வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமன விடயத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கு இடையேயும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஐந்து கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனக் குழு கூடியது. இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கிணங்க யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். ஏனைய 18 வேட்பாளர்களில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஏழு இடங்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கு நான்கு இடங்களும் ரெலோவுக்கு மூன்று இடங்களும் புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலா இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு மூன்று இடங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இரண்டு இடங்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும் புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலா ஒவ்வொரு இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ, தமிழரசுக் கட்சி , புளொட் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மன்னாரில் ரெலோவுக்கு மூன்று இடங்களும் தமிழரசுக் கட்சி , ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும் புளொட்டுக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளன.
வேட்பாளர் ஒதுக்கீடு விடயத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த ஐந்து கட்சிகளும் தமது வேட்பாளர்களை தெரிவு செய்யும் விடயத்தில் அக்கறை காட்டிவருகின்றன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.வி.கே. சிவஞானம், பாசையூரைச் சேர்ந்த இ. ஆனோல்ட் , புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி, வடமராட்சியை சேர்ந்த திருமதி சிவயோகம் , தென்மராட்சியை சேர்ந்த சட்lத்தரணி சயந்தன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களது பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிகின்றது.
No comments
Post a Comment