Latest News

September 27, 2013

வட மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் முதுகெலும்புடன் வாக்களிப்பு - ஹரீன் எம்.பி
by Unknown - 0


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு வடக்குத் தமிழர்களின் ஒருமித்த கொள்கையே காரணம். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் முதுகெலும்போடு வாக்களித்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் குறுகிய காலத்திற்குள் மாற்றமொன்றினை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் அடக்கு முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் வடக்கு தமிழ் மக்கள் தைரியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர்.

தமிழர்களுக்கு அபிவிருத்திகளை விடவும் தமது உரிமைகளே முக்கியம் என்பதை உணர்ந்து செயற்பட்டுள்ளனர். எனினும் வடமேல் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளமையானது வருந்தத்தக்க விடயமாகும்.

நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளையும் பொருளாதார சிக்கல்களையும் நன்றாக தெரிந்து கொண்ட மக்களே கண்மூடித்தனமாக செயற்படுவது கவலையளிக்கும் விடயமாகும்.

எனவே அரசாங்கம் மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதேபோன்று எமது கட்சியிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எமது கட்சியின் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இனிமேல் ஒருவர் வெளியேறுவதை நாம் விரும்பவில்லை.


தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை வைத்தாவது மக்களுக்கான உண்மையான சேவையினை செய்ய வேண்டும். எனவே அதற்கு அவசியமான மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆட்சி மாற்றும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

இராஜகிரியவில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments