Latest News

July 27, 2013

அரசியல் வெற்றியை உறுதி செய்ய TNA புலம்பெயர் உறவுகளிடம் உதவி கோரி அறிக்கை
by admin - 0

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பலநூறு கோடிகளைக் கொட்டியும், அரச, இராணுவ இயந்திரங்களைப் பயன்படுத்தியும், சில ஆசனங்களையாவது வென்றுவிட முனையும், இலங்கை அரசாங்கத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு நிதியுதவி வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளினதும் தலைவர்களான இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
மிக நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
மாகாணசபைக்கு உரித்தான அதிகாரங்களை தன்னகத்தே கொண்ட 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அந்த அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது.
இதில் குறிப்பாக இந்த 13ஆவது திருத்தச்சட்டத்தில் இருக்கக்கூடிய அரைகுறை அதிகாரங்களான பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் காணி அதிகாரங்கள் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது என்ற பலத்த கூச்சல்கள் சிங்கள பௌத்த தீவிரவாத தரப்பிடமிருந்து முன்வைக்கப்படுகிறது.
அத்துடன் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாகாணசபைகள் இணையமுடியாது என்ற ஒரு சட்டமூலத்தையும், பெரும்பான்மை மாகாணசபைகள் அங்கீகரித்தால் மாகாணசபைகளுக்குரித்தான அதிகாரங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் சட்டங்களை இயற்றலாம் என்ற சட்டமூலத்தையும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் இவையெல்லாம் இந்திய அரசின் அழுத்தங்களின் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இதனைவிட, மாகாண அதிகாரங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருப்பதுடன் இந்த அதிகாரங்கள் போதாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது.
மேலும், ஒற்றையாட்சிக்குள் சரியான அதிகாரப்பகிர்வுகள் முழுமையாக நடைபெறமுடியாது என்றே நாம் கருதுகின்றோம்.
ஆனாலும்கூட, இந்த மாகாணசபையில் போட்டியிட்டு இந்த மாகாணசபையைக் கைப்பற்றுவதனூடாக சில முக்கிய விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியும் என்று நாம் நம்புகின்றோம்.
1. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு, புனர் நிர்மாண வேலைகள் என்பவை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.
2. எமது முக்கியமான வாழ்வாதாரங்களாக இருக்கின்ற விவசாயம், மீன்பிடி போன்றவை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இவற்றை சீர்செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டிய பணியும் எமக்கு இருக்கின்றது.
3. இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கொண்டு இயலக்கூடிய சேவையை மக்களுக்குச் செய்வதனூடாக மக்களைத் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வைத்திருக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு வடிவமாகவும் இது அமைகின்றது.
இதனைவிட, அரசியல்ரீதியாக எமது போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான ஒரு பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது.
அதனை மாகாணசபையினூடு நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
எமது முதலமைச்சரும் அமையப் போகின்ற மாகாண அமைச்சரவையும் அதனுடன் இருக்கக்கூடிய மாகாணசபை உறுப்பினர்களும் ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித்தலைமையும் இணைந்து இதனை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம்.
இந்தநிலையில், வரக்கூடிய மாகாணசபைத் தேர்தலில் மிக அதிகபட்ச ஆசனங்களுடன் நாங்கள் வெல்வதனூடு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் என்பவை இன்னும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தப்படும்.
இலங்கை தொடர்பான அரசியல் கொள்கைகளில் சர்வதேச சமூகம் மாற்றங்களை மேற்கொள்வதற்கு இது அவசியமென்று நாங்கள் கருதுகின்றோம்.
ஆகவே அவ்வாறான ஒரு பாரிய வெற்றியினை நாங்கள் ஈட்டுவதற்கு உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் எங்களுக்குத் தேவை என்பதை மிக அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கை அரசாங்கம் பலநூறு கோடிகளை செலவு செய்து சில ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும் என முயற்சிக்கின்றது.
இராணுவம் உட்பட அரச இயந்திரம் முழுமையாக இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
நீதியான நியாயமான தேர்தல் ஒன்று நடக்குமா என்ற கேள்வி உருவாகி வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழலில் இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரிய வெற்றியை அடைய வேண்டும் என்பது மிகமிக முக்கியமான ஓர் அரசியல் தேவைப்பாடாகும்.
இதற்கு எங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை உங்களிடமிருந்தே எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் உதவிகள் கூட்டமைப்பின் வெற்றிக்கு மாத்திரமல்ல ஒரு முழுமையான தீர்வினை எட்டுவதற்கான முதலாவது படிக்கட்டைத் தாண்டுவதற்கு உங்கள் உதவி நிச்சயமாக மிகவும் மாபெரும் உதவியாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு நிதிக்குழுவை நாம் நியமித்துள்ளோம்.
கூட்டமைப்பின் ஐந்து அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
எமது வங்கிக்கணக்கு எண், மேலதிக விபரங்கள் தொடர்பாக நிதிக்குழு விரைவில் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கின்றோம்." என்று கூறப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments