Latest News

September 17, 2013

நீதிமன்றை ஏமாற்றினார் நேற்று அமைச்சர் டக்ளஸ் -உதயன்
by admin - 0

உடல் நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தில் முற்பட முடியவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சட்டத்தரணி யாழ்.மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தெரிவித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் யாழ்.பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல்லை நட்டார் அமைச்சர் டக்ளஸ். அமைச்சர் டலஸ் அழகப் பெரும, வடக்கு மாகாண ஆளுநர் ஜி. ஏ.சந்திரசிறி ஆகியோரும் நூற்றுக்கணக்கான மக்களும் சாட்சியாக இருந்து அமைச்சர் டக்ளஸ் ஆரோக்கியமாக இருந்ததைக் காணுகையில், அமைச்சர் டக்ளஸ் உடல் நலக்குறைவால் நீதிமன்றுக்கு வரமுடிய வில்லை என்றும் அவரது சட்டத்தரணி அப்துல் மஜீத் நீதி மன்றில் சமர்ப்பணம் செய்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க ராஜதந்திரிகளின் ஆவணங்களில் அமைச்சர் டக்ளஸ் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை பிரசுரித்தமைக்காக உதயன் பத்திரிகைக்கு எதிராக அவர் யாழ்.மாவட்ட நீதிமன்றில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந் தார். 1000 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி அவர் தொடர்ந்த இந்த வழக்கு நேற்று விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விளக்கத்தின் போது முறைப்பாட்டாளரான அமைச்சர் டக்ளஸ் மன்றில் தோன்றியிருக்க வேண்டியது அவசியம் என்ற போதும் அவர் நேற்று நீதிமன்றுக்கு வரவில்லை. இதனை நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டிய உதயன் தரப்புச் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (நாடாளுமன்ற உறுப்பினர்) அரசமைப்பின் 87 ஆவது உறுப்புரிமை பிரிவு ஒன்றின் கீழ் விளக்கத்தின் போது மன்றில் முறைப்பாட்டாளர் தோன்றியிருக்கா விடின் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸின் சட்டத்தரணி உடல் நலக் குறைவு காரணமாகவே அமைச்சர் மன்றுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். அவ்வாறாயின் அதற்குரிய மருத்துவ ஆதாரங்களை மன்றுக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும் என சட்டத்தரணி சுமந்திரன் எதிர் வாதிட்டார். உரிய மருத்துவ ஆதாரங்களை மன்றின் முன் சமர்ப்பிப்பதாக சட்டத் தரணி மஜீத் உறுதியளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மருத்துவ ஆதாரங்களை மன்றின் முன் சமர்ப்பிக்கும் படி கூறியதுடன் வழக்கை விளக்கத்துக்காக டிசெம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். வழக்கு நடை பெற்றுக்கொண்டிருந்த சுமார் 10 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தேகாரோக்கியத்துடன் வலம் வந்து கொண்டிருந்தார். காலை 9.30 மணிக்கே அவர் அந்த இடத்துக்கு வந்துவிட்டார் எனச்சாட்சிகள் பலர் உதயனிடம் தெரிவித்தனர். அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உள்ளிட்ட பிரமுகர்களுடன் அவர் சர்வதேசப் பல் கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் டக்ளஸின் நெருங்கிய சகாவுமான மு.சந்திரகுமாரும் நிகழ்வில் உடனிருந்தார். இதற்கான ஒளிப்பட, காணொளி ஆதாரங்களும் நூற்றுக்கணக்கான சாட்சிகளும் உதயன் வசம் உள்ளன.
« PREV
NEXT »

No comments