Latest News

September 26, 2013

6 – விமர்சனம்
by admin - 0

ஷாம் தமிழ் சினிமாவில் சொகுசாய் கதாநாயகனாக அறிமுகமானவர். முதல்படத்திலேயே சிம்ரன், ஜோதிகா ஜோடி என மறைந்த இயக்குநர்-ஒளிப்பதிவாளர் ஜீவாவால் அட்டகாசமாய் அறிமுகப்படுத்தப்பட்டவர். ஆனாலும் அதன் பின் அந்த கதாநாயக இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் அவருக்கு தொடர் போராட்டம் தான். கதைகளை கேட்பதில் பல குழறுபடிகள், பந்தாக்கள், சினிமாவை ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு அலட்சியமா இருக்காரு என பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. மேலும் அவர் நடித்து வந்த எந்தப் படங்களும் ஹிட்டாகாமல் போக இவர் பாடு இன்னமும் திண்டாட்டமாகியது.

தெலுங்கில் கிக் படத்தின் மூலம் ஒரு வித்தியாசமான காரக்டரில் அறிமுகமாகி அங்கே கொஞ்சம் பிஸியானாலும் தமிழ் சினிமா அவருக்கு கானல் நீராகவே இருந்தது.

விளைவு தானே தயாரிக்கலாம் என முடிவுசெய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த 6 படம். ‘முகவரி’ துரையின் இயக்த்தில் ஷாம் மீது இருந்த இமைஜை மொத்தமாய் உடைக்கிறது இந்தப் படம்.

ஷாம்., பூனம் கவுர் ஜோடிக்கு ஒரு மகன், கௌதம். 6வது பர்த்டே கொண்டாடி முடித்த கையோடு பீச்சில் பையன் காணாமல் போக, அவனைத் தேடி அலையும் தந்தையின் பரிதாப போராட்டம் தான் இந்தப் படம். அதில் இயக்குநர் காட்டியிருக்கும் உலகமும், மக்களும் அதிர்ச்சி.

மெரினா பீச்சோரம் உள்ள குப்பத்தில் இருக்கும் பிச்சைக்காரனின் காலில் விழுந்து பூனம் கவுர் கதறுவதில் இருந்து படம் நம்மை பல இடங்களில் கலங்கடிக்கிறது. நகரி, வாராங்கல், போபால், மும்பை, கல்கத்தா என பல இடங்களுக்கு இழுத்துச்சென்று.

தன் மகனை மீட்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராயிருக்கும் தந்தையாய் ஷாம், நானும் ஒரு நல்ல நடிகன்தான் என முதல் முறையாய் நிரூபிக்கிறார்.  அதிலும் பெரும் சிரத்தையெடுத்து கிட்டத்தட்ட பரதேசியாய் அலையும் கோலம் பரிதாபத்தை வரவழைக்கிறது. பாராட்டுக்கள்.

படத்தில் வரும் வில்லன்கள் பலவிதம்.. ஒவ்வொருவரும் ஒருவிதம். போபாலில் வரும் அந்த மலையாளம் பேசும் பெண்மை கலந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் அட்டகாசம். அச்சு அசலாய் அது போல சிலரை எனக்கும் தெரியும் என்ற வகையில் அவரது நடிப்பு பர்பெக்சன்.பூனம் கபூர் மகனை தொலைத்து கதறித்தவிக்கும் தாயாய் பரிதாபமாய்.

கூடவே வரும் அந்த டாக்ஸி ட்ரைவர் ரங்கனின் இயல்பான முகமும், பேச்சும் நடிகன் என்ற நிலையைத் தாண்டிய ஒட்டுதலை குடுக்கிறது. இறுதியில் அவரது வாக்கு மூலம் கைதட்டலை வாங்குகிறது.

‘ட்ரேட்’ வகை படம் என்றாலும் அவற்றை ஒரு இன்ஸ்பைரேசனாக வைத்துக்கொண்டு இதில் இயக்குநர் VZ. துரை நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். அவரது ஹோம்வொர்க் காட்சிகளிலும், லொகேசன்களிலும், அந்தந்த இடங்களில் இருப்பவர்கள் என நம்ப வைக்கும் கதாபாத்திரங்களிலும் தெரிகிறது. கரீம் நகர் மாட்டுச்சந்தை காட்சிகள் நெஞ்சைத் பதற வைப்பவை.  தொட்டி ஜெயா, நேபாளி என சறுக்கிக்கொண்டிருந்தவர் இதில் நிமிர்ந்து எழுந்து நிற்கிறார்.

ஷாமின் முகபாவனையில் தெரியும் வலியும் வேதனையும் ஏனோ அவரது டயலாக் டெலிவரியில் வர மறுக்கிறது. ஜெயமோகன் வசனமாம். ஒரே டோனில் பேசுவதால் படத்தில் இறுதிப் பகுதியில் வரும் நிறைய வசனங்கள் கொஞ்சம் வளவளவாய் இழுக்கின்றன.  ஒரே மாதிரி பேசும் டயலாக்குகளை கத்தரித்திருக்கலாம். ஷாம் டயலாக் மாடுலேசனும் இன்னும் சிரத்தை எடுத்தால் நடிப்பில் அடுத்த கட்டத்தை அடையலாம்.

வாழ்க்கை நம்மை அலைய விடும்போது, விதி நம் வாழ்க்கையை புரட்டிப்போடும் போது.. ஒரு 6 மாத காலத்தில் தந்தையை அடையாளம் தெரியாத மகன், இவன் தான் தன் மகன் என உணர பல நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் தந்தை என அந்தக் காட்சி சத்தமே இல்லாமல் நெகிழ வைக்கிறது.

பல வருடமாய் தயாரிப்பில் கிடந்து போராடும் படங்கள் வெளிவரும் போது அவை சிக்கிச்சின்னாபின்னமாகியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அது போன்ற குறைகள் மிகச்சிலவே. ஆரம்பித்த அஞ்சாவது நிமிடத்துற்குள் கதைக்குள் நம்மை இழுத்துச்சென்று ஒரு இரண்டுமணிநேரம் கட்டிப்போட்டு இருட்டு உலகிற்குள் தவிப்பாய் நம்மையும் ஷாமுடன் பயணிக்க வைத்து ஜெயிக்கிறது இந்த 6.

தன் திறமையே நிரூபிக்க தானே தயாரிப்பு பொருப்பையும் எடுத்துக்கொண்ட ஷாமும், இத்தனை போராட்டங்களுக்குப்பின்னும் சொல்லவந்த கதையை தெளிவான படமாய் கொண்டுவந்த இயக்குநர் வி.இசட். துரையும் அத்தனை பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள். வாழ்த்துக்கள்
« PREV
NEXT »

No comments