப் படுத்தும் ஒன்றாகவே  இக்கருத்தரங்கு அமையும்.

இதில் இலங்கைத்தீவில் நடந்த படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களை அதற்குப் பொறுப்புக் கூறவைக்கும் வழிமுறைகள் பற்றி பரிசீலிக்கப்படும். எவ்வளவுதான் உயர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குள்ளாவதற்கான ஒரு உறுதியான செயற்பாட்டின்  முன்னுதாரணங்களாக  அவை அமையும்.

இன்று அனைத்துலக மட்டத்தில்   இடம்பெறும் பல்வேறு இனமுரண்பாடுகள் காரணமாக அப்படியான  சர்வதேச  சட்டங்களில்   வெளிப்படுகின்ற உண்மைக் கோட்பாடுகள் பாரிய முக்கியத்துவம் பெறுகின்றன. இனப்படுகொலைக்கு  பரிகாரமாக அவ்வினத்தின் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பது பற்றியும் சர்வதேச சட்டங்களில் உள்ள ஏனைய கோட்பாடுகள் பற்றியும் இந்த இருநாள் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

பேராசிரியர் பிரான்சிஸ் போயில், பேராசிரியர் சொர்ணராஜா, பேராசிரியர் பீட்டர் ஷார்க், சட்டத்தரண் டேவிட் மாடாஸ், திரு கிருபாகரன், சட்டத்தரணி அலி பெய்டோவ், திரு பிரயன் செனிவிரட்ன (கானொளி மூலம்), பேராசிரியர் மணிவண்ணன் (காணொளி மூலம்) போன்ற இன்னும் பலர் பங்கேற்க உள்ளார்கள்.

இவ்விரு மாநாடுகள் பற்றிய மேலதிக தொடர்புகளுக்கு:- லண்டன் :- பிரதி அமைச்சர் திரு மணிவண்ணன் email: manip30@gmail.com – கனடா:-  அமைச்சர் திரு நிமல் விநாயகமூர்த்தி email: nimal.vinayagamoorthy@tgte.org

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
« PREV
NEXT »

No comments