Latest News

August 24, 2013

செல்போனை பறித்தவர்கள் அதன் சிம் அட்டை பற்றி ஏன் கூறவில்லை? - நளினி வழக்கறிஞர் கேள்வி
by admin - 0

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினியிடம் இருந்து 2010 ஏப்ரல் மாதம் 20-ம் திகதி செல்போனை பறிமுதல் செய்ததாகவும் அரசுப் பணியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி புகார் அளித்தார்.
இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ம் திகதி ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ''20 வருடங்களுக்கு மேலாக நான் சிறையில் இருக்கிறேன். என்னை யார் யார் பார்க்க வருகிறார்கள் என்பது பொலிஸுக்குத் தெரியும்.
அவர்களை மீறி எப்படி செல்போன் என்னிடம் வரும்? பொய்வழக்குப் போட்டிருக்கிறார்கள். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்க வேண்டாம். கோர்ட்டில் வந்து பேசுகிறேன்'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.
கடந்த 19-ம் திகதி மீண்டும் ஆஜரானார். நளினியிடம் இருந்து செல்போன் கைப்பற்றிய போது பணியில் இருந்த சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி உட்பட 11 பேரிடம் நீதிபதி விசாரித்தார்.
சிறையில் செல்போன் கண்டெடுக்கப்பட்ட இடத்தை 23-ம் திகதி பார்ப்பதாகக் கூறி, விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ''இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட வரைபடத்தில் சிறையில் நளினியிடம் இருந்து செல்போன் கண்டெடுக்கப்பட்ட இடத்தைக் காட்டியுள்ளனர்.
அந்த இடத்தை நாங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றோம். அதற்கு நீதிபதி, சட்டத்தில் அதற்கு அனுமதி இல்லை. ஆனால் நீதிபதி மூலமாகப் பரிசோதிக்கலாம் என்றார்.
சிறை அதிகாரிகளிடம் விசாரணை முடிந்த பிறகு எங்களது வாதத்தைத் தொடர்வோம். செல்போனை பறித்தவர்கள் அதன் சிம்  அட்டை பற்றி ஏன் கூறவில்லை? என்றார்.
செல்போன் இருந்தது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு தண்டனை வழங்கப்படும். இதனால், நன்னடத்தை காரணமாக நளினி விடுதலையாவது சிரமம்தான்.
செல்போன் வழக்கின் தீர்ப்பு 30-ம் திகதி வருகிறது. அதுவரை காத்திருப்போம்!
« PREV
NEXT »

No comments