அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் வருவதை தடுப்பதற்கு ஆட்கடத்தலில் ஈடுபடும் இந்தோனேசியர்களிடமிருந்து அவர்களால் பயன்படுத்தப்படும் மோசமான நிலையிலுள்ள படகுகளை வாங்குவதற்கான தனது திட்டத்தை அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவரான டோனி அப்பொட் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக வரக்கூடிய முன்னணி வேட்பாளராக டோனி அப்பொட் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூத்தை விட டோனி அப்பொட்டே முன்னிலையில் உள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவிலுள்ள ஆட்கடத்தலில் ஈடுபடும் குழுக்களின் உதவியுடன் படகுகளில் அபாயகரமான கடல் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வருவது வழமையாகவுள்ளது.
இதன் காரணமாக அவுஸ்திரேலிய தேர்தல் பிரசாரங்களில் புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை முறியடிப்பது செல்வாக்கு செலுத்தும் விடயமாக மாறியுள்ளது.
இந்நிலையில் டார்வின் நகரில் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய டோனி அப்பொட் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களிடமிருந்து படகுகளை வாங்கும் தனது திட்டம் குறித்து தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் வருவதைக் தடுப்பதற்கான தனது 440 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான திட்டமானது ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் மேற்படி மோசமான மீன்பிடிப் படகுகளை கட்டணம் செலுத்தி வாங்குவதுடன் இந்தோனேசியாவிலுள்ள 100 கிராங்களில் ஆட்கடத்தல் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு ஆட்களை நியமிப்பது, ஆட்கடத்தல் தொடர்பில் வெற்றிகரமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்குவது என்பவற்றை உள்ளடக்கியுள்ளதாக டோனி அப்பொட் கூறினார்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு செலவிடப்படும் 12 மில்லியன் டொலரை விட இந்தோனேசியாவில் சில ஆயிரக்கான டொலர்களை செலவிட சிபாரிசு
செய்யும் தனது திட்டம் சிறந்தது என அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்தோனேசியா ஆட்கடத்தல்காரர்களிடமிருந்து மோசமான நிலையிலுள்ள படகொன்றை கொள்வனவு செய்வதற்கு எவ்வளவு பணத்தை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து கூற அவர் மறுத்துள்ளார்.
அத்துடன், ஆட்கடத்தலை தடுக்கும் முகமாக இந்தோனேசியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விசேட அவுஸ்திரேலிய பொலிஸாரை நியமிக்க 67 மில்லியன் டொலரை செலவிடவுள்ளதாகவும்டோனி அப்பொட் கூறினார்.
இதுதொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் டோனி பார்க் விபரிக்கையில், அபொட்டின் கொள்கையானது அபத்தமானது எனவும் அது இந்தோனேசிய கப்பல் நிர்மாண தொழிற்றுறைக்கு மட்டுமே அனுகூலமளிக்கும் ஒன்றென தெரிவித்தார்.
No comments
Post a Comment