வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது உறுதி. சிங்களக் கட்சிகள் எல்லாவற்றையும் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக நிராகரித்தே வந்திருக்கிறார்கள். இம்முறைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமது வாக்குகளின் மூலமாகச் சிங்களத்துக்கும் அனைத்துலகுக்கும் தெளிவானதொரு செய்தியினைச் சொல்வார்கள்.
• மாகாணசபை தொடர்பான வாதப்பிரதிவாதங்களைக் கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகின்றது. மாகாணசபைப் பொறிக்குள் சிக்குண்டு போகாமல் தமிழரின் உரிமைப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது?
• மாகாணசபை ஒரு செத்த பிணமாக ஆகி ஆண்டுகள் பல கடந்து விட்டன - சம்பந்தர் அவர்கள் மே 2009 இன் பின் கூறியது.
• தேர்தலில் பங்கு பற்றுவதால் மாகாணசபைகளை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என அர்த்தம் கண்டு விட முடியாது.
• சிறிலங்கா அரசு மீளமுடியாத அளவுக்கு இனவெறி அரசாக மாற்றம் கண்டு விட்டது.
• மாகாணசபை அணுகுமுறை தோல்வியடைவதனைப் பயன்படுத்தி தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி நகர்த்த வேண்டும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது உறுதி. சிங்களக் கட்சிகள் எல்லாவற்றையும் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக நிராகரித்தே வந்திருக்கிறார்கள். இம்முறைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமது வாக்குகளின் மூலமாகச் சிங்களத்துக்கும் அனைத்துலகுக்கும் தெளிவானதொரு செய்தியினைச் சொல்வார்கள்.
தமிழர்கள் தம்மைத்தாமே ஆள முடியுமே தவிர வேறு எந்த அந்நியராலும் தமிழ் மக்களது மனங்களை வெல்ல முடியாது என்பதே அந்தச் செய்தி. இதேவேளை இப்போது நம் முன்னால் உள்ள கவலையெல்லாம் மாகாணசபைப் பொறிக்குள் சிக்குண்டு போகாமல் தமிழரின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் இருந்து பெறும் ஒவ்வொரு வாக்குக்கும் தாம் விசுவாசமாக இருந்து தமிழர் தேசத்தின் விடுதலைக் கனவை வலுப்படுத்த வேண்டும்» இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வடமாகாண தேர்தல் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசவையின் விவாதம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படின் அதனைத் தமிழர் தேசம் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் எல்லாவற்றையும் கடந்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
நாமும் தமிழர் தேசத்தின் அங்கமாகிய புலம்பெயர் தமிழ் மக்களால் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு என்ற வகையிலும், சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தாயகத்தினை அமைப்பதற்காக அரசியல் இராஜதந்திரரீதியில் போராடும் அமைப்பு என்ற வகையிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாட்டினைத் தமிழ் மக்களுக்கு இவ்வேளையில் வெளிப்படுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம்.
எம்மைப் பொறுத்தவரை 13வது திருத்தச் சட்டமோ அல்லது மாகாணசபையோ - கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்கள் மே 2009 க்கு பின்னர் ஒரு தடவை பி.பி.சி தமிழோசை செவ்வியில் குறிப்பிட்டது போல - ஒரு செத்த பிணமாக ஆகி ஆண்டுகள் பல கடந்து விட்டன.
இப் பிணத்தை உரிய முறையில் தகனமோ அல்லது அடக்கமோ செய்யாது இதனை உயிர்ப்பிக்கும் முயற்சியில் சில அனைத்துலக அரசுகள் தமது நலன்கள் சார்ந்து இறங்கியிருக்கின்றன. இதனை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்பதனை நன்கு அறிந்திருந்தும் தமிழர் உரிமைப் போராட்டத்தை சிதைத்து விடும் உத்தியோடு மாகாணசபையைக் கண்டு அஞ்சுவது போல சிங்கள அரசு நாடகம் ஆடுகிறது.
இத்தகையதொரு சூழலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மாகாணசபை என்பது அர்த்தமற்ற ஒரு பெரும் கோறையென நன்கு தெரிந்திருந்தும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்கும் நோக்குடன் இத் தேர்தலில் போட்டியிடுகின்றது எனவே நாம் கருதுகிறோம். இவ்விடத்தில் அனைத்துலக சமூகத்தைக் கையாளல் தொடர்பாக எமது கருத்தினையும் பதிவு செய்தாக வேண்டும்.
அனைத்துலக சமூகம் எனும் போது இது பெரும்பாலும் அரசுகளையே குறித்து நிற்கிறது. அரசுகள் ஆடை அணிவதில்லை என்றும் அதனால் அவை எவ்வித வெட்கமுமின்றித் தமது நலன்களை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் செய்யக் கூடியன என்றும் கூற்றொன்று உண்டு.
எனவேதான் அரசுகளைக் கையாளும் போது இந்த அரசுகளின் நலனையும் நமது நலனையும் நாம் இணைய வைக்க முயல வேண்டுமே தவிர அரசுகளின் ஆதரவினை வென்றெடுப்பதற்காகவென நாம் நமக்குரிய நலன்களைக் கைவிட முடியாது. இந்த அணுகுமுறையினைத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என நாம் தோழமையுடன் வேண்டுகிறோம்.
சிறிலங்கா அரசு என்பது சிங்கள பௌத்த இனவாதம் என்ற புற்றுநோயால் முழுமையாகப் பீடிக்கப்பட்ட நிறுவனமாகி விட்டது. சிறிலங்காவின் பாராளுமன்றமோ அல்லது அரச நிர்வாக இயந்திரமோ அல்லது நீதி நிறுவனமோ, இவை எவையுமே தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை.
ஒரு தேசமாக, சமத்துவமான மக்கள் கூட்டமாக எம்மை ஏற்றுக் கொள்ளவும் போவதில்லை. இந்த அரச நிறுவனங்களிடம் மாகாணசபையின் ஊடாகவோ அல்லது எந்த வேறு முறைமையின் ஊடாகவோ அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் போராடினால்கூட நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது.
சிறிலங்கா அரசு இனி மீளமுடியாத அளவுக்கு இனவெறி அரசாக மாற்றம் கண்டு விட்டது. இதனால் சிறிலங்கா அரசு என்று கட்டுக்குள் இருந்து விடுபட்டுத்தான் ஈழத் தமிழர் தேசம் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு நன்கு புரியும் என்றே நாம் கருதுகிறோம்.
இன்றைய சூழலில் நடைபெறும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியினைப் பெற வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
இதற்கமைய வாக்களிக்குமாறு நமது மக்களையும் கோருகிறோம். அவ்வேண்டுகோளின் அர்த்தம் நாம் மாகாணசபைகளைச் சகித்துக்கொள்கிறோம் என்றோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலோடு உடன்படுகிறோம் என்பதோ அல்ல. இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரித்து நிற்கின்ற கட்சிகளோ அல்லது ஏனைய சிங்களக் கட்சிகளோ வாக்குகளைப் பெறக்கூடாது என்ற அக்கறையுடன்தான் நமது விருப்பம் எழுகிறது.
தமிழர் என்ற நமது தேசிய அடையாளத்தை மறுதலித்து எம் எல்லோரையும் சிறிலங்கர்» என்ற சிங்கள அடையாளத்துக்குள் புதைத்து விடுவதில் அனைத்துச் சிங்களக் கட்சிகளும் மிக அக்கறையாகவே உள்ளன. நமது தேசிய தனித்துவத்தை வெளிப்படுத்தலும் நம்மை ஒரு தேசமாக - ஒரு அரசினை எமக்கென அமைத்துக் கொள்வதில் பெருவிருப்புக் கொண்ட மக்களாக - பேணிக் கொள்ளலும் அதனை வெளிப்படுத்தலும் நமது போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்பதற்கு முக்கியமானவை.
இலங்கைத்தீவில் அரசியல்வெளி மறுக்கப்பட்ட மக்களாக வாழும் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் மிக வரையறுக்கப்பட்ட வாய்ப்புக்களுக்கூடாக நாம் தனித்துவமான தேசம் என்பதனை உலகறையப் பறைசாற்றும் வகையில் இத் தேர்தல் முடிவுகள் அமைவது காலத்தின் தேவையாக உள்ளது எனும் காரணத்தாலும்தான் இந்த நமது முடிவு எழுகிறது. இதனை நாம் எமது அரசவையில் விவாதித்து ஒரு தீர்மானமாக எடுத்துள்ளோம்.
நமது இந்த முடிவினைப்போலத்தான், எமது மனநிலை போலத்தான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரதும், பங்கு பற்றி வாக்களிக்கும்; மக்கள் அநேகரதும் முடிவும் மனநிலையும் இருக்கும் என்றே நாம் கருதுகிறோம். தேர்தலில் பங்கு பற்றி வாக்களிக்கும் காரணத்தால் மாகாணசபைகளை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றோ வடக்கு கிழக்குப் பிரிப்பை அங்கீகரிக்கிறார்கள் என்றோ எவரும் அர்த்தம் கண்டு விட முடியாது.
இன்று நமது மக்கள் தெரிவுகள் மிகக் குறைந்த நிலையில் விடப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை தமிழர் தேசியக்கூட்டமைப்பினை நமது விடுதலைப் போராட்டப் பாதையின்; தாயகத் தொடர்ச்சியாகவே நோக்குகிறார்கள். அவர்களை ஆதரிக்கிறார்கள்.
எனவேதான் தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்கைள ஆகுதியாக்கிய அனைத்துப் போராளிகளதும் ஆன்மாக்களைக் காயப்படுத்தாத வகையில், மக்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்து செயற்பட வேண்டியது தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமையாகிறது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியடைந்த பின்னர் மாகாணசபையின் செயற்பாட்டினை ஆளுனர் ஊடாகவும் சிங்கள நிர்வாக இயந்திரத்துக்கூடாகவும் சிறிலங்கா அரசு முடக்கிவிடும். சட்ட வழிமுறைகட்கூடாகப் பெரிதாக ஏதும் சாதிக்க முடியும் என நாம் கனவு காணமுடியாது.
ஏனெனில் சட்டங்களை இயற்றுவது சிங்களப் பாராளுமன்றம் மட்டுமே. சிங்கள மயப்பட்ட நீதிமன்றம் நமக்கு நீதி வழங்கப் போவதில்லை. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்களை பிரித்தது உச்ச நீதிமன்றம்தான். மீளவும் வடக்குக் கிழக்கு இணைப்பதற்;கு சிங்களப் பாராளுமன்றம் என்றும் அங்கீகாரம் வழங்கப் போவதுமில்லை.
இதேவேளையில் இச் சிங்கள நிறுவனங்கள் யாவும் 'ஜனநாயக' நிறுவனங்களாக தம்மை வெளிப்படுத்துவதால் ஒரு கட்டத்துக்கு மேல் அனைத்துலக சமூகத்தினால் இந்த நிறுவனங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்க முடியாது. மேலும் அனைத்துலக அரசுகளுக்கு விருப்பமான முறையில் இன்றைய அரசாங்கம் தன்னை மாற்றிக் கொண்டாலோ அல்லது அனைத்துலக அரசுகள் விரும்பும் வகையிலான ஆட்சிமாற்றம் நடைபெற்றாலோ தமிழர் நாம் கைவிடப்படுவோம் என்பதும் ஓர் அரசியல் யதார்த்தம்.
இத்தகையதொரு சூழலில், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி நகர்த்துவதற்கு மாகாணசபை அணுகுமுறை தோல்வியடைவதனைப் பயன்படுத்துவோம் என்ற முடிவினைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இப்போதே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாகாணசபையில் பங்குபற்றுவதனால் வரும் பட்டறிவினையும் கொண்டு சிறிலங்கா என்ற அரச கட்டமைப்புக்குள் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்ற நிலைப்பாட்டினைப் பகிரங்கமாக அனைத்துலக சமூகத்திடம் முன்வைக்க வேண்டும்.
மக்களை அணிதிரட்டியவாறு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும,; தமிழகத்திலும,; உலகில் தமிழர் வாழும் நாடுகளெங்கும் நீதிக்காகத் தோழமையுடன் கரம் கோர்க்கக்கூடிய அனைத்துலக மக்களுடன் கைகோர்த்தவாறு அரசியல் இராஜதந்திர ரீதியில் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
அதனையே வரலாறு எம்மிடம் எதிர்பார்க்கிறது. வரலாற்றின் இந்த வேண்டுதலுக்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உரிய மதிப்பளிக்கும் என்றே நாம் நம்புகிறோம்».
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்களால் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment