Latest News

August 13, 2013

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் இருவரை கைது செய்ய வலியுறுத்தல்
by admin - 0

போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுத பிரிவுக்கு பொறுப்பாக இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை வடபகுதிக்கு கொண்டு சென்ற இதுவரை கைதுசெய்யப்படாதிருக்கும், புலிகளின் காவற்துறை பிரிவில் உயர் பதவி வகித்த நபரை கைதுசெய்ய விசாரணைகளை நடத்தி வருவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் இந்த நபர், விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 53 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தென்னந் தோட்டம் ஒன்றை பராமரித்து வருவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.
போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான வாகனங்களை விநியோகித்து வந்துள்ள இந்த நபர், புலிகளின் காவற்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன் புலிகளின் ஆயுத தளப்பாடங்களுக்கு பொறுப்பாகவும் இவர் இருந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் ஹேர்ட்டன் பிளேஸ் பகுதியில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் மேற்படி நபர் தொடர்பாக தகவல்களை வழங்கியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள நாகலிங்கம் மதனசேகர் என்ற இந்த நபர் அச்சுவேலி, கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கில் பல பிரதேசங்களில் கிராம சேவகராகவும் பணியாற்றியுள்ளார். அவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த புலிகளின் முக்கியஸ்தரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மதனசேகர் என்ற சந்தேக நபரை 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் வழங்கிய அனுமதி அடுத்து, அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும் கொழும்பு நகரை இலக்கு வைத்து, அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் பேருந்துகளில் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டங்களை வகுத்து கொடுத்த புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கிய தலைவரான முகுந்தன் என்பவரை ஹேர்ட்டன் பிளேஸ் பகுதியில் இடம்பெற்ற பேருந்து குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்ய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் உள்ள இந்த நபர், வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளுக்கு உதவி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அவரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையினர் ஊடாக சிகப்பு அறிக்கையுடன் கூடிய பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த பிடிவிராந்தின் அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுப்பது கடினமானது என தெரிவித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர், ஆங்கிலத்தில் பிடிவிராந்தை பிறப்பிக்குமாறு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முகுந்தனை கைதுசெய்ய ஆங்கிலத்தில் பிடிவிராந்து பிறப்பித்த நீதவான், தனசேகர் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments