Latest News

August 07, 2013

இந்திய நிலைகள் மீது தாக்குதல்: 5 ராணுவவீரர்கள் பலி
by admin - 0

பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்தவர்களுடன் வந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளே இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதருக்கும் சம்மன் அனுப்பியது.

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு தமது கடுமையான எதிர்ப்பை அவரிடம் மத்திய அரசு தெரிவித்தது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்பிரச்னை எதிரொலித்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இதுகுறித்து மக்களவையில் விளக்கம் அளித்தார். அண்மைக்காலத்தில், எல்லை தாண்டிய ஊடுருவல் இருமடங்காக அதிகரித்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

பாஜக கண்டனம்

இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவ உடை தரித்த நபர்களுடன் வந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் என்ற பாதுகாப்புத்துறை அமைச்சரின் கூற்றை பாரதிய ஜனதா கண்டித்துள்ளது. மாநிலங்களவையில் பேசிய அக் கட்சியின் மூத்த தலைவரும், அவையின் எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சரின் பேச்சு, தாக்குதல் நடத்தியதை மறுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சாதகமாகி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

கனிமொழி குற்றம்சாட்டு

அண்டை நாடுகளுடன் அமைதி நிலவவேண்டும் என்கிற ஆவலில் இந்திய அரசு தற்போதைய சூழலை மறந்துவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட அவர், இதனை தெரிவித்தார்.

பாஜக முற்றுகை

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் வீடு முன் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பலியான சம்பவத்தைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

திடீரென தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஏ.கே.அந்தோணியின் வீட்டை நோக்கிச் செல்ல முயன்ற பாரதிய ஜனதா கட்சியினரை காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து கலைத்தனர்.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஜம்மு காஷ்மீர் எல்லையில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தால் எழுந்த அமளியால், நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை இதே பிரச்னை எதிரொலித்தது

« PREV
NEXT »

No comments