Latest News

August 16, 2013

வடக்கில் எதிரணி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் : ஐ.தே.க. வேட்பாளர் டினேஷ்
by admin - 0

வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளர்களின் பெயர் விபரங்களை கேட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான டினேஷ் ரவிச்சந்திரராஜா தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தம்மை பாதுகாப்பு அமைச்சில் இருந்து வருவதாக அடையாளப்படுத்தும் சிலரால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் கேட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கம் இம் முறை வடக்குத் தேர்தலில் தோல்வி அடைவது உறுதி. அந்தவகையிலேயே இவ்வாறு எதிரணி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கின் வசந்தம் மற்றும் அபிவிருத்தி என்று பாரிய பிரசாரத்தை முன்னெடுத்து வரும் அரசாங்கம் அங்கு எவ்வித அடிப்படை அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
கொழும்பில் இருந்து வடக்கிற்கு செல்லும் பிரதான வீதி செப்பனிட்டதையே அபிவிருத்தி என்கின்றது. இந்நிலையில் அங்குள்ள பல உள்வீதிகள் எவ்வித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே உள்ளன. இந்த வீதி அபிவிருத்தியானது மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டதல்ல.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்தும் எவ்வித அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. இலங்கையிலேயே அதிகமான விதவைகள் உள்ள மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் விளங்குகின்றன.
எனவே, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு நல்ல பாடத்தை புகட்டுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments