வடமாகாணசபைக்கான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையேயும் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளுக்கிடையிலும் ஏற்பட்டிருந்த சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.
வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிக்கவேண்டுமென்று ஒரு தரப்பினரும், கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை நியமிக்கவேண்டுமென்று மற்றொருதரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாவை சேனாதிராஜா எம்.பி. யை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்குமாறு அகில இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட கிளை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து திருமலை மாவட்ட கிளையும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இவ்வாறான நிலையில் கடந்த 11 ஆம் திகதி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழுக்கூட்டம் இடம் பெற்றது. இதில் நீதியரசர் விக்னேஸ்வரனையே முதலமைச்சராக நியமிப்பது சிறந்தது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வாதிட்டிருந்தார். இதற்கு எதிராக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சில பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதனால் பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவொன்று எடுக்கப்படாது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் 12 ஆம் திகதி மீண்டும் ஒருங்கிணைப்புக்குழுகூட்டம் கூடியபோதும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மீண்டும் 13 ஆம் திகதி ஒருங்கிணைப்புக்குழு கூடுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அந்தக்கூட்டம் இடம் பெறவில்லை.
மீண்டும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஒருங்கிணைப்புக்குழு கூடியபோதே முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பதற்கு ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலமைச்சர் வேட்பாளர் நியமன விடயத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களிடையே முரண்பாடான நிலைமை காணப்பட்ட போதிலும், இறுதியில் அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாக ஏகமனதாக தீர்மானத்திற்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் செயலாளரும், எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா, கட்சியின் ஒற்றுமை கருதியும், தலைவருக்கும் செயலாளருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன். கட்சியின் ஒற்றுமையே முக்கியமானதாகும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதனைவிட கூட்டுக்கட்சிகளின் தலைவர்களும் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு கோரிவருகின்றனர். ஆனாலும், கட்சியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பை மேற்கொள்கின்றே என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய விட்டுக்கொடுப்பின் மூலம் தனது அரசியல் அனுபவ முதிர்ச்சியையும் தனது பெருந்தன்மையையும் மாவை சேனாதிராஜா எம்.பி. வெளிக்காட்டியுள்ளார். 40 வருடகால அரசியல் அனுபவம் கொண்ட தலைவரான மாவையின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும்.
கடந்த பொதுத்தேர்தல் உட்பட பல தேர்தல்களில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கே வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பே தமது அரசியல் தலைமையாகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது பிளவுபடாது ஒற்றுமையாக ஒருமித்து செயற்படவேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தியாக்கும் வகையில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான தெரிவு இடம் பெற்றுள்ளமை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
வடமாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளர் நியமனம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பல கிளைகள் மாவை சேனாதிராஜா எம்.பி.யை ஆதரித்திருந்தன. ஆனால் கட்சியின் தலைமை முடிவொன்றுக்கு வந்த போது அந்த தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியது கிளையினரின் கடமையாகும். இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் குழப்பங்களை ஏற்படுத்துவதோ அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதோ முறையற்ற செயற்பாடாகும்.
பெரும் விட்டுக்கொடுப்பினை மேற்கொண்ட கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தனது அனுபவ முதிர்ச்சியை வெளிக்காட்டியிருக்கிறார். அத்துடன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு வாழ்த்துக்களையும் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் முரண்பட்டிருந்த மாவை சேனாதிராஜா எம்.பி.யே தனது நிலையை மாற்றிக்கொண்டு தனது பெருந்தன்மையை வெளிக்காட்டியுள்ள நிலையில் இந்த விடயத்தில் தொடர்ந்தும் முரண்பாடுகளை ஏற்படுத்த சில தனிப்பட்ட நபர்களும் சில ஊடகங்களும் முற்படுகின்றமை ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல. எனவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தமது முயற்சிகள் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன்களுக்கு பாதகமாக அமைந்து விடும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
வடமாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். எனவே இந்த முடிவுக்கு இணங்க அந்தக்கட்சிகளின் உறுப்பினர்களும் செயற்படுவது இன்றியமையாததாகும். முதலமைச்சர் வேட்பாளர் தெரிவை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனை களமிறக்க முடிவு செய்துள்ளோம். எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு வடபகுதி மக்கள் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி. விக்னேஸ்வரனும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று சூளுரைத்துள்ளார். இதனைவிட வடக்கில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், இராணுவ அதிகாரி ஒருவர் வடமாகாணசபையின் ஆளுநராக பதவி வகிப்பது தவறான விடயம் என்றும் எனவே உடனடியாக வடமாகாண ஆளுநர் பதவியிலிருந்து குறித்த இராணுவ அதிகாரியை பதவி விலக்க வேண்டுமெனவும் கோரியிருக்கின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் இந்தக்கோரிக்கையினை முதன்முதலில் முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொத்தத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் காணப்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டமைப்பு சிந்திப்பது சிறந்தது
No comments
Post a Comment