Latest News

September 04, 2013

இலங்கை அரசின் பதில் என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாகவே இருக்க முடியும்!
by admin - 0

நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் தொடர்பில் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் கருத்துக்களை பார்க்கும் போது நவநீதம்பிள்ளை ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு விஜயம் செய்யாதவராகவும் அவர் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டவர் போலவும் பொருள்படுகிறது.
ஐ.நா. என்ற அமைப்பின் ஏற்பாடுகள் உலகில் அமைதியை ஏற்படுத்துவதாகும்.
முரண்பாடுகள், வன்முறைகள், அடக்குமுறைகள், அடிமைத்தனங்கள், இனத்துவ ரீதியான பழிவாங்கல்கள் போன்ற மனித சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கும் அத்தனை விடயங்களிலும் கரிசனை கொள்வது ஐ.நா. சபையின் கடமைகளில் ஒன்றாகும்.

நிலைமை இதுவாக இருக்கையில், ஐ.நா. என்ற அமைப்பின் கனதி காத்திரத்தை தெரிந்து கொள்ளாதவர்கள் போல் இலங்கையின் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது இலங்கை ஆட்சியாளர்களின் பக்கசார் பான அரசாட்சிக்கு தக்க சான்றாகும்.
ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் கருத்துக்களை உன்னிப்பாக கேட்டறிவதும், அவர் சுட்டிக்காட்டும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதும், இலங்கையில் முழு இனங்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான சூழமைவை ஏற்படுத்துவது என்பனவே அரசின் கடமைகளாக இருக்க முடியும்.
இதைவிடுத்து ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகை தொடர்பில் கண்டபாட்டில் கதைப்பதானது இலங்கை இன்னமும் மனிதவுரிமைகளை புரிந்து கொள்ளாத நாடு என்று தீர்மானம் எடுப்பதற்கு வழிவகுக்கும்.
அதேநேரம் நவநீதம்பிள்ளை அவர்கள் வடபகுதிக்கு விஜயம் செய்த போது, போர்க்காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கதறி அழுத துயரம் சாதாரணமானது அல்ல.
காணாமல் போன தங்கள் பிள்ளைகளின் மீட்டுத் தாருங்கள் என பெற்றோரும் உறவுகளும் பிள்ளைகளும் கதறி அழுத அவலக்குரலை கேட்காத வகையில் நவநீதம்பிள்ளையின் வழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், எவ்வளவுதான் படையினரைக் குவித்து வைத்திருந்தாலும் தன் பிள்ளைக்காக தாய் கண்ணீர் விடுவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை நிரூபணமாகியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட நிட்டூரம் என்பது நவநீதம்பிள்ளைக்கு பதிலளிப்பதன் ஊடாகவோ அல்லது காணாமற் போனவர்களின் கதறல்களை நவநீதம்பிள்ளை கேட்காமல் செய்வதன் மூலமோ மறந்து, மறைக்கப்பட்டுப் போகக் கூடியது அல்ல.
போரின் வடுக்கள் தந்த இழப்பை தங்கள் இதயங்களில் சுமந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் தங்கள் இழப்புக்கான ஆற்றுகை கிடைத்தாக வேண்டும்.
« PREV
NEXT »

No comments