Latest News

August 07, 2013

வெலிவேரிய சம்பவம் அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு : சுமந்திரன்
by admin - 0

அரசாங்கத்திற்கு எதிராக எவரும் கிளர்ந்தொழுந்தால் வெலிவேரியவில் இடம்பெற்றதே அவர்களுக்கும் நடக்கும் என்பதை வெளிப்படுத்தவே இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவேரிய சம்பவத்தில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் மேலும் சிலர் பலியாகியும், காயங்களுக்கு உள்ளாகியும் இருக்கலாம். இதனை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் உள்ளது.

குடிநீர் கேட்டுப் போராடிய அப்பாவிப் பொதுமக்களுக்கு அரசாங்கம் துப்பாக்கி முனையால் பதில் கொடுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தை கலைக்க உயிர்களை காவுகொள்வதற்கான எவ்வித அவசியமும் இல்லை. இது வேண்டும் என்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவரும் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியாது. அவ்வாறு எவரும் செயற்பட்டால் அவர்களுக்கு வெலிவேரியவில் இடம்பெற்றதே கிடைக்கும் என்பதை வெளிப்படையாக புரியவைக்கவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நாட்டில் அன்று அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது. அதனையடுத்து முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. தற்போது இது சிங்கள மக்களுக்கு எதிராக திரும்பியுள்ளது.

வெலிவேரியவில் மூவர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்ற நிலையில், வன்னியில் குறைந்தது 70 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கும் சர்வதேச விசாரணை அவசியம் என்பதனையே ஐ.நா. வலியுறுத்தியது.

எமது நாட்டிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயர் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments