சிறிலங்கா இராணுவம் ஆண்டுதோறும் நடத்தி வரும் பாதுகாப்புக் கருத்தரங்கு அடுத்தமாதம் நடக்கவுள்ளது.
இந்த மூன்று நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு, வரும் செப்ரெம்பர் மாதம் 3 ம் நாள் தொடக்கம் 5 ம் நாள் வரை – கொழும்பு கலதாரி விடுதியில் நடத்தப்படவுள்ளது.
‘போருக்குப் பிந்திய சிறிலங்கா: சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்’ என்ற தொனிப்பொருளில், இந்த ஆண்டுக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
பிராந்திய மற்றும் பூகோள விவகாரங்கள் குறித்து பரந்தளவிலான கலந்துரையாடல்களும், கருத்துப் பகிர்வுகளும், இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில் இடம்பெறவுள்ளன.
மேலும், போருக்குப் பிந்திய மீள்கட்டுமானம், சமூக ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம், பிராந்திய உறுதிப்பாடு மற்றும் பிராந்திய, பூகோள பாதுகாப்பு உறுதிப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தக் கருத்தரங்கில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக 22 நாடுகளின் பிரதிநிதிகள், உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்தியாவிலும், கொழும்பிலும் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களினது பாதுகாப்பு ஆலோசகர்களும், சிறிலங்காவில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இராஜதந்திரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கருத்தரங்கில், சீனா, பங்களாதேஸ், ஜேர்மனி, இந்தியா, பாகிஸ்தான், வியட்னாம் நாடுகளைச் சேர்ந்த எட்டு பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர்.
சிறிலங்கா இராணுவம், 2011ம் ஆண்டு, தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம் – சிறிலங்காவின் அனுபவங்கள் என்ற தலைப்பில், முதலாவது பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்தியிருந்தது.
அப்போது 50 இற்கு மேற்பட்ட நாடுகள் பங்கேற்பதாக சிறிலங்கா பரப்புரை மேற்கொண்ட போதிலும், 32 நாடுகளின் பிரதிநிதிகளே கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட இரண்டாவது மாநாட்டில், 41 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக சிறிலங்கா இராணுவம் கூறியிருந்தது.
இந்த ஆண்டு மாநாட்டில் 22 நாடுகளே பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கை புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் கடந்த ஆண்டுகளில் பெரும் பரப்புரைகளை முன்னெடுத்திருந்தன.
இந்த மாநாட்டுக்கான பயண, தங்குமிட, உணவு மற்றும் சுற்றுலா என அனைத்து செலவுகளையும் சிறிலங்கா இராணுவமே பொறுப்பேற்றுள்ள நிலையிலும், குறைந்தளவு நாடுகளே இம்முறை பிரதிநிதிகளை அனுப்ப முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment