குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய ரத்துபஸ்வல மக்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்துமாறு கட்டளையிட்டது யார் என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும் என ஊடக அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடக அமைப்புகள் கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தின.
இதில் கலந்து கொண்ட சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்து கொண்டார்.
அமைதியான போராட்டத்தின் மீது யார் துப்பாக்கிச் சூட்டை நடத்துமாறு ஆணையிட்டது யார் என தான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார்.
இங்கு உரையாற்றிய இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் லசந்த ருகுணுகே, சம்பவத்தில் ஊடகவியலாளர்களும் காயமடைந்தனர் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர்கள் மறைந்து இரவு நேரத்தை கழிக்க நேர்ந்தது. இப்படியான சம்பவங்கள் தொடர்பாக செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றால் ஏன் அவர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என கேள்வி எழுப்ப நேரிடும் என்றார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சந்தன சிறிமல்வத்த, குடிநீர் போன்ற மனிதர்களின் அடிப்படை உரிமையை கூட அரசாங்கத்தினால் வழங்க முடியாதுள்ளது என கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசாங்கம் மக்கள் பக்கமா அல்லது பணத்தை முதலீடு செய்தவர்களின் பக்கமா என்பது, இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகியுள்ளது என தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுதந்திர ஊடக அமைப்பின் செயலாளர் குமார அழகியவண்ண, சம்பவம் நடைபெற்ற போது இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்து, 05 நிமிடங்களில் அங்கிருந்து கலைந்து கொள்ளுமாறு உத்தரவிட்டதாக கூறினார்.
அப்போது அங்கிருந்த தாய் ஒருவர், “அப்படி செய்ய வேண்டாம், போரில் ஈடுபட்டிருந்த போது, உங்களுக்காக நாங்கள் போதி பூஜைகளை நடத்தியவர்கள்” என தெரிவித்தார்.
அதற்கு அந்த தாயிடம் பதிலளித்த இராணுவ அதிகாரி அது தமக்கு தேவையற்றது என கூறியதாக அழகியவண்ண குறிப்பிட்டார்.
No comments
Post a Comment