Latest News

September 20, 2013

3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்...!!!
by Unknown - 0

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறுகின்றது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மூன்று மாகாண சபைகளிலுமிருந்து 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கென 43 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மூன்று மாகாண சபைகளிலும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நடைபெறும் 10 மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படும். ஆகையினால் வாக்காளர்கள் நேரகாலத்துடனேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்குகளை வழங்குவதன் மூலம் ஜனநாயக உரிமையை முறையாக பயன்படுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் கடமைகளுக்கு 40 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்களை தேர்தல் திணைக்களம் நியமித்துள்ளது.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களைக் கண்காணிப்பதில் 8000ற்கும் அதிகமான உள்ளூர் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான பவ்ரல், கபே மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஆகிய அமைப்புக்களின் சார்பில் தேர்தல் நடைபெறும் 10 மாவட்டங்களிலும் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப் பெட்டிகள் யாவும் இன்று அந்தந்த மாவட்டத்துக்குரிய தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். இம்முறை அநேகமான வாக்களிப்பு நிலையங்களில் பிளாஸ்டிக்கிலான வாக்குப் பெட்டிகளை தேர்தல்கள் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் முழுமையாக பிளாஸ்டிக்கிலான வாக்குப் பெட்டிகளே பயன்படுத்தப்படவுள்ள நிலையில் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்துக்கு மாத்திரம் 46 பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் ஏற்படக்கூடிய வீணான தாமதம் மற்றும் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களை தம்முடன் எடுத்துச் செல்லல் வேண்டும்.
வாக்காளர்கள் தமது வாக்குகள் நிராகரிக்கப்படாத வகையில் தாம் விரும்பிய கட்சிக்கோ அல்லது சுயேச்சைக் குழுவுக்கோ புள்ளடியிட்டதன் பின்னர் விரும்பு வாக்குகளை ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அல்லது மூவருக்கோ தெரிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்கள்
வாக்களிப்பு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்கெண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். 377 வாக்களிப்பு நிலையத்தில் இந்த வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
முதலாவது தேர்தல் பெறுபேறாக தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments