Latest News

July 24, 2013

மகிந்தவிடம் நியாயம் கேட்க முயன்றதால் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பு நிறுத்தம்
by admin - 0

பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக, நீதியான விசாரணைகள் நடத்தப்படாதது குறித்து, சிறிலங்கா அதிபரிடம் நியாயம் கேட்கப் போவதாக கூறியதால், பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான, மகிந்த ராஜபக்சவின் சந்திப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
“ஒரு நாட்டின் அரச தலைமைக்குக் கீழ் உள்ள எந்தவொரு குழுவையும், சிறிலங்கா அதிபர் சந்திப்பது சலுகை அடிப்படையிலே தான் என்ற இராஜதந்திர நெறிமுறையை மேற்குநாடுகளால் சிந்திக்க முடியாதுள்ளது.
அரசதலைவருடனான சந்திப்பின் போது எழுப்பவுள்ள பிரச்சினைகள் குறித்து, சந்திப்புக்கு முன்னதாகவே ஊடகங்களிடம் கருத்து வெளியிடுவது முற்றிலும் பொருத்தமற்றது.
குறித்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்தக் கொலையை சிறிலங்கா அரசாங்கம் கண்டிக்கிறது.
குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டன்சுக், சிறிலங்கா அதிபரை சந்திக்கும்போது, தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலைக்கு நீதி வழங்கப்படாதுள்ளது குறித்து நியாயம் கேட்கப் போவதாக பிரித்தானிய நாளேடு ஒன்றுக்கு செவ்வி அளித்திருந்தார்.
இது சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியதையடுத்தே பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பு நிறுத்தம் செய்ப்பட்டுள்ளது.
பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலையுடன் தொடர்புடைய சிறிலங்காவின் ஆளும்கட்சிப் பிரமுகர்களை, சிறிலங்கா அரசாங்கம் பாதுகாத்து வருவதாக பிரித்தானியா விசனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments