அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது பாரம்பரிய நிலங்கள், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டதால் யாழ். வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அகதிகளாக முகாம்களிலும் வேறு தற்காலிக இடங்களிலும் பரிதாபமான நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.
தமது நிலங்களில் விவசாயம் செய்து செல்வ செழிப்பாக வாழ்ந்த இந்த மக்கள், நலன்புரி நிலையங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருவதுடன், தமது வாழ்க்கை கொண்டு நடத்த முடியாத கஷ்டமான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் இந்த மக்களின் நிலங்களை அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கைப்பற்றியுள்ள இராணுவம் அவற்றில் காய்கனிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது.
இராணுவத்தினால் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் குடியேற அனுமதி வழங்கப்படாத போதும், அங்கு இராணுவம் இது போன்ற பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அவற்றில் ஒன்றுதான் 180 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்து செல்லும் இராணுவத்தின் இந்த விவசாய திட்டமாகும்.
இது தவிர இராணுவ விடுமுறை விடுதி, இராணுவ தொழிற்சாலைகள் என பல திட்டங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியன உள்ளடங்கும் வகையில், யாழ் இராணுவ தலைமையகம் அதியுயர் பாதுகாப்பு வலயம் என அறிவித்துள்ள இந்த போலியான அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் தமது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளை மக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
எனினும் மக்களிடம் இருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்திற்கான நிரந்தர குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணிகள் எந்த தடையுமின்றி நடந்தேறி வருகின்றன.
முக்கியமாக பலாலி விமான நிலையத்தை சூழவுள்ள நிலங்கள் விவசாய நிலங்களாகும். இந்த நிலங்களை 1989 ஆம் ஆண்டு இராணுவம் பலவந்தமாக ஆக்கிரமித்து கொண்டது.
இதன் காரணமாக இடம்பெயர்ந்த, அந்த நிலத்தில் விவசாயத்தை நம்பி வாழ்ந்த மக்கள் மிகவும் வறுமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
அதேவேளை யாழ்ப்பாணம் தொண்டமானாறு முதல் காங்கேசன்துறை வரையுள்ள அதியுயர் பாதுகாப்பு வலய பகுதியில் இருக்கும் மக்களின் வீடுகளை இராணுவம் உடைத்து அப்புறப்படுத்தி வருகிறது.
வலிகாமம் வடக்கை சேர்ந்த 7 ஆயிரத்து 60 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 328 பேர் கடந்த 23 வருடங்களாக இடம்பெயர்ந்தவர்களாக நலன்புரி நிலையங்களிலும் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உட்பட யாழ்ப்பாணத்தில், யாழ் படைகளின் தலைமையகத்தினால் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து கொண்டுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளையும் நிலங்களையும் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இவ்வாறு ஆக்கிரமித்து வருகிறது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை வழங்குமாறு கோரி மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் மக்களை இராணுவத்தையும், புலனாய்வு பிரிவினரையும் பயன்படுத்தி கொழும்பு அரசாங்கம் அடக்கியது.
அது மட்டுமல்ல தமிழ் அரசியல்வாதிகளையும் பல முறை பயங்கரவாத விசாரணை என்ற பெயரில் அழைத்து கொழும்பு அரசாங்கம் விசாரணைகளுக்கு உட்படுத்தியது.
இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை பலவந்தமாக ஆக்கிரமித்து, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய பணிகளை வட பிராந்திய இராணுவ கட்டத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் அண்மையில் பார்வையிட்டனர்.
No comments
Post a Comment