Latest News

August 19, 2013

நவி பிள்ளை அம்மையாரை சந்திக்க தீவிரமாக உள்ளேன்': எழிலன் மனைவி
by admin - 0

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை, தமது விஜயத்தின்போது பலதரப்படட்டவர்களையும் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரைச் சந்தித்துப் பேசுவதற்கான முயற்சிகளில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பெறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிகரன் ஈடுபட்டுள்ளார்.
நவி பிள்ளை அம்மையாரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரியிருக்கின்ற போதிலும், அதற்கான நேரம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று அனந்தி சசிகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இறுதிப் போரில் படையினரிடம் சரணடைந்த, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தொடர்பாகவும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பாகவும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளரை சந்தித்துப் பேசவுள்ளதாக அவர் கூறினார்.

'மனித உரிமைப் பிரச்சனை'

'பாதிக்கப்பட்டவல்களில் ஒருவர் என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் என்றபடியாலும், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் அவரிடம் தெரிவிப்பதற்காகவே நான் அவரைச் சந்திக்க இருக்கின்றேன். அதற்காகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றேன்' என்றார் அனந்தி சசிகரன்.
வருகின்ற செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளராக இருக்கின்ற நிலையில் தேர்தல் நலன்களை முன்வைத்தே, நவி பிள்ளையைச் சந்திக்கின்றீர்கள் என்ற விமர்சனம் உங்கள் மீது வைக்கப்படலாம் அல்லவா என்று கேட்கப்பட்டபோது, 'இது மனித உரிமை தொடர்பான விடயம். வெறும் அரசியல் பிரச்சினை அல்ல என்று' அவர் பதிலளித்தார்.
'மனித உரிமைகள் தொடர்பாகவே நவநீதம் பிள்ளையைச் சந்திக்கவுள்ளேன். அவர் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டவர். அவருடனான சந்திப்பின் போது அரசியல் பேச முடியாது. அவரைச் சந்திப்பதை அரசியல் ரீதியானது என்று சிந்திப்பதே தவறு' என்று அனந்தி சசிகரன் சுட்டிக்காட்டினார்.
'சரணடைந்த, காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் மாகாண சபைத் தேர்தல் வருவதற்கு முன்பிருந்தே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அது முற்றிலும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயம். அதற்கும் அரசியலுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments