Latest News

September 01, 2013

இலங்கை ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்தார் நவிப்பிள்ளை: தயான் ஜயதிலக்க
by admin - 0

மே 2009 காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தர்க்கம் புரிந்தவர் தயான் ஜயதிலக்கஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவி பிள்ளையின் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் எதேச்சாதிகாரப் பாதையில் செல்வாக நவி பிள்ளை வெளிப்படுத்தியக் கருத்து மிகச் சரியான அவதானிப்பு என்றும் அவரது இலங்கை விஜயம் சர்வதேச மிகப்பயனுள்ளது என்றும் ஜெனிவாவில் ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதியாக பணியாற்றி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டினார்.
நவி பிள்ளையின் கருத்துக்கள், இலங்கை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள சர்வதேச அமைப்புகளும் அரசுகளும் தமது பார்வையை கூர்மைப்படுத்தவும் நிலைப்பாடுகளை வடிவமைத்துக்கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியென்றும் நவி பிள்ளை கொழும்பில் வெளிப்படுத்திய கருத்துக்களை தயான் ஜயதிலக்க ஒப்பிட்டுப் பேசினார்.
ஒருவாரகாலம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் நேரடியாக சென்றுபார்த்து நவி பிள்ளை வெளியிட்டக் கருத்துக்களால், இலங்கை சர்வதேசத்தின் உன்னிப்பான கண்காணிப்புக்குள் வந்திருப்பதாகவும் தமிழோசையிடம் தயான் சுட்டிக்காட்டினார்.
ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை, வரும் செப்டெம்பர் மாதத்தில் வாய்மொழி மூல அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என்றும் பின்னர் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் தயான் ஜயதிலக்க கூறினார்.
‘நவி பிள்ளை மீதான புலி முத்திரை இனவாதக் கருத்து’
நேரடி விஜயத்தின் பின்னர் நவி பிள்ளை வௌியிட்டக் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் என்கிறார் தயான் ஜயதிலக்க
நவி பிள்ளை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாக இலங்கை அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்களே என்று கேட்டபோது, அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என்று அவர் கூறினார்.
நவி பிள்ளை விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தவர் என்றும் அவர் மீதும் புலி முத்திரை குத்துவது இனவாதக் கருத்து என்றும் இலங்கையின் முன்னாள் ஜெனிவா பிரதிநிதி கூறினார்.
நவி பிள்ளையின் கருத்துக்களை உதாசீனம் செய்து நிராகரிக்கும் போக்கு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கே பாதகமாக அமையும் என்றும் இலங்கை மீதான நம்பகத் தன்மையை மேலும் சீர்குலைக்கும் என்றும் தயான் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் இறுதிப்போர்க் காலப் பகுதியில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் சார்பில் தயான் ஜயதிலக்க வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
BBC
« PREV
NEXT »

No comments