Latest News

September 09, 2013

ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடரில் விஸ்வரூபம் எடுத்த சிறிலங்கா விவகாரம் !
by Unknown - 0

இலங்கைத்தீவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது பயணத்தினை தொடர்ந்து இன்று தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 24வதுகூட்டத் தொடர் தமிழர்பரப்பில் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்திருந்தது. 
இன்று தொடங்கிய கூட்டத் தொடரில் தற்காலத்தில் அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகவுள்ள சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் விவகாரமே பெரும்பாலான நாடுகளின் கவனத்தினை பெற்றிருந்தாலும் , சிறிலங்கா விவகாரமும் அமெரிக்கா ஜேர்மனி ஒஸ்றியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான பிரதிநிதி சுகிந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தீவுக்கான பயணம் குறித்த தனது கவனிப்பினை, கூட்டத் தொடரில் பின்னர் சமர்ப்பிப்பதாக தெரிவித்த ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், சிறிலங்காவின் தன்னைச் சந்தித்த மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தனது உடனடிக் கவனமாக உள்ளது தனது தொடக்கவுரையில் தெரிவித்தார்.


தொடர்ந்து இடம்பெற்றிருந்த காலை அமர்வில் இலங்கைக்கான ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது பயணத்தின் போது, அவரைச் சந்தித்தவர்களுக்கு சிறிலங்கா படையினரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பிலேயே சிறிலங்கா தொடர்பில் கருத்துரைத்த நாடுகளின் கவனம் இருந்துள்ளமை, சிறிலங்காவுக்கு மற்றுமொரு பேரிடியாக இருந்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான பிரதிநிதி சுகிந்தன் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா : ஐ.நா ஆணையாளரின் சிறிலங்கா பயணத்தை வரவேற்கின்றோம். சிறிலங்காவின் மனிதஉரிமைகள், நீதித்துறை, சனநாயக ஆட்சி குறித்த கவலைகள் தொடர்பாக ஆராய முடிந்தது. மனிதஉரிமைகள் விவகாரங்களை எதிர்கொள்வதற்கு, ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஐரோப்பிய ஒன்றியம் : ஐ.நா ஆணையாரளரின் சிறிலங்கா பயணத்தை வரவேற்கின்றோம். சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுகின்றோம். ஐ.நா ஆணiயாளர் அவர்களை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் கவலை கொள்கின்றது.



ஜேர்மனி :
 சிறிலங்காவில் ஐ.நா ஆணையாரை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது குறித்து தாம் திகைப்படைந்துள்ளோம். இது சிறிலங்காவில் உள்ள மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் மட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.


ஒஸ்ரியா : நவநீதம்பிள்ளையின் பயணத்தை அடுத்து, உள்ளூர் மனிதஉரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

« PREV
NEXT »

No comments