Latest News

July 26, 2013

புதிய இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா, மனோ கணேசன் சந்திப்பு
by admin - 0

இந்தியாவின் புதிய தூதுவர் வை.கே.சின்ஹா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று (26) நண்பகல் கொழும்பு இந்திய தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,
இந்திய அரசாங்கத்தின் இலங்கை பற்றிய கொள்கைகள் பற்றியும், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும், தேசிய இனப்பிரச்சினை பற்றிய இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றியும் எமது கட்சியின் நிலைபாடுகளை புதிய இந்திய தூதுவருக்கு நான் எடுத்து கூறினேன்.
இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கை இன்று தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதில் முடிந்துள்ளது. தனது நாட்டின் தென் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இந்திய அரசு, இலங்கை அரசுக்கு கடந்த காலங்களில் பல விட்டுகொடுப்புகளை செய்துள்ளது. இவை பற்றி எம்மால் முழுமையாக மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கையில் தனக்கு சாதகமான அம்சங்களை மாத்திரம் இலங்கை அரசு பயன்படுத்திக்கொண்டுள்ளது.
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை மலையக மக்களை பலவீனப்படுத்தவும், இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு அளித்த உதவிகள் மூலம் பெற்ற வெற்றியை முழு நாட்டையும் சிங்கள பௌத்த மயமாக்கவும் இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது.
எனினும் இன்று இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரே ஒரு அதிகாரப்பரவலாக்கல் அம்சமான 13ம் திருத்தம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் புரிந்து கொள்கின்றோம். எனவேதான் இலங்கை அரசு 13ம் திருத்தத்தையும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் இல்லாது ஒழிக்க முயல்கின்றது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் தலைமைகளுடன் கலந்தாலோசித்து இந்தியா, தனது இலங்கை பற்றிய கொள்கைகளை வகுக்க வேண்டும். இன்று வட இலங்கையில் போரின் பின் மீளக்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் நிலைமை ஒரு எரியும் பிரச்சினையாக இருக்கின்றது. அதேவேளை இலங்கை மக்கள் ஜனத்தொகையில் மிகவும் பின்தங்கிய பிரிவாக மலையக தோட்ட தொழிலாளர் சமூகம் இருகின்றது.
வடக்கில் மீளக்குடியேற்றம் திருப்திகரமானதாக இருப்பதாகவும், மலையகத்தில் தொழிலாள மக்கள் இன்று வசதியாக வாழ்வதாகவும் சில தரப்பினர் புள்ளி விபரங்களை காட்ட முயல்வது பிழையானது ஆகும். இந்த நாட்டின் வறுமை விகிதம் சுமார் 12% மாக இருக்கும் போது, மலையகத்தில் அது 30% மாக இருக்கின்றது. சிசு மரண விகிதமும் மலையகத்தில் மிக அதிகமாக நிலவுகின்றது. இதே நிலைமையே வன்னியிலும் இன்று நிலவுகின்றது. எனவே இந்த இரண்டு பின் தங்கிய பிரிவினரையும் இந்திய அரசு சரிசமமாக கருதி கவனத்தில் எடுத்துகொண்டு கொள்கை வகுக்க வேண்டும்.
இலங்கையில் இன்று தமிழர் ஜனத்தொகை சுமார் 31 இலட்சம். இதில் இலங்கை தமிழர் சுமார் 22 இலட்சம் எனவும், இந்திய தமிழர் சுமார் எட்டு இலட்சம் எனவும் அரச புள்ளிவிபர திணைக்களம் கூறுகின்றது. இந்த விபரம் தவறானது. தென்னிலங்கை நகரங்களில் வாழும் இந்திய தமிழர்கள் தங்களை, இலங்கை தமிழர்கள் என கணக்கெடுப்பின் போது அடையாளம் காட்டி கொண்டுள்ளனர்.
உண்மையில், இன்று இந்நாட்டில் வாழும் இலங்கை தமிழர் என்றும், இந்திய தமிழர் என்றும் சொல்லப்படுபவர்களின் ஜனத்தொகைகல் சரிசமனாகும். ஒரு காலத்தில் இலங்கை முஸ்லிம், இந்திய முஸ்லிம் என இரண்டு பிரிவினராக வாழ்ந்த முஸ்லிம் மக்களை, முஸ்லிம் தலைவர்கள் ஒரே முஸ்லிம் அடையாளத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதுபோல், இன்று இந்நாட்டில் வாழும் அனைத்து தமிழர்களையும், தமிழர் என்ற ஒரே பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது நமது கட்சியின் கொள்கை. இதற்கு இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் தலைமைகள் மத்தியிலும் கலந்துரையாடல் நடைபெறவேண்டும். இதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நமது கருத்துகளை கேட்டு தெரிந்துகொண்ட இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய அரசின் இன்றைய நிலைப்பாடுகள் பற்றியும், எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் விளக்கி கூறினார்.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments