Latest News

August 23, 2013

"இணையம் வழியே உங்கள் இதயம் நுழைகிறேன்! வாசல் திறவுங்கள்!" - உங்களன்பு பேரறிவாளன்
by admin - 0

ராஜிவ் வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் பெயரில் இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தம் மீதான வழக்குகள் பற்றி தொடர்ந்து கட்டுரைகளையும் செய்திகளையும் பதிவு செய்யப் போவதாக வேலூர் சிறையில் இருந்து அனுப்பிய கடிதத்தில் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பேரறிவாளன் பெயரில் http://www.perarivalan.com/ புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் தமது வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் இடம்பெறும் என்று நேற்று முன்தினம் சிறையில் இருந்தபடி தமது வழக்கறிஞர் மூலம் அனுப்பிய கடிதத்தில் பேரறிவாளன் தெரிவித்துள்ளார். 

பேரறிவாளன் அனுப்பியுள்ள கடிதம் இது:

பேரன்புக்குரியோரே வணக்கம். 26-08-2011 எமது சாவுக்கான திகதி குறிக்கப்பட்டு ஓலை (Black Warrant ) வழங்கப்பட்ட நாள். 30-08-2011 சென்னை உயர்நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடையாணை வழங்கிய நாள் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முன்மொழிவால் தண்டனை குறைப்பிற்கு ஒருமனதாக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள். இடைப்பட்ட 5 நாட்கள் உணர்சிகரமான போராட்டங்களும், உள்ளம் நெகிழும் வேண்டுதல்களும், வாழ்வில் என்றுமே ஈடு செய்யமுடியாத தியாகங்களும், சொற்களால் விவரிக்க முடியாத உணர்வுகளும் நிறைந்த வரலாறு, உலக மனித உரிமை வரலாற்றில் ஒப்புவமை இல்லா எனது அன்பு தங்கை செங்கொடியின் ஈகம். நீதியின் பக்கமிருந்து காலம் தீர்ப்பு வழங்குமானால் அன்றைய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

கட்சிகள் கடந்து, மதங்கள் கடந்து,சாதிகள் கடந்து தமிழகமே எமக்காக குரல் எழுப்பியது. தமிழகத்திற்கு அப்பாலும் மனித நேயம் போற்றும் அனைவருமே அணிவகுத்து நின்றனர்.

“மரண தண்டனை மனித அறத்திற்கே எதிரானது ஆகவே இவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம்” – என குரல் கொடுப்போர் பலர். “போதும். 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை காலத்தை கழித்து விட்டனர். இதன் பிறகும் மற்றுமொரு தண்டனையா? அதிலும் மரணமா ? ” – என இரக்கம் கொண்டோர் பலர்.. “இவர்கள் எங்கள் தமிழ்தேசிய பிள்ளைகள், தூக்கிலிட அனுமதியோம்” – என சங்கார முழக்கமிட்டோர் பலர்.

இவர்களைத்தாண்டி இன்னும் பலரும் ஒரு கருத்தை கொண்டிருந்தனர். “இவர்கள் நிரபராதிகள் – அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்கும் நாதியற்றவர்கள் பிழையான நீதியால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே இவர்களை விடுதலை செய்வதே நீதியானது” – என்ற அசைக்க முடியாத கருத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் அவர்கள். இதனை உறுதி செய்யவே, உண்மையை நிலைநாட்டிடவே கடந்த 22 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். அதனால் தான் எனது வேண்டுகோளை இவ்வாறு வைத்தேன். 

விடுதலை செய் ! கேட்பது உயிர் பிச்சையல்ல; மறுக்கப்பட்ட நீதி ஆயினும் குற்றமே செய்யாமல் நாட்டின் உச்சபட்ச அறமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை – அதிலும் சாவுத் தண்டனையை கேள்வி எழுப்புவது என்பது கற்பனைக்கு எட்டாத உயரம் – காணக்கிடைக்காத தூரம் என்பதை அறிந்தே எனது முயற்சியை தொடர்ந்தேன்.

26-08-2011 அன்று வழங்கப்பட்ட மரண ஓலை எனது இருபது ஆண்டு கால முயற்சிக்கு பெரும் திருப்புமுனையை தந்தது. எமது குற்றமற்ற தன்மையை அதிகளவிலான மக்கள் புரிந்து கொண்டு ஆதரவளிக்க முன்வந்தனர். என்றாலும் ஒவ்வொரு மனித உள்ளங்களையும் உண்மையின் பக்கம் வென்றெடுக்க வேண்டும் என்பதே எனது அவா, அதற்கு வழிகோலவே இந்த இணைய வாய்ப்பு வாய்த்துள்ளது. 

எனவே, இணையம் வழியே உங்கள் இதயம் நுழைகிறேன் வாசல் திறவுங்கள் வழக்கின் புனைவு யாவையும் புரட்ட வருகிறேன் பக்கத் துணையாய் நில்லுங்கள் இன்னும் வரும்…
நீதி வேண்டும் 

உங்களன்பு பேரறிவாளன்
« PREV
NEXT »

No comments