இவ்வாறு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும், மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான எஸ். சதாசிவம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவ் அறிக்கையில் புத்தகாயா என்ற பெளத்த மதத்தாபனம் தாக்கப்பட்டமை கண்டிக்கப்படவேண்டியதொன்றேயாகும். அதேநிலையில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி இந்து மதத்தின் தெய்வமான பூமாரி அம்பிகை ஆலயத்தை கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலிருந்து அகற்றியமை குறித்தும், இம்மலையக தமிழ் தலைமைகள் கண்டனக் குரல்களை எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவ்வேளையில் மலையக தமிழ் தலைமைகள் அனைத்துமே வாய் மூடி மெளனிகளாக இருந்தனர். இதனையிட்டு, மலையக தமிழ் மக்கள் பெரும் கவலையை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அம்மக்கள் இத்தகைய தலைமைகளை சபித்த நிலையிலுள்ளனர்.
இந்து மக்களின் போற்றக்கூடிய பெண் தெய்வமே பூமாரி அம்பிகையாகும். அரச மேலிடத்தின் உத்தரவிற்கமைய, பூமாரி அம்பிகையின் சிலைகள் உடன் அகற்றப்பட்டது. இச்செயற்பாடானது, இந்து மக்கள் ஒவ்வொருவரினதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இதற்காக குரல் கொடுக்க முடியாத மலையக தமிழ் தலைமைகள் எங்கோ இருக்கும் புத்தகாயா தாக்கப்பட்டமைக்கு கண்டனக் குரல்களை எழுப்புகின்றன. இத்தகைய ரீதியில் இத்தலைமைகள் நீலிக்கண்ணீர் வடிப்பது, மலையக தமிழ் மக்களை மேலும் வேதனைப்பட வைத்துள்ளது.
புத்த சமயத் துறவிகள், இலங்கை ஒரு பெளத்தநாடு, இந்த நாடு பெளத்த மக்களுக்குரியது. ஏனையவர்களுக்கு இந்நாடு உரித்தானதல்ல. அவர்கள் எதற்காக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டார்களோ, அவ்வேலையை மட்டும் அவர்கள் செய்துவிட்டு போகட்டுமென்று இந்நாட்டு தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை மனம் நோக வைத்துள்ளனர். இவ்விடயங்களை எமது மலையகத் தலைமைகள் உணராமலிருப்பது ஏன்?
அரசுக்கு வக்காளத்து வாங்கும் வகையிலேயே மலையக தமிழ் தலைமைகள் புத்தகாயா தாக்குதலுக்கு குரல் கொடுத்து வருகின்றமை வேதனைக்குரியதாகவிருக்கின்றது. அகற்றப்பட்ட பூமாரி அம்பிகையின் ஆலயம் தொடர்பாக இத்தலைமைகள் குரல் கொடுத்தால் பதவிகள் பறிபோய் விடும். அனுபவிக்கும் வரப்பிரசாதங்கள் இல்லாமல் போய்விடுமென்று அச்சமேயென்று மலையகத் தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment