Latest News

July 16, 2013

வீடமைப்பு கடன் வசதி : அம்பாறை கரையோர தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி
by admin - 0


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக வழங்கப்படும் வீடமைப்புக்கான கடனுதவி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு முறையாக வழங்கப்படாமல் உள்ளமை பெரும் அநீதியாகும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஏ.புஹாது, பொதுச் செயலாளர் கே.நடராசா ஆகியோர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிகளை பரவலாக்கும் வகையில் கல்முனையில் மாவட்ட அலுவலகம் ஒன்று இயங்கி வருகின்றது. இவ் அலுவலகத்தில் வீடமைப்புக்கான கடனுதவியைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் கடனுதவியைப் பெற பல மாதங்களாக எதிர்பார்த்திருக்கின்றனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பெரும் பான்மையின சகோதரர்கள் வாழும் தமண, உகண, அம்பாறை பாணம, லவுகல மற்றும் மகோயா போன்ற பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் இத்தகைய வீடமைப்பு கடனுதவியை இலகுவாகவும் விரைவாகவும் பெறும் நிலை உள்ளது.

கல்முனையில் சகல அதிகாரங்களையும் கொண்ட மாவட்ட அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ள போதிலும் இவ் அலுவலகம் வினைத்திறனுடன் சேவையாற்றக் கூடிய அளவுக்கு கடனுதவி அளிக்க கூடியதான நிதியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்காமை தமிழ் பேசும் மக்களுக்குச் செய்யும் அநீதியாகும்.

வீடமைப்பு கடனுதவியை பெறும் நோக்கில் சாதாரண பொது மகனொருவர் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாவை பெறுவதற்கும், அரச ஊழியர் ஒருவர் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பெறுவதற்கும் முறையாக விண்ணப்பித்த கோவைகள் கல்முனை அலுவலகத்தில் தேங்கி கிடக்கின்றது. ஆனால் அம்பாறை அலுவலகத்தில் இந்நிலை எதிர்மறையாகவுள்ளது.

ஆகவே யுத்தத்தினாலும் சுனாமி மற்றும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட கல்முனை கரையோர பிரதேச தமிழ்-முஸ்லிம் மக்கள் விரைவாக வீடமைப்பு கடனுதவியை பெற ஆவன செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments