கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கான சட்டமூலம் கொண்டு வரப்பட்டபோது அதனை ஆளுநர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, அது உப குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இவ் உப குழுவில் தமிழர் தரப்பில் இரண்டு த. தே. கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராசா இவர்கள்கூட இதற்கு ஆதரவுதரவில்லை என்பது என்னைப் பொறுத்தவரையில் கவலையான விடயம்.
இது தொடர்பாக இவர்களுடன் கதைத்தும் உள்ளேன். இது மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமான ஒரு பொதுவான சட்டமாக உள்ள காரணத்தினால் இதனை இவர்கள் இரண்டுபேரும் வாதிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாது இன்று 13ஐப்பற்றி பெரிய அளவில் குரல் கொடுப்பவர்களாக உள்ளனர். - சிவநேசதுரை சந்திரகாந்தன்
சிறுபான்மை மக்களின் ஆளும் அதிகாரப் போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை ஊடான அதிகார பரவலாக்கல் என்பது "வலக்கையினால் கொடுத்து இடக்கையினால் எடுக்கப்பட்ட ஒன்றுதான்" என்பார்கள். காரணம் என்னவென்றால் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் ஒருவர் இருக்கத்தக்கதாக உள்ள போது முழுமையான செயற்பாட்டுக்கு ஒரு ஆளுநரை நியமிப்பதனால் முதலமைச்சரின் அதிகாரங்களை பிரயோகிக்க முடியாத நிலை இங்கு ஏற்படுகின்றது.
கடந்த முற்பது வருட ஆயுத நெருக்கடியின் கீழ் இருந்த வடக்கு, கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் கூட ஆயுத மணம் மக்கள் மத்தியில் இல்லாமல் போனாலும், இதனை இயக்கிய வழிநடத்தியவர்களின் அதிகாரம், ஆதிக்கம் இன்னும் வடகிழக்கை விட்டு அகலாத நிலையே காணப்படுகின்றது. எனவேதான் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னராவது வடக்குக்கான ஆளுநர் இந்த நிலையிலிருந்து வடக்கு மக்களை பார்ப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆளுநர் நியமனம்
எமது நாட்டின் ஜனநாயக சோஷலிஸ குடியரசுத் சட்டத்துக்கமைய மாகாண சபையின் நிதி, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்காகவும் ஜனாதிபதியின் நேரடி பிரகடனத்தின் கீழ் நியமிக்கப்படும் ஒருவரே ஆளுநராகும். இவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவில் உள்ள பிரதம செயலாளர், ஏனைய அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களிடமும் பகிர்ந்தளிக்கப்படும். இவ்வாறான மாகாண நிதி, நிர்வாக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் ஆளுநரிடம் உள்ளது.
முதலமைச்சர் நியமனம்
முதலமைச்சர் என்பவர் மக்களின் ஏகோபித்த வாக்கினைப் பெற்ற அல்லது செல்வாக்கினைப் பெற்ற ஒருவரும், சட்ட திட்டங்களை மதித்து மாகாண சபையினை நிர்வகிக்கும் வல்லமை கொண்ட ஒருவரே, அக்கட்சிசார் தலைமையினால் சிபார்சு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். அத்தோடு அம் மாகாணத்துக்கான அமைச்சர் தெரிவினை அக்கட்சி மேற்கொண்டாலும் நியமனம் என்பது ஆளுநரினாலேயே மேற்கொள்ளப்படும். இவர்கள் மக்களின் தேவைகளை இனம் கண்டு அவற்றினைப் பூர்த்தி செய்வதுடன் மக்களின் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளையும் முன்னெடுப்பவர்களாக காணப்படுவர்.
நிதிப்பிரயோகம் என்றாலும் சரி அல்லது எடுக்கப்பட்ட புதிய தீர்மானங்களாக இருந்தாலும் அவற்றினை ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும். அதேபோல் ஆளுநரின் நிதி அல்லது அவருடன் தொடர்புபட்ட விடயங்களாக இருந்தால் அதனை மாகாண சபை அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு இரண்டு பேரையும் ஒன்றோடு ஒன்று இறுகக் கட்டிப்போட்ட நிலையே இந்த மாகாண சபையின் சவாலாக காணப்படுகின்றது.
வடகிழக்கு மக்களின் பிரச்சனைக்கான தீர்வாகக் கொண்டு வரப்பட்ட மாகாண சபையானது ஏனைய ஏழு மாகாண சபைகள் சுமுகமாக இயங்கும் போது வடகிழக்காக இருந்த போதும் சரி கிழக்கு மாகாண சபையாக இருந்த போதிலும் இரண்டு தரப்பாருக்கும் இடையிலான முரண்பாடு வலுவாக உள்ளது. ஏன் அன்மையில்கூட கிழக்கு மாகாண சபையில் உள்ள முரண்பாட்டுக்காக ஜனாதிபதியினை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆளுநரை மீறி செயற்படமுடியாது “சிவநேசதுரை சந்திரகாந்தன்”
கிழக்கு மாகாணசபையின் அரச தரப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாண உறுப்பினரும், கிழக்கு மாகாண அபிவிருத்தியின் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனைத் தொடர்பு கொண்டு “தங்கள் ஆட்சிக்காலத்தில் ஆளுநர் தொடர்பாக தாங்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்ன” என்று வினவிய போது அவர்
தெரிவித்ததாவது,
தெரிவித்ததாவது,
ஆளுநர் என்பவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி. நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும் ஆரம்பத்தில் எங்களுக்கிடையில் சுமுகமான நிலையே காணப்பட்டது. ஆனால் காலப்போக்கில்; அடிக்கடி முரண்பாடுகள் இருவருக்கிடையில் ஏற்பட்டது. குறிப்பாக சுகாதார ஊழியர் தொடர்பான நியமனத்தின் போது அதற்கு ஆளுநர் அனுமதிக்கவில்லை. பின்னர் இது அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய மேற்கொள்ளவேண்டும் என கூறப்பட்டது. இதன் காரணத்தினால் நாங்கள் நியமிக்க தீர்மானித்தவர்களைக்கூட நியமிக்க ஆளுநர் ஒத்துழைக்கவில்லை.
அதேபோல் கிழக்கு மாகாண சுற்றுலாதுறைக்கான சட்டமூலம் கொண்டு வரப்பட்ட போது அதனை ஆளுநர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி அது உப குழுவுக்கு அனுப்பப்பட்டது. இவ் உப குழுவில் தமிழர் தரப்பில் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன். செல்வராசா. இவர்கள்கூட இதற்கு ஆதரவுதரவில்லை என்பது என்னைப் பொறுத்தவரையில் கவலையானவிடயம். இது தொடர்பாக இவர்களுடன் கதைத்தும் உள்ளேன். இது மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமான ஒரு பொதுவான சட்டமாக உள்ள காரணத்தினால் இதனை இவர்கள் இரண்டுபேரும் வாதிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாத இவர்கள் இன்று 13ஐப்பற்றி பெரிய அளவில் குரல் கொடுப்பவர்களாக உள்ளனர்.
நான் அரச தரப்பைச் சேர்ந்தவனாக இருந்தும் அரசினால் கொண்டுவரப்பட்ட நாடு நகர அபிவிருத்திச் சட்டமூலம் உட்பட மூன்று சட்டத்துக்கான அங்கீகாரத்தினை என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். இதற்கான அங்கீகாரத்தினை கிழக்கு ஆளுநர் வழங்கியிருந்தார். ஆனால் நான் அவர்களுக்கு வழங்கவில்லை. ஏனெனில் இதன் மூலம் எமது கிழக்குப் பிரதேசத்தில் மத்திய அரசு நினைத்த வேலைகளைச் செய்யும் போது எம்மால் அதனைத் தடுக்க முடியாது. ஏன், அண்மையில் சிலை வைப்பு விவகாரமானது இச் சட்டம் அங்கீகரிக்காத காரணத்தினால் இப்பிரதேசத்தில் இதனை நிறைவேற்ற முடியாது போனது.
அதேபோல் கிழக்கு மாகாணத்துக்குரிய கொடியினை மாற்றியமைப்பதற்கான ஒத்துழைப்பினை ஆளுநர் எங்களுக்கு தராத காரணத்தினால் இதற்கும் முரண்பட்டு சுசில் பிரேம்ஜெயந்தவின் ஆலோசனைக்கமைய கைவிட வேண்டி ஏற்பட்டது.
நாங்கள் பொலிஸ் ஆணைக்குழு தொடர்பான வரைவினை மேற்கொண்டு ஆளுநரிடம் வழங்கிய போது அதனை சட்டமா அதிபரிடம் அனுப்பிவைத்தார். இது தொடர்பாக நாங்கள் அரசாங்கத்துடன் கதைத்த போது அவர்கள் பொறுத்திருங்கள் என்று இழுத்தடித்தார்கள். இதனையும் மீறி முயற்சி எடுத்த போது ஆளுனரும் நீங்களும் முரண்பட்டீர்களாயின் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது போகும் என்று ஜனாதிபதி தெரிவித்த காரணத்தினால் இதனை நாங்கள் கைவிட்டோம்.
வடமாகாண சபையில் த.தே.கூ. வில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் கூறுவதுபோல் இணக்க அரசியல் மூலம் த.தே.கூ. மாத்திரமே வடக்கு மாகாண சபையினை அபிவிருத்தி செய்ய முடியும். த.தே.கூ. வின் வழக்கமான எதிர்நடவடிக்கைகளை மேற்கொள்வர்களாயின் மக்களுக்கான சேவையினை மேற்கொள்ள முடியாது. ஏன் என்றால் வடக்கு மாகாண சபையின் வரிப்பணத்தினைக் கொண்டு மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. அதேநேரம் தேசிய வரிப்பணத்தின் ஒரு பகுதியினை வடக்குக்குக் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் எம்மத்தியில் இல்லை. ஆகவே அரசின் நிதியினைப் பெறவேண்டுமாக இருந்தால் ஆளுனருடன் இணைந்துதான் போகவேண்டும்.
அத்தோடு இவர்கள் கூறும் 13ஆவது சரத்தினை நாங்கள் வடக்கில் நடைமுறைப்படுத்துவோம் என்பது பாரிய முரண்பாட்டினையும், கால இழுபறியினையும் ஏற்படுத்துவதோடு அது வடக்கு அபிவிருத்தியினை வெகுவாகப் பாதிக்கச் செய்யும். எனவே இவர்கள் வடக்கு மாகாண சபையினை இரண்டு பகுதியாக பார்க்க வேண்டும். ஒன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது. மற்றது த.தே.கூ. வின் கொள்கைகள்,கோட்பாடுகள் என்பவற்றினை நடைமுறைப்படுத்தல். இதில் முன்னையதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமாக இருந்தால் இதற்கு அரசின் பாரிய பங்களிப்பு அவசியம். உதாரணமாக வெளிநாட்டு நிதியினை நேரடியாக வடக்குக்குக் கொண்டுவர முடியாது. அப்படியானால் அது தனிநாடாக மாறிவிடும். எனவே இந்த நிதியினை வடக்குக்குக் கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அது திறைசேரியூடாகவே வரவேண்டும். இதற்கு அரசின் பாரிய பங்களிப்பு அவசியம்.
அதேபோல் 13ஆவது சரத்து, த.தே.கூ. வின் கொள்கைகள், கோட்பாடுகள் என்பவற்றினை நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால் அதற்கு சட்ட நடவடிக்கை அப்படி, இப்படி என்று போவார்கள். அது கால இழுபறியினையும், முரண்பாட்டினையும் இருவருக்கிடையில் ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்படப்போவது மக்களாகும்.
எனவே த.தே.கூ. ஆட்சி அமைத்தால் முதலமைச்சர் அவர்களாக இருந்தாலும் ஆளுநர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். இவ் ஆளுநர் யாராக இருந்தாலும் இவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக தொழில்படுகின்ற காரணத்தினால் அரசின் செயற்பாடே இவரில் தொனிக்கும். ஆகவே இரண்டுபேரும் இணைந்து போனால் மட்டும்தான் வடக்கு மாகாண சபையினை நடாத்த முடியும். அவ்வாறு இணைந்து போகும் பட்சத்தில் த.தே.கூ. புதிய அத்தியாயத்தினை ஆரம்பிக்கின்றது எனலாம் என்றார்.
No comments
Post a Comment