கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் பிரச்சினைக்கு உள்ளாகியிருந்த பள்ளிவாசல் சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இன்று பௌத்த சாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற 3 மணித்தியால பேச்சுவார்த்தையின் போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சில் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முஸ்லிம் அமைச்சர்கள், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பௌத்த மற்றும் இஸ்லாம் மத தலைவர்களும் பொலிஸாரும் கலந்து கொண்டனர்.
இதன்படி தற்காலிகமாக சுவர்ண சைத்திய வீதியில் அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை நிலையத்தை மூடி ஏற்கனவே பாதை திருத்துவதற்காக உடைக்கப்படவிருந்த பழைய பள்ளிவாசலை மீண்டும் இயங்கவைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் பழைய பள்ளிவாசல் மீண்டும் இயங்கும்வரை தற்காலிக பிராத்தனை நிலையத்தில் தொழுகைகளை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
பழைய பள்ளிவாசல் இருந்த பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகாரச் சபை அபிவிருத்தி நடவடிககைகளை முன்னெடுத்து வருவதால், பள்ளிவாசல் தற்காலிகமாக சுவர்ண சைத்திய வீதியில் உள்ள கட்டடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டது.
பழைய பள்ளிவாசல் முன்னைய இடத்தில் அமைக்கப்படும் வரை தற்காலிக பள்ளியில் தொழுகை நடத்த முடிவு செய்திருந்தனர். எனினும் புதிய இடத்தில் இருந்து கடந்த மாதம் மாறுவதாக முஸ்லிம்கள் உறுதியளித்திருந்தனர்.
இந்த நிலையில் தாம் அங்கிருந்து வெளியேற மீண்டும் ஒரு மாதம் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments
Post a Comment