பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா, இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகள் புறக்கணித்து விட்டு, விமர்சனங்களில் இருந்து அந்த நாட்டை பாதுகாப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது தொடர்பில் இலங்கையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் செயற்பாட்டுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த இரண்டு சுயாதீனமான சட்ட அறிக்கைகள் சர்மாவிடம் கையளிக்கப்பட்டன.
கனேடிய அரசாங்கம் மற்றும் ஏனைய தரப்பினர் தயாரித்த இந்த அறிக்கைகளை சர்மா உறுப்பு நாடுகளுக்கு கூட வெளியிடவில்லை. இந்த அறிக்கைகளில் ஒன்று கடந்த 8 ஆம் திகதி கசிந்தது.
அந்த அறிக்கையில், பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுநலவாயத்தின் மதிப்புகள், கொள்கைகளை நேரடியாக மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவதானது, மனித உரிமைகளுக்கு ஆதரவு வழங்குவது, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பது, அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் 1991 ஹராரே பிரகடனம் குறித்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமை பிரச்சினைகள் சுட்டிக்காட்டி கடந்த 25 ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவில் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட அறிக்கையானது, கொழும்பு மாநாட்டில் பொதுநலவாய மற்றும் அதன் உறுப்பு நாடுகள் பங்கேற்பது தொடர்பில் ஆபத்தையும் பெரும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமை பேரவையில் உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் தற்போதை மனித உரிமைகள் தொடர்பான அக்கறை மற்றும் இலங்கையின் ஆயுத மோதலில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான அல்லது பொறுப்புக் கூறும் விசாரணைகளை நடத்த தவறியுள்ளதாக கூறியிருந்தார்.
எனினும் பொதுநலவாய அமைச்சர்களின் செயற்பாட்டுக்குழு மற்றும் அந்த அமைப்பின் செயலகமே இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விவாதிக்க மறுத்து விட்டன.
மனித உரிமை ஆணையாளர் நவி.பிள்ளை, இலங்கையின் மோசமான நிலைமை தொடர்பாக குரல் எழுப்பியிருந்ததுடன் மோதலின் போதும் மோதலுக்கு பின்னரும் பிரச்சினைகளை பட்டியலிட்டிருந்தார்.
இது பொதுநலவாய அமைப்பின் மதிப்புகள் தொடர்பில் முரண்பாடான நிலைமையாகும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்தார்.
இதனால் பொதுநலவாய அமைப்பும் அதன் தலைவர்களும் இலங்கையின் கடுமையான மனித உரிமை பிரச்சினைகளை புறந்தள்ளி விடக் கூடாது எனவும் அவர் கூறினார்.
No comments
Post a Comment