Latest News

August 11, 2013

யுத்த குற்றம் புரிந்த இராணுவ படையே வெலிவேரியாவில் தாக்குதல் நடத்தியது
by admin - 0

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கண்டி - கொழும்பு ஏ – 01 பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்த நேரம் அது. சூரியன் உறங்கச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த அந்தப் பொழுதில், கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நோக்கி ஒரு இராணுவ வாகனம் நகர்கிறது பெலும்மஹர சந்தியை நோக்கி.கம்பீரமாய் ஒரு இராணுவ அதிகாரி இறங்கி சுற்றும் முற்றும் நோட்டமிடுகிறார். ஆம் அவர்தான் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 58-2 அல்லது 58-3 ஆம் படைப்பிரிவில் சேவையாற்றியவரே இந்த பிரிகேடியர் தேசப்பிரிய. இந்த படைப்பிரிவானது பரவலான யுத்தகுற்ற சந்தேகங்களில் பெயரிடப்பட்டுள்ள தற்போதைய ஐ.நா.வுக்கான இலங்கையின் தூதுவர் சவேந்திர சில்வாவின் கீழ் இயங்கியதாகும். அந்த யுத்த தந்திர நுணுக்கங்களை அறிந்திருந்த குறித்த பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன அங்கிருந்த இராணுவ கெப் வண்டியில் ஏறிநின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி அபாய எச்சரிக்கையை விடுக்கலானார்.
''எங்களுக்கு தெரியும் உங்களுக்கு தண்ணீர் தொடர்பில் பிரச்சினை ஒன்று உள்ளது. அவற்றை இப்போது தீர்த்துக்கொண்டு வருகின்றோம். பாதுகாப்பு செயலாளருடன் இப்போதும் உங்களது பிரதிநிதிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் பிரதிபலன் இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள் உங்களை வந்து சேரும். அதனால் உங்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டிருக்கிறோம். அதனடிப்படையில் நீங்கள் அனைவரும் இன்னும் 5 நிமிடங்களில் இவ்விடத்திலிருந்து உடனடியாக கலைந்து செல்லுங்கள். இல்லையேல் உங்களை இவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிவரும்.'' இதுவே அந்த எச்சரிக்கை. இதன் போது அங்கிருந்த ஒரு பெண்,'' நாங்கள் இங்கு பிரச்சினை செய்ய வரவில்லை. குடிக்க நீர் கேட்டே வந்துள்ளோம். தயவு செய்து அவ்வாறு செய்து விடாதீர்கள் '' என மன்றாடுவதற்குள் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கெப் வண்டியிலிருந்து இறங்குவதற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். எனினும் வன்முறையில் அவர்கள் இறங்கவில்லை. வார்த்தைகளாலேயே கோஷம் எழுப்பினர்.
பொது மக்கள் மீது திடீர் என
நடத்தப்பட்ட தாக்குதல்
பிரிகேடியர் எச்சரித்து சென்று 5 நிமிடங்களிலேயே '' ட்ரேல் '' ரக மோட்டார் சைக்கிள்களில் சில இராணுவ வீரர்கள் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து இராணுவ வண்டியில் பல இராணுவ வீரர்கள் வந்திறங்கினர். இறங்கியதுதான் தாமதம். தமது கைகளில் இருந்த பொல்லுகளால் ஆர்ப்பாட்டக்காரர்களை சரமாரியாக தாக்கினர். கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபப் பெண்கள், அங்கவீனர்கள் என எவரையும் இராணுவம் பிரித்து பார்க்கவில்லை. குழந்தைகளை இடுப்பில் சுமந்துகொண்டு தாய்மாரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வயோதிபர்களும் கர்ப்பிணிப் பெண்களும், ஏனையோரும் தலை தெறிக்க ஓடினர். பொல்லுகளால் தாக்கியபோது பலர் நடு வீதியிலேயே சுருண்டு விழுந்தனர். திசை தெரியாது ஓடிய பொதுமக்கள் மூலை முடுக்குகளுக்குள் ஒழிந்து தமது உயிரை காக்க போராடினர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் 10 நிமிடங்களுக்குள்ளேயே கலைக்கப்பட்டது. பெலும்மஹர சந்தி வெறிச்சோடியது.
ஆர்ப்பாட்டம் ஏன்?
அடிப்படை தேவையான குடி நீரை வேண்டி ரத்துபஸ்வல, நெந்துங்கமுவ, ஊருவல,சிவிரலுமுல்ல , வெலிவேரிய,பிலிகுத்துவ,கினிகம,கல் ஒலுவ ,மாஹரகம உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாம் அருந்தும் குடிநீரில் இரசாயனம் கலந்திருப்பதாக பல முறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தனர். எனினும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பல்வேறு வகைகளில் தமது நியாயமான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். ரத்துபஸ்வல விகாரையின் விகாராதிபதியும் ஆர் ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தவருமான பண்டித்த சிறிதம்ம தேரர் உண்ணாவிரதமும் இருந்து பார்த்தார். நியாயம் கிடைக்கவில்லை. இதனை அடுத்தே ஆகஸ்ட் முதலாம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்ப்பாட்டமானது கண்டி-கொழும்பு பிரதான வீதியின் பெலும்மஹர,கொடகெதர,மிரிஸ்வத்த ஆகிய பகுதிகளிலும் புதிய கண்டி வீதியில் வெலிவேரிய பிரதேசத்திலும் இடம் பெற்றது. இதனால் மாற்று போக்குவரத்து வழிகளை பொலிஸார் செய்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டங்களின் போது வழமையாக பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. எனினும் அவை இறுதிவரையில் பயன்படுத்தப்பட வில்லை. கொடகெதர, மிரிஸ்வத்த பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் அப்புறப்படுத்திய நிலையிலேயே பெலும்மஹரவில் பொல்லுகலைக் கொண்டு இராணுவம் ஆர்ப்பாட்டத்தை கலைத்தது. வெலிவேரியவில் அரங்கேறிய அகோரம்
பெலும்மஹரவில் அடக்குமுறையில் வெற்றி கண்ட இராணுவம் புதிய கண்டி வீதியூடே வெலிவேரியவை நோக்கி முன்னேற ஆரம்பித்தது. வடக்கில் யுத்த களத்தில் பெற்ற அனுபவத்துடன் முன்னேறுவது போன்று அவசர அவசரமாக வெறிச்சோடிய வீதியூடே முன்னேறியது. எவ்வாறாயினும் பெலும்மஹரவில் இராணுவம் மேற்கொண்ட அடக்குமுறை வெலிவேரிய பகுதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு தெரிய வந்திருந்தது. இதனால் அவர்கள் பயப்படாது வீதிகளில் அமர்ந்து தமது அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கலாயினர். இந்நிலையிலேயே வெலிவேரிய பகுதியை இராணுவம் சில நிமிடங்களில் வந்தடைந்தது.
இயங்கிய துப்பாக்கிகள் வெலிவேரிய பகுதிக்கு வந்த இராணுவம் அங்கிருந்தும் ஆர்ப்பாட்டக் காரர்களை விரட்ட தமது இராணுவ யுக்திகளை பயன்படுத்த முடிவு செய்தது. பெலும்மஹரவில் இயங்காத துப்பாக்கிகள் வெலிேவரியவில் இயங்கின. இதனால் வெலிவேரிய போர்க்களமானது. இதன் போது இராணுவத்தினர் மீதும் போத்தல்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இராணுவ வீரர்கள் சிலரும் காயமடைந்தனர். அத்துடன் வெலிவேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஆர்.எஸ்.டீ.கொடித்துவக்குவும் காயமடைந்தார். மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரையிலான ஒரு மணிநேரம் வெலிவேரிய முல்லைத்தீவானது.
தண்ணீர் கேட்டவர்களுக்கு துப்பாக்கி பதில் சொன்னது. சிவில் நிர்வாகம் சரணடைந்து இராணுவ அதிகாரம் கையோங்கியது. துப்பாக்கி முன்னால் பல உயிர்கள் போராடவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டன.
பலர் காயமடைந்தும் பலர் ஒளிந்தும் இருந்த அந்தப் பொழுதில் இராணுவம் தேடுதல் வேட்டையை தொடர்ந்தது. இந்நிலையில் அந்த இரவு 9.30 மணியளவில் கூட துப்பாக்கி சத்தங்கள் கேட்டன.
மின்சாரம் தடைப்பட்டது. இருளுக்குள் வெலிவேரிய மூழ்கியது. வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் வரிசையாக அனுமதிக்கப்பட பலருக்கு வைத்திய வசதியை கூட உடன் பெற முடியாமல் போனது.
உயிரிழந்த மாணவன் உள்ளிட்ட மூவர்
வெலிவேரிய பிரதேசத்தில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்ற இருந்த ரவிஷான் பெரேரா என்ற மாணவன் உள்ளிட்ட மூவர் தமது உயிரை இழந்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கம்பஹா வைத்தியசாலை, வத்துபிட்டிவல வைத்தியசாலை, ராகம வைத்தியசாலை என பிரதேசத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளால் வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூவரும் அப்பாவிகளாவர்.
மாணவனான ரவிஷான் பெரேரா பிரத்தியேக வகுப்பொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக அவனது தந்தை குறிப்பிடுகிறார்.
அத்துடன் இச்சம்பவத்தில் உயிரிழந்த மற்ெறாருவரே கம்பொலை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நிலந்த புஷ்பகுமார. பியகம பிரதேச ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியரான இவர் வெலிவேரிய பிரதேசத்தில் தங்கியிருந்ததாகவும் அங்கிருந்து தனது தொழிலுக்கு செல்ல முற்பட்ட போதே அவர் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவரது சகோதரி தெரிவிக்கிறார்.
அத்துடன் உயிரிழந்த மூன்றாவது நபர் ஒரு அங்கவீனர் எனவும் அவர் இறுதிக்கட்ட யுத்தத்திலேயே அங்கவீனம் உற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவனான ரவிஷானின் தலையில் சூட்டுக்காயம் உள்ளதுடன் நிலந்தவுக்கு ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை கொழும்பு நீதிமன்றின் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் உறுதிப்படுத்துகின்றது. தேசிய வைத்தியசாலையில், மாலிகா இகந்த மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான் டென்சில் லொய்ட் முன்னிலையில் இவை உறுதியானது.
43 பேர் காயம்
இதேவளை வெலிவேரிய மினி போர்க்களத்தில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 43 பொதுமக்கள் காயங்களுக்கு இலக்காகினர். இவர்களில் பொலிஸ், இராணுவத்தினரும் அடங்குகின்றனர். காயமடைந்த பலருக்கு துப்பாக்கிச் சூட்டு காயம் இருப்பதாகவும் இன்னும் சிலருக்கு ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களும் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த சிவில் நடவடிக்கைகளுக்கு பதிலாக இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது சர்வதேச ரீதியில் விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
மினி யுத்தகளமும் கண்டெடுக்கப்பட்ட தடயங்களும்
வெலிவேரியவில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னர் அங்கிருந்து சில தடயங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இரவு நேரம் நடைபெற்ற இந்த தாக்குதல்களை தொடர்ந்து மறு நாள் காலையே பொலிஸாரால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏ.கே.47 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்பட்ட 47 வெற் றுத்தோட்டாக்களும் ரீ 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 117 வெற்றுத் தோட்டாக்களும் போரில் பயன்படுத்தப்படும் சில வெடிபொருட்களும் இராணுவத்தினரின் இரு ஹெல்மட்டுக்களும் ரீ 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் மகசினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதனை உடனடியாகவே உறுதிப்படுத்த முடியவில்லை.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை
வெலிவேரிய பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட மறு தினம் ஸ்தலத்துக்கு சென்ற கம்பஹா மாவட்ட மாஜிஸ்திரேட், தாக்குதல் குறித்து பொலிஸாரிடம் அறிக்கை கோரினார்.
இந்நிலையில் விசாரணைகளை பொறுப்பேற்ற கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் விஷேட குழு நியமிக்கப்பட்டது.
அவர்கள் இதுவரையில் 100 இராணுவ வீரர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதுடன் 100 பொதுமக்களின் சாட்சியங்களையும் பெற்றுள்ளனர். அத்துடன் இராணுவத்தினரின் 93 ரீ 56துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றி இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இராணுவ விசாரணை
இதனிடையே இராணுவம் வெலிவேரியாவில் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தை கலைக்க மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இராணுவமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையில் குழுவொன்றை நியமித்தார். அதன் அறிக்கை அடுத்தவாரம் இறுதிக்குள் கிடைக்கப்பெறவுள்ளது.
எனினும் இராணுவம் குறித்த சம்பவத்தின் போது தலத்துக்கு சென்றதை இன்னும் நியாயப்படுத்தியே வருகிறது. பொலிசாரின் வேண்டுதலின் பேரிலேயே இராணுவம் அங்கு சென்றதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவிப்பதுடன் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே இராணுவம் சற்று கடினமான நடவடிக்கைகளை தொடர்ந்ததாக தெரிவிக்கின்றார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கியது யார் ?
பொதுவாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்கள் மேற்கொள்ளப்படும் போது சிவில் நடவடிக்கைகளின் ஊடாக அவை தடுக்கப்படுவது வழமை. எனினும் இராணுவம் ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ளுமிடத்து அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அதன் தலைமையின் கையிலேயே உள்ளது.
அப்படியானால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு கிடைத்திருந்தால் மட்டுமே அவர்கள் தமது துப்பாக்கியை இயக்கியிருப்பார்கள். அந்த அனுமதியை வழங்கியது யார்? பாதுகாப்பு செயலாளருடன் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு அதனை நடத்த அனுமதித்தது யார் என்ற கேள்வி எழுவது யதார்த்தமானதே.
அதனால் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உத்தரவிட்டது யார் என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப் படவேண்டியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.
பொது மக்கள் மீது இவ்வாறு காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவது ஜனநாயக அரசின் மீதான நம்பிக்கைகளை கலையச் செய்யும். எனவே வெலிவேரியவை போர்க்களமாக்கியவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன என்பதை அம்பலப்படுத்த வேண்டியது பொறுப்புவாய்ந்த அரசின் கடமையாகும்.
« PREV
NEXT »

No comments